புலி ஆடு புல்லுக்கட்டு - 12

டாக்டர் ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

#பரவசம்

தீபாவளி ரிலீஸ் படத்தை முதல் காட்சி பார்த்த அனுபவம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். பெரிய நடிகர்கள் படம் என்றால், அது mass hysteria தான். அதுவும் சினிமாவை தியேட்டரில் மட்டுமே பார்க்க முடிந்த அந்தக் காலம், பொற்காலம். மணிக்கணக்காக வரிசையில் நிற்பது, போலீஸ் தடியடி, பிளாக்கில் டிக்கெட்டுக்கு அலைவது (அது, அரை கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பூக்கார அம்மாவிடம்கூட கிடைக்கலாம்!) என, ஒரு பக்தனின் மனநிலையில் காத்திருந்து, ஹீரோ தோன்றும் முதல் காட்சியில் உச்சக்கட்ட டெசிபலில் ரசிகர் கூட்டம் அலறுவது, பக்தியின் முக்தி நிலை.
மூன்று நாட்களில் மொத்த பிசினஸையும் எடுக்கிற வர்த்தகச் சூழலில், தியேட்டர்கள் வெள்ளி விழா வாரம் காணும் வைபவங்கள் வாய்ப்பது இல்லை.

தமிழ்ப்பட ரசிகன், கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறான். ஆனால், அவனுக்கான களம் ரொம்பவே மாறிப்போய்விட்டது!

#அபிமானம்

இந்த ஹீரோ வொர்ஷிப் எனும் கதாநாயக வழிபாடு, தமிழ்நாட்டின் culture bound syndrome எனத் தோன்றுகிறது. நம் அளவுக்கு தேசத்தில் வேறு எங்கும் இல்லை. குறிப்பாக, சினிமா மற்றும் அரசியலில் அல்லது சினிமாவால் அரசியலில். ஷாரூக் கான் பிரதமர் ஆவது எல்லாம் நடக்காது. ஆனால், விஜயகாந்த் முதல் விருச்சககாந்த் வரை அனைவருக்கும் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பு உள்ளது.

இப்படி ஒருவரைத் தூக்கி தலையில் வைத்து ஆடுவது, அவர் மீது உள்ள அபிமானத்தில் மட்டும் அல்ல; நம் குணம் ஏதோ ஒன்று அவரிடத்தில் நமக்கு தென்படுகிறது என்பதால். இதை identification எனும் சுயதற்காப்புச் செயல்பாடு என்பர் சைக்காலஜிஸ்ட்டுகள்.

இதைப் புரிந்துதான் தியேட்டருக்கு வரும் இளம் ஆண்களை நம்பி படம் எடுக்கிறது கோலிவுட். அவர்கள் அடையாளம் காணும் அம்சங்கள்கொண்ட கதாநாயகர்கள் ஜெயிக்கிறார்கள்.

  #கனவு

வெற்றி பெறுதல், நாயக லட்சணம். லட்சியம் அடைதல் முக்கியம். அது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கடைசியில் அவன் ஜெயிக்கணும். இந்தச் சூட்சுமம்தான் உச்ச நடிகர்களை உருவாக்குகிறது.

சாமானியர்களுக்கும் இதுபோன்ற லட்சிய வேட்கை பிடிக்கும். சொந்த வாழ்வில் செய்ய முடியாததை, இந்த நிழல் நாயகர்கள் செய்யும்போது, பார்த்து திருப்தியடைந்து கொள்கிறார்கள்.

படித்தவர்கள், ‘எப்படி வெற்றி பெறுவது?’ என்று சுயஉதவி புத்தகங்களைப் படிக்கிறார்கள். ஆடியோ டேப்புகளும் விற்கின்றன. பயிற்சி வகுப்புகளிலும் கூட்டம் அலைமோதும். அதேபோல ஜெயித்தவர்களின் கதைகளை, வணிக அமைப்புகள் தொடர்ந்து பேசும். பெரிய மேடைகளில் ஜெயித்தவர்களே பேசுவார்கள். ஆனால், இவை எல்லாம் மேல்தட்டு 5 சதவிகித மக்களுக்குத்தான், 95 சதவிகிதம் அல்ல. மேல்தட்டையும் சேர்த்து 100 சதவிகிதத்தையும் கவரும் கனவு ஊடகம் சினிமா!

