நமலி போல் வாழேல் - சிறுகதை

விநாயக முருகன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

வீட்டுக்கு வெளியே வரும்போது, தெருவில் பட்டாசுக்குப்பைகள் மிதந்துகொண்டி ருந்தன. மழையிலும் மக்கள் தீபாவளியை எப்படியோ கொண்டாடியி ருந்தார்கள். மீண்டும் ஒரு பெருமழை வரும் என்று தோன்றியது. கவலையுடன் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், ஏதோ சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த காரைத் திரும்பிப் பார்த்தேன். முதலில் பார்க்கும்போது, காருக்குக் கீழே துணிமூட்டை போலத்தான் தெரிந்தது. என்னைப் பார்த்து விருட்டென அது வெளியே வந்ததும்தான் நாய் என்று உணர்ந்தேன். பயத்தில் அனிச்சையாக எனது கால்கள் பின்னால் நகர, படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டேன். அவ்வளவு பெரிய உயரத்தை எப்படிக் குறுக்கி, அந்த காருக்கு அடியில் பந்துபோல சுருண்டுகிடந்தது? அது ஒரு டால்மேஷன் நாய். உடம் பில் இருந்த கருந்திட்டுகள் எல்லாம் உதிர்ந்திருந்தன.

வாழ்ந்துகெட்டவனின் வீட்டுச் சிதிலங்கள்போல, போனால்போகட்டும் என உடலில் ஒட்டியிருந்தன. சேறும் சகதியும் அப்பிக்கிடந்தது. தெருநாய்போல கண்களில் கோழை வழிய முன்னங்கால்களை ஊன்ற முடியாமல் நின்றிருந்தது. தோல் கிழிந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கழுத்தில் வெளுத்துப்போன சங்கிலிப்பட்டை மின்னியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பங்களாவில் இருந்து ஓடிவந்திருக்கலாம். இல்லை. ஓடிவந்திருக்காது. மனிதர்கள்தான் அற்பவிஷயங்களுக்குக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போவார்கள். வளர்ப்புப் பிராணிகள் அப்படிச் செய்யாது. விரட்டித்தான் விட்டிருப்பார்கள்.

அந்த நாய் எங்கு இருந்து வந்திருக்கும் என்று குழப்பத்துடன் தெருவைப் பார்த்தேன். தெரு அமானுஷ்யமாக இருந்தது. மழைநகரத்தில் இது ஒரு பெரிய தொல்லை. பெருநகரின் மழை, மனிதர்களை மட்டும் அல்ல வீடுகளையும் ஒருவித அமைதியில் உறையவைத்துவிடுகிறது. அந்த நாய் என்னையே பார்த்தபடி நின்றது. அதன் தோற்றம் பரிதாபமாக இருந்தாலும், அது நின்றிருந்த தொனியும், கண்களின் கூர்மையும் கம்பீரமாகவே இருந்தது. என்னிடம் இருந்து எந்தவித கருணையையும் எதிர்பார்க்கவில்லை என்று அதன் அலட்சியமான உடல்மொழி சொன்னது. பங்களாவில் வளரும் நாய்களுக்கும் தெருநாய்களுக்கும், உடல்மொழியில் மிகுந்த வித்தியாசங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். தெருநாயாக இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் பார்த்துப் பயந்து வெளியே ஓடியிருக்கும். இதுவோ என்னையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.

`இப்ப என்ன வந்துச்சு? ஒதுங்க கொஞ்சம் இடம் இருந்தது... வந்துட்டேன். உனக்குப் பிடிக்கலைன்னா, மழை நின்னதும் போயிடுறேன்’ என்று சொல்வதுபோல நின்றிருந்தது.

கார் உயரத்துக்கு இணையாக, கன்றுக்குட்டிபோல நிற்கும் அந்த நாயை விரட்ட பயமாக இருந்தது. மாடிப்படிக் கட்டுகளில் ஏறி நின்றுகொண்டு தயக்கத்துடன் `ச்சூ’ என்றேன். அது அசரவில்லை. என்னையே சலனமற்ற விழிகளுடன் பார்த்தது. அதன் திமிர் மீது எனக்குக் கோபம் வந்தாலும், மனதின் மூலையில் சிறுபரிதாபம் வெளிப்பட்டு என்னை அமைதியாக்கியது. வீட்டுக்குள் சென்று பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்து பார்த்தேன். மழை சற்று வலுவாகப் பெய்து கொண்டிருந்தது. அந்த நாய், எதிர்வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் படுத்திருந்தது. நான் நிம்மதியாக வீட்டுக்குள் சென்று எனது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்