படையல் - சிறுகதை

லக்‌ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: மருது

ரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒவ்வா மலையை ஒட்டியிருந்த குடிசைகளை `காலி செய்ய வேண்டும்’ என முரட்டு ஆட்கள் சிலர் சொல்லிவிட்டுப் போனார்கள். இத்தனை வருடங்களாக இல்லாமல், புதிதாக வந்த தொல்லையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியவில்லை.

வெறும் மலை... புல் பூண்டுகூட இல்லாத வறண்ட மலை. நாக்கு தள்ள ஒன்றரை மைல் மலை ஏறினால், சின்னதாக ஒரு குட்டை உண்டு. எத்தனை வெயிலிலும் நீர் வற்றாது. மலை அடிவாரத்தில் பெரிய குளம். நான்கு திசைகளிலும் பருத்த ஆலமரங்களை, காவலுக்கு நிறுத்திய கம்பீரமான குளம். அதன் மேற்கு எல்லையில் பல தசம வருடங்களுக்கு முன்பாக, வெட்ட வெளியில் ஊர்க் காவலுக்கு நின்றிருந்த அய்யனார்சாமி கோயிலுக்கு, ஒரு கூரை போட்ட பிறகு சுற்றுவட்டாரத்தில் அதுவரை இல்லாத மவுசு. கெடாவெட்டு, காதுகுத்து என கோயில் அமைப்புக்கு ஏற்றாற்போல் பலிகொடுப்பது கூடிப்போனது.

அய்யனாரும் லேசுப்பட்டவர் அல்ல. துடியான சாமி. கீழவளவில் இருந்து இடது  பக்கமாகப் பிரியும் மண் சாலையில் இருக்கும் ஆறேழு கிராமங்களுக்கு அருள் தருவது இவர்தான். நல்லது கெட்டது என எல்லாவற்றுக்கும் அய்யனாரிடம் வந்து ஒரு வாக்கு கேட்காமல், எந்த முடிவையும் யாரும் எடுப்பது இல்லை. அய்யனாருக்குப் புதிதாக இன்னொரு குதிரை வாங்கலாம் என, ஊர்க்காரர்களில் சிலர் சொன்னபோதுகூட இறுதி முடிவை அவரேதான் எடுத்தார். அவருக்குத் தெரியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என.

கோயிலை ஒட்டியவாக்கில் முதலில் குடிவந்தது பூசாரியின் குடும்பம்தான். பிற்பாடு காட்டுக் காவலுக்காக வந்துபோன காவக்காரர்களும் அங்கயே குடிசையைப் போட்டுக்கொண்டார்கள். மலையின் நாலாபக்கமும் போக்குவரத்துக்கு எளிது என்பதால், கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு மலை அடிவாரம் ஏதுவான இடமாகிப்போனது. பத்தும் இருபதுமாகச் சேர்ந்து சில மாதங்களிலேயே, இருநூற்றுக்குப் பக்கமாக குடும்பங்கள் அங்கு குடித்தனமாக வந்துசேர்ந்தனர். இன்ன சாதி, இன்ன சாமி என எந்த வேற்றுமையும் இல்லாமல், எல்லோருமே அன்னாடங்கஞ்சிக்கு உழைத்தாக வேண்டிய எளிய சனங்கள். வந்துசேர்ந்த இடத்தில் எல்லோரையும் ஒரு சொந்தமாக மாற்றியது,  அய்யனார் கோயிலும் பூசாரி மகன் கட்டையனும்தான்.

மலை அடிவாரம் ஊராக மாறி, மினி பஸ்ஸும் வந்துபோகத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பணக்காரர்கள் சிலர் இந்த இடத்தை எல்லாம் வாங்கிவிட்டதாகப் பேச்சு எழுந்தது. அத்தனை பேரும்  நகர்ந்துசெல்ல இடம் இல்லாமல், அச்சு முறிந்த வண்டியாகத்  தவித்துக்கிடந்தனர். அப்படியே போனாலும் பிழைக்க வழி? நினைத்த மாத்திரத்தில் பிடுங்கி எடுத்து, வேற்று மண்ணில் நட்டுவைத்தால், எந்தச் செடி முட்டி வளரும். `ஊருனா வெறும் ஊருதானா? மனுஷரும் மண்ணும் சாமியுமா சேர்ந்து வாழப்பழகியாச்சு அத்துட்டுப்போறதுன்னா, உசுர அறுத்து எறியறாப்ல இல்லையா?’ - மருகாத சனம் இல்லை ஊருக்குள். மலை மேல் ஊர்க்காரர்களைத் தவிர்த்து வேற்று ஆட்கள் சிலர் அவ்வப்போது வந்து போவது உண்டு.