#நிராகரிப்பு

பெண் வேடம் தரிக்கும் ஆணை ரசிக்கிறார்கள். ஆனால், பெண் தன்மைகொண்ட ஆண் என்றால் வதைக்கிறார்கள்.

பெண் தன்மைகொண்ட அந்த ஆண் பேராசிரிய நண்பர், மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ``சிறு வயது முதல் கிண்டல், சீண்டல், தண்டனை, துன்புறுத்தல், நிராகரிப்பு எனச் சொல்லிமாளாத அளவில் அத்தனை வலிகள். யாராவது `லிஃப்ட் என்றால்’ நடுங்கும் அளவுக்கு அத்தனை அனுபவங்கள், காமத்துக்கான அழைப்புகள், முயற்சிகள்.’’

படித்து, ஆசிரியத் தொழிலில் வசதியாக இருக்கும் இவருக்கே இந்த நிலை என்றால், விளிம்பு நிலையில் உள்ள பாலியல் அடையாளத்தில் குழப்பம் உள்ளவர்களின் நிலை? பெரும்பான்மையான சமூகம் “நீ எங்களுக்கு அசௌகரியம். மரியாதையாக மாறிவிடு!” என, தொடர்ந்து சொல்லிவருகிறது. மற்ற குறைபாடுகளில் பெற்றோர் ஆதரவாவது இருக்கும். இங்கு பெற்றோர் முதல் ஆசிரியர் வரை அனைவரும் “மாறிவிடு. இல்லாவிட்டால் சேர்த்துக்கொள்ள மாட்டோம்!” என்பதுதான் செய்தி.

`` `கனிவான குரலை மாற்று, நளினமான நடையை மாற்று’ என்றார்கள். அது குள்ளமான பையனை உயரமாக மாறு என்பதுபோலத்தான்!” என்றார்.

``தூண்டுதல் இல்லாமல் தாக்கப்படுவது மிகச் சாதாரணம்’’ என்றார் அவர். ஒரு பெண் தாக்கப்பட்டாலே பெரிதும் மதிக்காத சமூகம், பெண் தன்மைகொண்ட ஆண் தாக்கப்படும்போது அக்கறைப்படுமா என்ன?

#ஒளி

பிச்சை எடுக்கவும், பாலுறவுக்கும், சினிமாவில் கேலிக்கும் மட்டும் பயன்படுகிறார்கள். வேலைக்கு ஆள் இல்லை எனக் குறைபடும் தொழிலதிபர்கள் LGBT நபர்களுக்கு திறன் வளர்ப்புச் செய்து, வேலை கொடுக்கலாம். பொருளாதார விடுதலையும் வசதியும்தான் சமூகப் பார்வைகளை மெள்ள மாற்ற உதவும்.

வடக்கில் `ராவணனை, ராமன் கொன்றதுதான் தீபாவளி’ என்கிறார்கள். `நரகாசுரனை, கிருஷ்ணன் கொன்றதுதான் தீபாவளி’ என்கிறோம் தெற்கில். தீமை இருளை நீக்கி, நன்மை ஒளி ஏற்றும் திருநாள் தீபாவளி.

அசுரர்கள், வெளியே இல்லை; நமக்குள்தான். அவர்களை நீக்க இறை ஒளி தேவை.

வாட்ஸ்அப் வாழ்த்துக்கள், எல்லா சேனல்களிலும் சினிமா நிகழ்ச்சிகள், தவணைமுறையில் ஸ்வீட்டுகள், புதுத்துணிகள், பட்டாசுகள் இவற்றுடன் இந்தத் தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்? நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு தவறான குணத்தைக் களை எடுக்க முயற்சிக்கலாம்.

நிஜமான வெளிச்சம் வாழ்க்கையில் பரவுமே!

- மற்றவை நெக்ஸ்ட் வீக்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்