அழகிய அசுரா... அனிதா!

பரிசல் கிருஷ்ணா, படம்: மீ.நிவேதன்

ரு படம், ஒரு பாடல், ஒரு கண்டுபிடிப்பு, ஒரு சேவை... என திடீர் சாதனை செய்துவிட்டு, ஊர் முழுக்கப் பரபரப்பைக் கிளப்புவார்கள் சிலர். அதன் பிறகு அவங்க என்ன பண்றாங்க, எங்க இருக்காங்கனு கூகுள்ல தேடினாலும் ஒரு தகவலும் கிடைக்காது. அப்படிப்பட்ட `ஒன் டைம் வொண்டர்’அனிதா.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் ரொமான்ட்டிக் பாடல், `அழகிய அசுரா... அழகிய அசுரா’வைப் பாடி அசத்தியவர்தான் அனிதா. அப்படி ஒரு சூப்பர் ஹிட் பாடல் பாடிய அனிதா, சில ஆண்டுகள் கழித்து `குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கினார். அதன் பிறகு எங்கே போனார் இந்த மல்ட்டி டேலன்ட்டட் கேர்ள்?

`‘ரெண்டு குழந்தைகள், குடும்பம்னு சென்னையிலதான் இருக்கேன்’’ என்கிறார் அனிதா.

``என்ன ஆச்சு, ஏன் சத்தத்தையே காணோம்?’’

‘‘ `அழகிய அசுரா...’ பாடலே எனக்கு சர்ப்ரைஸ்தான். என் ஆல்பத்தைக் கேட்டுட்டு இமான் அந்தப் பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார். ஆனால், பாடிட்டு ஃபைனல் அவுட்புட் கேட்டதும் `என்னடா இது... என் குரலே இல்லையே. முதல் பாட்டே இப்படி ஆகிடுச்சே?’னு தோணுச்சு. கொஞ்ச நாள்ல `பாட்டு சூப்பர் ஹிட்’னு சொன்னாங்க. என்னால நம்பவே முடியலை.”

‘அதுக்கு அப்புறம் ஏன் தொடர்ந்து பாடவில்லை?’’

‘`கிட்டத்தட்ட 25-30 பாடல்களுக்கு மேல பாடியிருக்கேன். ஆனா, இந்த ஒரு பாட்டுதான் எல்லாருக்கும் தெரியும். ஏன்னா, மத்ததெல்லாமே அயிட்டம் சாங் டைப். வரிகள் எல்லாம் ‘போதும்டா சாமி’னு தோணவைக்கும். அந்த ஒரு பாட்டு ஹிட் ஆச்சுன்னா, அதே ஃபார்முலாவை ஃபாலோ பண்ணச் சொல்வாங்க. `ஒரே ஒரு மெலடி சாங் கிடைக்காதா?’னு ஏங்கியிருக்கேன்.

இன்னோர் எரிச்சலான விஷயம்... ஒரு பாட்டுக்குக் காத்திருக்கிற நேரம். காலையில ஆறு மணிக்கு வரச் சொல்வாங்க. போனா ரெண்டு, மூணு மணி நேரம் காத்திருக்கணும்.அப்புறம், `ஈவ்னிங் வாங்க’னு சொல்வாங்க. இப்படி ஒரு பாடல் வாய்ப்புக்காக பொண்ணுங்க படுகிற கஷ்டங்களைப் பார்த்தா ‘என்ன சிஸ்டம் இது?’னு தோணும்.’’

``டைரக்‌ஷன்?’’

``லாஸ் ஏஞ்சலஸ்ல படிக்கிறப்ப ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்கின் `ட்ரீம் வொர்க்ஸ்’ல இன்டர்ன்ஷிப் பண்ணேன். 

படிப்பு முடிச்சு இங்கே வந்து `Knock Knock I’m looking to Marry’னு ஒரு படம் இங்கிலீஷ்ல டைரக்ட் பண்ணேன். நடிச்சவங்க எல்லாரும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அதுக்கு அப்புறம் `கலீவர்ஸ் டிராவல்ஸ்’னு அனிமேட்டட் படம். அப்புறம் அப்பா - மகள் ஸ்க்ரிப்ட் ஒண்ணு இருந்தது. பெரிய நடிகர், நடிகைகள்கிட்ட கதை சொல்லிட்டுச் சுத்தினேன். ஆனா,  சினி ஃபீல்டுல, `பெண் க்ரியேட்டர்ஸ் படம் கமர்ஷியலா இருக்காது’னு ஓர் எண்ணம் இருக்கு. எனக்கு இன்னும் ஒரு படி மேலே போய், `நீங்க லாஸ் ஏஞ்சலஸ்ல படிச்சதால உங்களுக்கு நேட்டிவிட்டி வராது’னு விமர்சனங்கள் வேறு. ஒரு கட்டத்துல வெறுத்துப்போய் புதுமுகங்களுக்காக ஒரு ஸ்க்ரிப்ட் எழுதினேன். அதுதான் `குளிர் 100 டிகிரி’. படத்துக்கு நல்ல விமர்சனம் வந்தது.

என் படங்கள்ல எல்லாத்தையும் நானே ஹேண்டில் பண்ணணும். என் ஸ்டைல்ல முழுசா வரணும். அதனால் அப்படியே பிரேக் விட்டுட்டேன். இப்ப மறுபடி ஒரு மியூஸிக் ஆல்பம் பண்ணலாம்னு இருக்கேன். அடுத்து என் டைரக்‌ஷன்ல ஒரு படமும் நீங்க எதிர்பார்க்கலாம்.’’

வாங்க... வாங்க!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்