`இந்தப் பக்கம் என்ன சோலின்னு அடிக்கடி வர்றீகண்ணே?’ என அவர்களிடம் விசாரித்தால், `மேல சமணப்படுகை இருக்குல்ல... அதைப் பத்தி படிக்க வந்துட்டுப்போறோம்’ என்பார்கள். அதும் ஏதோ சாமிதான்போல என, ஊர்க்காரர்கள் ஒன்றும் நினைத்துக்கொள்வது இல்லை. இன்று இந்த மக்களை இங்கு இருந்து துரத்தியடிக்க நோட்டீஸ் வந்தபோது, ‘மலையைக் காப்போம்’ எனப் பெருங்கூட்டமாக முதலில் வந்து நின்றது அவர்கள்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம்.

‘என்ன இருக்குன்னு இந்த மலையை ஆளாளுக்கு சுத்திவர்றாய்ங்க?’

`பொதையல் கிதையல் கிடக்குமோ?’

ஊர்க்காரர்களுக்கு ஆளுக்கு ஒரு சந்தேகம்; பேச்சு. யாரும் பொதுவில் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த வாத்தியார்மார், பத்திரிகை ஆட்கள் சத்தம் எல்லாம் ஒன்றும் எடுபட்டதாக இல்லை. முதலாளி போலீஸை ஏவ, இரவோடு  இரவாக ஊர் ஆம்பளைகள் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு அள்ளிக்கொண்டுபோனார்கள். சரிபாதி ஆட்கள் மீது கேஸும் போட்டார்கள். பாதிப்பேருக்குத் தங்களின் மீது கேஸ் இருப்பதுகூடத் தெரியாது. ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போகும்போது எல்லாம் கட்டாயம் பிரம்படி உண்டு. பேச்சுவார்த்தை எல்லாம் அப்படித்தான் நடக்கும். பிறகு பேப்பரில் கையெழுத்து வாங்கி அனுப்புவார்கள். இப்படியாக அய்யனாரைத் தவிர, அத்தனை ஆம்பளைகளும் முதுகுக்குக் கீழ் உடல் வீங்கி, வலி தாங்க மாட்டாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு வந்ததுதான் மிச்சம்.

`போறதுதான் போறோம்... ரெண்டு மாத்தைல* அய்யனார் சாமி திருவிழா இருக்குங்க. அதை முடிச்சுட்டுப் போறோம்’ என ஊர் ஆட்கள் கெஞ்சிக் கேட்டதற்கு, முதலாளிகளும் ஒப்புக்கொண்டனர்.
நாலு மைல் தாண்டி கருவக்காட்டுக்குள் எல்லோருக்கும் புதிதாகக் குடிசைபோட ஏற்பாடானபோதுதான், ஒவ்வா மலையில் கிரானைட் குவாரி வரப்போவதாகப் பேசிக்கொண்டார்கள். 

