அவளும் அவளது மூன்று உலகங்களும் - கவிதை

பழநிபாரதி, சிற்பம்: ராஜ்குமார் ஸ்தபதி

வள்
மூன்று உலகங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறாள்

ஒன்று அவளுடையது
அங்கே
அவளது கனவுகள்
பாலைவனமாக விரிந்திருக்கின்றன

தாகம் எரியும் நிலத்தில்
அவள் தன்னை
முட்செடிகளை உண்டுபிழைக்கும்
ஓர் ஒட்டகமாக
நினைத்துக்கொள்கிறாள்

பாலைக்கு வெளியே
கடல்
அவளது கண்ணீராக
வியாபித்திருக்கிறது

தேடலில்
கைவிடப்பட்ட கப்பலாக
ஆழத்தில் மூழ்கிக்கிடக்கிறது
அவள் இதயம்

அவள்
அதை நினைக்கும்போதெல்லாம்
கரையில் முட்டையிட்டுத் திரும்பும்
ஆமையொன்று
அவளை வேடிக்கை பார்த்தபடி
ஊர்ந்துகொண்டிருக்கும்

இன்னோர் உலகம்
அவளுக்கும்
அவள் பேரனுக்குமானது

அங்கே
அவளது வியர்வை
மழையாகி இருந்தது

தன்னை ஆழமாகத் தோண்டி
அவனுக்காகப்
பூச்செடிகளை நட்டுவைத்திருந்தாள்
தன் இமைகளைப் பிடுங்கி
அவனைச் சுற்றி
பட்டாம்பூச்சிகளாகப் பறக்கவிட்டிருந்தாள்

தன் எலும்புகளில்
பொம்மைகள் செய்துகொடுத்தாள்

வனத்தின் வழியாக மலையேறி
வானத்திற்குப் போன
ஒரு தேவதைக் கதையில்
அவன் அம்மாவைப் பற்றி
அவனுக்கு
அடிக்கடி சொல்லியிருக்கிறாள்

மூன்றாவதாக
ஓர் உலகம்

அதன் இருள்
அவளை
அழைத்துக்கொண்டே இருக்கிறது

அவளும்
அதை நோக்கி
போய்க்கொண்டேதான் இருக்கிறாள்

திரும்பிப்  பார்க்கும்போதெல்லாம்
ஒரு கணம் நின்றுவிடுகிறாள்
பகலிலிருந்து
தப்பிக்க முடியாத
ஒரு நிழல்போல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்