திருமணத்தில் நடந்தது என்ன?

மாலை 7 மணி. போயஸ் கார்டனில் ரஜினியின் புது வீட்டுக்குப் போயிருந்தபோது, வீட்டில் அவர் மனைவி லதா இல்லை. தாஜ் ஹோட்டலில் நடக்கவிருந்த திருமண வரவேற்புக்கு, தன் கல்லூரித் தோழிகளை அழைக்கச் சென்றிருந்தார். ரஜினி, மாடியில் குளித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

சற்று நேரத்தில் இன்ட்டிமேட்டின் நறுமணம் சுகமாகக் காற்றில் பரவி வந்தது. ரஜினி இறங்கி வந்தார்.

‘‘வாங்க... போகலாம்!” என்றபடியே விறுவிறுவென காரில் ஏறினார். வெள்ளை நிற ஃபியட் TMU 5004. சினிமாவில் போவது மாதிரி ஒரே மூச்சில் ரிவர்ஸில் போனார். அலட்சியமாக ஸ்டீயரிங்கை உடைத்தார். மௌபரீஸ் ரோடு சிக்னலின் சிவப்பு விளக்கு, பிரேக் போட்டு நிற்கவைத்தது.

‘‘ ‘ஐ வாஸ் எ கண்டக்டர்’னு நான் சொல்லிக் கிறதே இல்லை... ‘ஐ யம் எ கண்டக்டர்’னுதான் இன்னிக்கும் நினைச்சுக்கிறேன்” என்றார். சிக்னலில் பச்சை விளக்கு.

‘‘இப்போ எனக்கு சொத்து, சுகம், வீடு, வாசல்னு எல்லாம் வந்து சேர்ந்திருக்கு. ஆனா, இந்த மயக்கத்திலே நான் பாஸ்ட்டை மறந்துட நினைக்கலே.  மார்க்கெட் இருக்கிறவரைக்கும்தான் மரியாதைனு எனக்குத் தெரியும். எந்த நேரத்திலேயும் பழைய நிலைமைக்கே போய்விடுவோம்கிறதும் எனக்குப் புரியாம இல்லே.”

மெரினாவில் காந்தி சிலை அருகில் இடது பக்கம் திரும்பி, கடற்கரைச் சாலையில் விரைகிறது 5004. ‘கர்ஜனை’ படத்துக்காகப் பொருட்காட்சி சாலையில் ரஜினிக்கு அன்று படப்பிடிப்பு.
‘‘ராத்திரி நேரத்திலே ஒன்பது மணிக்கு மேல் ஷூட்டிங் இருந்தா, முன்னே மாதிரி கவலையில்லாம வொர்க் பண்ண முடியறதில்லை. `வீட்ல எனக்காக ஒருத்தி காத்துட்டிருப்பா’ங்கிற நினைப்பு, மனசை உறுத்திட்டே இருக்கு!” என்று உரக்கச் சிரித்தார் ரஜினி.

‘`அதுக்குன்னு ஆறு மணிக்கு மேலே கால்ஷீட் தரமாட்டேன்னு கண்டிஷன் போடுறது இல்லே. முந்தாநாள்கூட வொர்க் முடிஞ்சு நான் வீட்டுக்குப் போறப்போ, விடியற்காலை மூணு மணி ஆயிடுச்சு. லதா இதுக்கு அட்ஜெஸ்ட் பண்ணிக்குவாங்கனு எனக்குத் தெரியும்!” - பொருட்காட்சி சாலை வாசலில் காரை நிறுத்தி, கீழே இறங்கி ரஜினி ஸ்டைலில் உள்ளே விரைந்தார்.

இரண்டு நிமிடங்களில் ரசிகர் கூட்டம் அரை வட்டமாக வேலி போட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்க, சுறுசுறுப்பாக மேக்கப் ஆரம்பமாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்