ரின் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் பொதுவான ஆள் துரை. அவன் வயது இன்னதுதான் என்பதோ, அவனுக்குப் பெயர் பாண்டித் துரை என்பதோ பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், கல்யாண வீடு, துஷ்டி வீடு எல்லாவற்றிலும் முழுமனதோடு பங்கெடுத்து ஆட்டம்போடுவான். கட்டையாக சற்று வெளுத்த மூஞ்சிக்காரனான அவனுக்கு கல்யாணம் நடந்திருக்கவில்லை. `பிழைச்சுக் கட்டும்’ என அவனைப் பொருட்படுத்தி அவனது ஐயா, பூசாரித்தனமும் சொல்லித் தந்திருக்கவில்லை. அவர் பூசை செய்யும்போது சலிக்காமல் வாசலில் நின்று மணி அடிப்பான். அவனுக்கும் கோயிலுக்கும் உறவு அவ்வளவுதான். மூளை வளர்ச்சி குறைவான ஆள். ஆனால், அசாத்தியமான சூட்டிகை. முப்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மேலூருக்குப் போவதானால்கூட நடந்தே போய் வருவான். வேறு எந்த வாகனத்திலும் அவன் ஏறி, யாரும் பார்த்தது இல்லை. வண்டியில் ஏற்றிக்கொள்ளக் கூப்பிட்டால்கூட `போலாம். ரைட்... ரைட்...’ என விசிலடித்து பாதை காட்டுவான். உருப்படியாகத் தெரிந்தது ஆட்டம் மட்டும்தான். அப்படி ஆடுவதற்காகவே தான் உயிரோடு இருப்பதாக அவனுக்கும் நினைப்பு. அவன் ஆட்டம் எல்லா தாளங்களுக்கும் பொருந்தும். சமயங்களில் மேளக்காரன், அவனது ஆட்டத்துக்குத் தகுந்தாற்போல் தாளத்தை மாற்றிக்கொள்வதும் நடக்கும். எத்தனை வேகமாக ஆடினாலும், லுங்கி அவிழாது. ஆடி முடிக்கும்போதே சோடா அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கவனித்துத் திரும்பும் கண்கள். ஆட்டத்தை நிறுத்தாமலேயே சோடாவை எடுத்து ஒரே மடக்கில் குடிப்பவன், `தொரைக்கு துட்டு குடுக்குறவங்க குடுக்கலாம்யா…’ என ஊர்க்காரர்களைப் பார்த்து,  காலால் அழகாக ஒரு வட்டமடித்து, நடுவில் வந்து நின்று கேட்பான். எதிரில் இருக்கும் ஊர்ப்பெருசுகளில் சிலர், `என்னடா கட்டையா எம்புட்டு வேணும்?’ -மேளம் ஒரு பக்கம் அந்த கேள்விக்கு சுதி கூட்டும்.

“ஆயிரத்தி ஒண்ணு, ஐந்நூத்தி ஒண்ணுன்னு நீ குடுத்து நாளைக்குக் கஞ்சிக்கு வந்து நின்னா கெழவி என்னய வெளக்கமாத்தால அடிக்கவா? ஒரு அம்பத்தொண்ண வைய்யி…’ - மூச்சு இறைக்கக் கேட்பான். பத்தும் இருபதுமாக, வேகமாக ரூபாய்த் தாள்கள் அவன் முன்னால் வந்து விழும். அவசரப்படாமல் பொறுக்கிக் கொண்டு இன்னொரு சுற்று ஆடிவிட்டு, இருட்டோடு இருட்டாக பிராந்தி வாங்க ஓடுவான். எந்த நேரம் கேட்டாலும், பச்சை பாட்டில் பிராந்தி கொடுக்க, மணி கடை இருக்கிறது.

அவன் குடிக்கச் சலிப்பது இல்லை. நாளுக்கு இவ்வளவுதான் என்ற அளவுகள் ஆகாது. காரியம் இல்லாத நாட்களில் குடிக்க ஒன்றும் கிடைக்காது என்பதால், கிடைக்கிற நாளில் மாதம் முழுவதுக்குமாகச் சேர்த்து குடித்து விடுவான்.  சோற்றுக்குக் கவலை இல்லை.

`எப்பத்தா... வவுறு பசிக்கிது. கம்மங்கஞ்சி இருந்தாலும் பரவாயில்ல. கும்பால ஊத்திக் கொண்டாங்க’ - வாசலில் நின்று உரிமையோடு அவன் கேட்டால், மறுக்கிறவர் ஒருவரும் ஊரில் இல்லை. ஊரில் கோயிலுக்கு எனத் தனியாக மாடு வளர்க்கவேண்டிய தேவையை அவன் உருவாக்கியிருக்கவில்லை.

குவாரிக்காரர்கள் கீழவளவு மெயின் ரோட்டில் இருந்து மலை வரைக்குமாக, வண்டி வண்டியாக கிராவல் அடித்து, புதிதாக மண்சாலை அமைத்தனர். ஆள் போக்குவரத்துக்கு ஏதுவாக இருந்த தற்காலிகச் சாலையில், லாரிகள் போய்வந்து பழகிப்போன இடமாகியது. அய்யனார் கோயில் இறக்கம் வரையிலும், ஆட்கள்  வாரத்தில் நான்கு நாட்கள் அளப்பதும் குறிப்பதுமாக இருந்தனர். பேன்ட் சட்டை போட்ட எல்லோருமே முதலாளிதானோ என நினைக்கும்படி, அத்தனை பேரிடமும் ஒரு துரைத்தனம் தெரிந்தது. இந்தக் குடிசை சனங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பது இல்லை.

