1 இந்தியப் பெண்ணும்... 2 காதலர்களும்...

பு.விவேக் ஆனந்த்

முன்முதலாக, ஒரு பெண்ணை மையமாக வைத்து `ஒன் இந்தியன் கேர்ள்’ என்றொரு நாவலை எழுதிவருகிறேன். அக்டோபரில் புத்தகம் ரிலீஸ்’ என, கடந்த ஆகஸ்ட்டில் சேத்தன் பகத் ட்விட்டரில் அறிவித்ததுமே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

`டூ ஸ்டேட்ஸ்’-க்குப் பிறகு, சேத்தன் பகத் எழுதிய நாவல்கள் எதுவும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனாலேயே பழைய நாவல்களின் சாயல் இந்த முறை இருக்கக் கூடாது. அதே சமயம் ட்ரெண்டியாகவும் இருக்க வேண்டும் என முடிவுசெய்திருக்கிறார் சேத்தன். `குயின்’, `கி அண்ட் கா’, `பிங்க்’ என பாலிவுட்டில் பெண்களை மையப்படுத்தும் படங்களே தொடர்ந்து ஹிட். அதனாலேயே அப்படி ஒரு கதையைப் பிடித்திருக்கிறார்.

நிறைய பார்ட்டி, குடி, ஃப்ரீ செக்ஸ், கோக்குமாக்கான பெண்ணியம்... இவைதான் ‘ஒன் இந்தியன் கேர்ள்!’

ஐ.ஐ.எம்-மில் படித்த ராதிகாவுக்கு, கார்ப்பரேட் நிறுவனத்தில் பெரிய உத்தியோகம். ராதிகா, படிப்பாளி; வேலையில் திறமைசாலி; தன்னுடைய அழகு குறித்து அதிகம் கவலைப்படும் பார்ட்டி கேர்ள். இவருக்கும் ஃபேஸ்புக்கில் வேலைபார்க்கும் பிரிஜேஷுக்கும் கோவாவில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திருமணம் ஏற்பாடாகிறது.

திருமணத்தில் ராதிகாவுக்கு முழு இஷ்டம் இல்லை என்றாலும், பெற்றோருக்காக சகித்துக்கொள்கிறார். இந்தச் சமயத்தில் ராதிகாவின் முதல் காதலன் தெபு அமெரிக்காவில் இருந்து வந்து நிற்கிறான். ஃப்ளாஷ்பேக் விரிய, நான்கு வருடங்களுக்கு முன்னர் ராதிகாவின் முதல் செக்ஸ் பார்ட்னர் கம் காதலராக இருந்தவன் தெபு. இருவரும் லிவிங் டுகெதராக ஒரே அப்பார்ட்மென்டில் பல மாதங்களாக இருந்தவர்கள். இருவருக்கும் பிரச்னை உண்டாக, பிரிந்துவிடுகிறார்கள்.

`இந்தக் காதலே வேண்டாம்டா சாமி!’ என வெறுத்து, ஹாங்காங் கிளைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு பறக்கிறார் ராதிகா. அங்கே அவளது பாஸுடன் ஒரு காதல் முளைக்கிறது. அதுவும் பிரேக்அப்பில் முடிகிறது. அதன் பிறகு, பல மாதங்கள் கழித்து இணையத்தில் வரன் பார்த்து பிரிஜேஷுடன் திருமணம்.

இப்போது அந்த இரண்டு எக்ஸ்-லவ்வர்களும் கோவாவில் நடக்கும் ராதிகாவின் திருமணத்தின் இடையே வந்து ``கிளம்பு, என்னுடன் வந்துவிடு!’’ என ராதிகாவிடம் கெஞ்சுகிறார்கள். மூன்று பேரில், யாரை ராதிகா திருமணம் செய்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

பஞ்சாபி பெண், ஆடம்பரத் திருமணம், செக்ஸுக்காக மட்டுமே கேர்ள் ஃப்ரெண்டை அணுகும் ஆண்கள், கன்சர்வேட்டிவ் நாயகி குடும்பம், அணுஅணுவாக விவரிக்கும் பெட்ரூம் காட்சிகள்... என எல்லாமே சேத்தனின் முந்தைய நாவல்களின் சாயல். அதனாலேயே ஃப்ரெஷ் ஷான காட்சிகளும்கூட சலிப்பு தட்டுகின்றன. `இந்த நாவலை ஏற்கெனவே படித்து விட்டோமோ!’ என்ற உணர்வையே தருகின்றன. சேத்தன் பகத் வாசகர்களுக்கு, இந்த நாவல் பெரிய ஏமாற்றத்தைத் தரும். ஆழமான மனித உணர்வுகளே இல்லாமல் மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். `நானும் படிச்சுட்டேன்’ என்ற பெருமைக்குப் படிக்கலாம். மற்றபடி, நத்திங் ஸ்பெஷல்!

`ஒன் இந்தியன் கேர்ள்’ புத்தகத்தைப் பொறுத்தவரை கதையைவிட வியாபாரத்துக்குத் தான் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் சேத்தன். ஸ்டார் பக்ஸ் காபி, மேரியாட், ஷாங்கிரி லா ஹோட்டல், நைக் ஜிம் உடை, ட்ரையம்ப் உள்ளாடைகள் என எங்கும் எதிலும் பிராண்டட் பொருட்களால் பக்கங்களை நிரப்பியிருக்கிறார். விலை அதிகமான உள்ளாடை அணியும் போதுதான் பெண்கள் செக்ஸியாகத் தெரிகிறார்கள் என வசனங்களில்கூட விளம்பரம்... விளம்பரம்!

அவரின் முந்தைய நாவலான `ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட்’டின் படப்பிடிப்பு,   இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதைத் தொடர்ந்து `ஒன் இந்தியன் கேர்ள்’ புத்தகமும் பாலிவுட் சினிமாவாகப்போகிறது. இந்தப் புத்தகத்தை வெளியிட்டது மட்டும் அல்லாமல், எனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் இந்தக் கதையில் இருக்கின்றன என மேடையில் உணர்ச்சிவசப்பட்ட பாலிவுட் ராணி கங்கனா ரணாவத் `ஒன் இந்தியன் கேர்ளா’க திரையில் வரப்போகிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்