“வாழ்க்கை செம ஜாலி!”

இரா.கலைச்செல்வன் - படம்: ஜி.வெங்கட்ராம்

“தமிழ்நாட்டுலதான் பிறந்து வளர்ந்தேன். இங்கேதான் கல்யாணமும் முடிச்சிருக்கேன். ஆனாலும், இன்னும் தமிழ் சரியாப் பேச வரலை. தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்..!’’ மழலைத் தமிழ் தவழப் பேசுகிறார் தீபிகா பல்லிகல் கார்த்திக். சமீபத்தில் ஆஸ்திரேலியா ஓப்பன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் தட்டி வந்திருக்கிறார் தீபிகா.

‘‘ஸ்குவாஷ் ரேங்கிங்கில் டாப் 10-னுக்குள் இடம் பிடித்த முதல் இந்தியர் நீங்கள். இப்போது டாப் 20-க்குள் வந்துவிட்டீர்களே?’’

“உலக அளவில் முதல் 20 இடங்களுக்குள் இருப்பதே கஷ்டமான விஷயம். நான் இப்போ 19-வது இடத்தில் இருக்கேன். ஜோஷ்னா 13-வது இடத்தில் இருக்காங்க. டாப் 20-க்குள் இந்திய வீராங்கனைகள் இரண்டு பேர் இருப்பதே பெருமையான விஷயம்தான். அதேபோல விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறிதான் வரும். ரிசல்ட் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. வெற்றி-தோல்வி சகஜம். `ரேங்கிங்கில் பின்னாடி போயிட்டோமே!’னு கவலைப்பட ஆரம்பிச்சா, ஜெயிக்க முடியாது. என்னுடைய கவனம் முழுக்க விளையாட்டில் தான். வெற்றிகள் தொடரும்.’’

``2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் இடம்பிடிக்க வேண்டும் என, பெரிய அளவில் பிரசாரம் மேற்கொண்டீர்கள். ஆனால், ஸ்குவாஷ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதே?’’

“ஒலிம்பிக்கில், ஸ்குவாஷை ஏன் தொடர்ந்து புறக்கணிக்கிறாங்கனு தெரியலை. ஒலிம்பிக்கில் பங்கேற்க எல்லா தகுதிகள் இருந்தும் இதை ஒலிம்பிக் விளையாட்டை அங்கீகரிக்க மறுப்பது மோசமான ஒரு விஷயம். இருந்தும் நாங்க தொடர்ந்து முயற்சிப்போம். ஸ்குவாஷ், ஒலிம்பிக் விளையாட்டா நிச்சயம் மாறும்.”

``பொதுவாக ஒரே விளையாட்டில் இருப்பவர்கள் எதிரிகளாக இருக்க வாய்ப்பு அதிகம். ஆனால், ஜோஷ்னாவுடன் நீங்கள் தொடர்ந்து நல்ல நட்பில் இருக்கிறீர்கள்... எப்படிச் சாத்தியம்?’’


“எனக்கும் ஜோஷ்னாவுக்கும் ஒரே குறிக்கோள், இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவிப்பதுதான். சிங்கிள்ஸ் விளையாட்டைப் பொறுத்தவரை, ஜோஷ்னா எனக்கு எதிரிதான். அவரை நான் வெல்ல வேண்டும். ஆனால், டபுள்ஸில் அவர் என் பார்ட்னர். நாங்க ரெண்டு பேருமே புரொஃபஷனையும் பெர்சனல் வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்க மாட்டோம். ஸ்குவாஷ் கிரவுண்டைத் தாண்டி வெளியே வந்துட்டா, விளையாட்டை மறந்துடுவோம்.”

``உங்களின் அடுத்த டார்கெட்?’’

“அடுத்த ரெண்டு வருஷத்துல காமன்வெல்த் போட்டிகள் வரப்போகுது. அதுல ஸ்குவாஷ் விளையாட்டின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியா வெற்றி பெறணும். இரட்டையர் தங்கப்பதக்கம், என்கிட்டயும் ஜோஷ்னாகிட்டயும்தான் இருக்கு. அதைத் தக்க வைக்கணும். வெற்றி நிச்சயம்.”

‘‘ஏற்கெனவே உங்களை ஹீரோயினா நடிக்க கூப்பிட்டாங்க. இப்போ நிச்சயம் தீபிகா பல்லிக்கல் `பயோ பிக்’ ஆஃபர்ஸ் வந்திருக்குமே?’’

“ ஹா... ஹா... ஹா... (விடாமல் சிரிக்கிறார்). என் பயோ பிக்ல இன்ட்ரஸ்ட்டிங்கா ஒண்ணுமே இருக்காதே! என் வயசு என்ன தெரியுமா? ஜஸ்ட் 24. பயோ பிக் எல்லாம் எடுக்கணும்னா, அதுக்கு நிறைய வயசாகி இருக்கணும். இன்னும் 20 வருஷம் கழிச்சு இதைப் பற்றி யோசிக்கலாம்.’’

``செம பிஸியான ஸ்போர்ட்ஸ் குடும்பம் உங்களுடையது. எப்படி இருக்கிறார் கணவர் தினேஷ் கார்த்திக்?’’

“டாக்டர்ஸ், ஆக்டர்ஸ்னு ஒரே ஃபீல்டுல இருக்கிற ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரிதான் எங்களுடையதும். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ரொம்ப ஈஸியா இருக்கு. அன்பு நிறைய இருக்கு. ஆனா, ரெண்டு பேருமே பிஸி. நேரம் கிடைக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம். மேட்ச் இல்லாமல் எப்போ ஃப்ரீயானாலும் உடனே ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணி பறந்துடுவோம். வாழ்க்கை ரொம்ப ஜாலியா, அழகாப் போயிட்டிருக்கு!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்