கட்டையனுக்குச் சோடியான ஆள் செல்லாண்டி பெருசுதான். ஊர்க்கதை பேசி ஓயாத வாய். நடுச்சாமத்தில்கூட கூதலுக்குப் போர்வையைச் சுற்றிக்கொண்டு, அரைத் தூக்கத்தில் இருக்கும் யாரிடமாவது வம்பளந்து கொண்டிருப்பார். சாலை போடத் தொடங்கிய நாளில் இருந்து, குவாரி ஆட்களிடம் வாயைக் கொடுப்பது இவர்கள் இரண்டு பேரும்தான்.

``ஏய்யா... இங்க இருந்து கல்லை வெட்டி எங்க எடுத்துட்டுப் போவீக... மேலூருக்கா மதுரைக்கா?” - குவாரி ஆட்கள் சிரிப்பார்கள்.

“மதுரைக்கும் மேலூருக்கும் தூக்கிட்டுப்போக இது என்ன பிஸ்கட்டா... கிரானைட்டுய்யா. எல்லாம் கப்பல்ல வெளிநாட்டுக்குப் போகுது” -செல்லாண்டிக்கு முதலில் இது விளங்கவில்லை. விளக்கம் கேட்கலாம் என்றால், விவரம் சொல்லும் அளவுக்கு பாண்டித்துரைக்குக் கூறும் இல்லை.

“அதெப்படிய்யா பொருள் நம்மூட்டுது. திங்கிறது வெளிநாட்டுக்காரனா? எவனோ திங்கிறதுக்கா எங்களை அன்னக்காவடியா துரத்துறீங்க?” எனப் பாவமாகக் கேட்டார் செல்லாண்டி.

இன்ஜினீயர் ஒருவன், “என்ன செய்றது நோட்டு நோட்டா துட்டு குடுக்குறாய்ங்கள்ல” எனப் பக்குவமாகச் சொல்லிப் புரியவைத்தார்.

ட்டையனுக்கு லாரி டிரைவர்களோடு நல்ல பழக்கமாகிப்போக அவர்கள் வாங்கித்தரும் பிராந்தியையும் குடிக்கப் பழகினான். அவன் அரைகுறைப் பேச்சும் சத்தமும்தான், இரவுகளில் அந்த டிரைவர்களுக்கும் குவாரி ஊழியர்களுக்கும் அலாதியான பொழுதுபோக்கு.

இருந்திருந்தாற்போல் ஊர்க்காரர்களுக்கு பூசாரியின் மீதும் கட்டையனின் மீதும் வெறுப்பு. பூசாரி மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்காமல் போனாலும், சாமியைப் பழித்துக்கொள்ள முடியாது என்பதால், அரைமனதாகவே எல்லோரும் வந்து போனார்கள். யாருக்கும் பிரார்த்தனைகள் இல்லை. கோரிக்கைகள் இல்லாதபோது, சாமியின் நினைப்பு ஏது? ஆனாலும் அய்யனாரின் நிலைமை சற்றுக் கவலைக்கு உரியதாக இருந்ததால், தங்கள் பிரார்த்தனைகளை வீணாக்க ஒருவரும் விரும்பவில்லை.

`இத்தனை காலம் இந்த இடத்தில் ஒரு நிழல் தந்தவர்’ என்ற நினைப்பு மட்டும் ஆட்களைப் பிடித்துவைத்தது. பெரிய பெரிய இயந்திரங்கள் அந்த மலையை அண்டி வந்து நின்றபோது, ஆகாசத்தில் இருந்து ஆயிரம் கொம்புகளோடு எல்லா அரக்கர்களும் இறங்கிவந்து சண்டைக்குக் கூப்பிட்டதுபோல் இருந்தது ஊர்க்காரர்களுக்கு. ஆதிக்காலம் தொட்டு மனுஷனும் சாமியும் இயந்திரத்துக்குத்தான் அஞ்சி வாழ்ந்திருக் கிறார்கள். கண்களுக்கு எட்டின தூரத்துக்கு விரிந்துகிடக்கும் மலையை, தின்றுசெரிக்கும் பெரும் பசியோடு வந்துநின்ற இயந்திரங்கள், இன்னும் கூடுதலாக வந்து சேரும் முன் திருவிழாவை முடித்துவிட்டு புதிய இடத்துக்கு ஓடிவிட ஆட்கள் முடிவெடுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்