எங்கேயுமே வேலை... எப்போதுமே வேலை!

மருதன்

‘எதிர்காலத்தில் நம்முடைய பேரக்குழந்தைகள் வளர்ந்து பெரிதாகும் போது, ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம்தான் வேலை செய்வார்கள். அதுவும் அவர்கள் விருப்பப் பட்டால்!' -`நவீனப் பொருளாதாரத்தின் தந்தை' எனப் போற்றப்படும் ஜான் மேனார்ட் கீன்ஸ் 1930-ம் ஆண்டு 100 சதவிகித நம்பிக்கையுடன், பெருமிதம் ததும்ப இவ்வாறு அறிவித்தார். ஆனால், அப்போது பலர் கீன்ஸைக் கோபித்துக் கொண்டார்கள். ‘அநியாயம். மூன்று மணி நேரம் என்பது ரொம்ப ஜாஸ்தி. அவ்வளவு நேரத்துக்கு மனிதர்கள் என்ன செய்வார்கள்?’ இன்னும் சிலர் நிஜமாகவே கன்னத்தில் கை வைத்து வருந்தினார்கள். ‘எதிர்கால மனிதர்கள் செய்வதற்கு ஏதேனும் ஒரு வேலையாவது மீதம்  இருக்குமா? பாவம், அவர்களுக்கு எப்படித்தான் பொழுதுபோகுமோ?’

 கண்டுபிடி கண்ணா... கண்டுபிடி!

நான்கு கால் பாய்ச்சலில் அமெரிக்கா வளர்ந்துகொண்டே போவதைக் கண்டுதான் இத்தனை அலப்பறைகளும். டி.வி., ரேடியோ, வாஷிங்மெஷின், வாக்யூம் கிளீனர், அயர்ன் பாக்ஸ் என அடுத்தடுத்து வந்து விழுந்த ஆச்சர்யங் களைக் கண்டு அமெரிக்கர்கள்
திக்குமுக்காடினர். `சவரம் செய்யக் கூடவா எலெக்ட்ரிக் ரேஸர் கண்டு பிடிப்பார்கள்!' எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள்.

இத்துடன் நின்றதா? ஃபோர்டு டி மாடல் கார் ஓடத் தொடங்கியது. அடுத்தடுத்து கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. முழுக்க முழுக்க இயந்திரங்களை மட்டுமே கொண்டு இயங்கும் அசெம்பிளி லைன் தொழிற் சாலைகளைக் கண்டு அமெரிக்கர்கள் மிரண்டுபோனார்கள். தொடர்ந்து `டாமி கன்' எனப்படும் இயந்திரத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. பொய் சொன்னால் கண்டறியும் இயந்திரம், சாலையோர சிக்னல்,   முப்பரிமாணப் படம், இன்சுலின், பென்சிலின், ஜெட் இன்ஜின்  என அறிவியலும் தொழில்நுட்பமும் கற்பனைத்திறனும் கைகோத்து தொடர் புரட்சிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

கீன்ஸும் அவருடன்  சண்டையிட்டவர்களும் முன்வைத்த தர்க்கத்தில் தவறே இல்லை. இத்தனை வசதிகள் இருக்கும்போது மனிதர்கள் இனி வியர்வை சிந்தி வேலை செய்யவேண்டிய அவசியமே இல்லை அல்லவா? இருந்தும் கீன்ஸின் பேரப்பிள்ளைகளான நாம், ஏன் இன்னமும் மாய்ந்து மாய்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறோம்?

முறைப்படி வேலை!

சமீபத்திய ஆய்வு முடிகளின்படி, ஓர் அமெரிக்கர் சராசரியாக ஒரு வாரத்துக்கு 34.4 மணி நேரம் வேலை செய்கிறார். சனி, ஞாயிறு கழித்துவிட்டுப் பார்த்தால், ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 7 மணி நேரம். அதாவது கீன்ஸ் சொன்னதைவிட இரண்டு மடங்குக்கும்  கூடுதலாக அமெரிக்கர்கள் உழைக்கிறார்கள். உலக நாடுகள் வரிசையில் 16-வது இடத்தில் இருக்கிறது அமெரிக்கா. முதல் இடம் மெக்ஸிகோவுக்கு. ஒரு நாளைக்கு 9 மணி நேரம் உழைக்கிறார்கள். அதிகம் வியர்வை சிந்தும் மெக்ஸிகர்களுக்கும், ஓரளவுக்குப் பரவாயில்லை எனச் சொல்லும் அமெரிக்கர்களுக்கும் நடுவில் நாம் இருக்கிறோம். ஒரு நாளைக்கு 8.1 மணி நேரம் என்பது இந்தியாவின் அதிகாரபூர்வ வேலை நேரம்.

கவனிக்கவும், முறைப்படி அலுவலகம் சென்று டீ பிரேக், லன்ச் பிரேக், மணி அடித்ததும் வீடு என முறையாக வேலை செய்பவர்களின் பணி நேரக் கணக்கு மட்டுமே இது. கட்டுமான வேலை, காய்கறிக் கடை, தேநீர்க் கடை, தள்ளுவண்டி வியாபாரம்  என முறைப்படுத்தப்படாத மூன்றாயிரம் சொச்சத் தொழில்களில் ஈடுபடுபவர்களின் பணி நேரம் என்பதில் எந்த வரைமுறையும் இல்லை. மொத்தத்தில், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். `பொழுதே போகவில்லை!' என்று கவலைப்பட அநேகமாக இன்று ஒரு ஜீவன்கூட உலகில் இல்லை.  ஒரு தேவதையோ, டைனோசரோ திடீரென சாலையில் தோன்றினால்கூட, எரிச்சலுடன் ஹார்ன் அடித்து விரட்டிவிட்டு ஆபீஸுக்குப் பறந்து செல்பவர்களே இன்று அநேகம். இழுத்து மூச்சுவிடக்கூட பலருக்கு அவகாசம் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்