பிரியாணி - சிறுகதை

மலையாள மூலம்: சந்தோஷ் ஏச்சிக்கானம், தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீஓவியங்கள்: அனில் கே.எஸ்

கோபால் யாதவ் செருக்களையில் இருந்து இப்போதுதான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும் மூன்று வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

பஸ் தீயாய்ப் பாய்ந்துவந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும்.

அதுவரைக்கும் நாம் கலந்தன் ஹாஜியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம்.

கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார், அந்தக் காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது எல்லாம், ஞாபகசக்தியை இழந்துவிட்டதில் சேராது. கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூட காப்பாற்றும் திராணி உண்டு என்ற ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயம் இருந்தது.

ஹாஜியாருக்கு ஆமினாவினால் பிறந்த மகள், ருக்கியா. ருக்கியாவோட மகன், ரிஸ்வான். அமெரிக்காவில் கார்டியாக் சர்ஜன். அவனுடைய கல்யாணம் போன வாரம்தான் பெங்களூரில் நடந்தது.
சொந்த ஊரில் பேரனுக்கு ஒரு வரவேற்பு நடத்தி, ஊர்க்காரர்களுக்கு நல்ல பிரியாணி போட்டுவிட வேண்டும் என்பது ஹாஜியாரின் ஆசை. அது நிறைவேறாமல்போனால், அவர் செத்ததுக்கு அப்புறமும் மனதில் அது ஒரு பேஜாராக் கிடக்கும் என உம்மா சொன்னதால், ரிஸ்வான் சம்மதித்தான். இன்னக்கி சாயங்காலம் ஆறில் இருந்து ஒன்பதுக்குள்ளதான் வரவேற்பு.

இதோ இதுதான் கலந்தன் ஹாஜியோட பெரிய வீடு. வீடு அல்ல... இது, மாளிகை.

தற்காலிகமாகப் போடப்பட்ட ஷாமியானா பந்தலைத் தாண்டி வீட்டுவாசலுக்கு வர, நாம ரொம்பத் தூரம் நடந்தாகணும். சும்மாயில்ல, நாலாயிரம் பேர் வரப்போகும் நிகழ்ச்சி இது. வெள்ளை விரிப்புகளால் மூடப்பட்ட மேஜைகளும் நாற்காலிகளும் அந்த  இடத்தை வேறு ஒன்றாக மாற்றிக் காண்பித்தன.

வெளிநாட்டில் இருந்து  வரவழைக்கப்பட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை. வரவேற்பு முடிந்து எத்தனை நாட்களானாலும், ஊர்க்காரர்கள் அந்த மேடையைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஈடேறிவிட்டது கலந்தன் ஹாஜியாருக்கு.

இவற்றைப் பற்றிய பெருமிதத்தோடு ஹாஜியாரின் நம்பிக்கைக்கு உரியவனும், ரியல் எஸ்டேட் தொழில் கூட்டாளியுமான ஹசைனார்ச்சா அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார். பரபரப்பான அவர் நடை, மாலையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியை முன்கூட்டியே பறைசாற்றுகிறது.

இடையே ஏதோ ஞாபகம் வந்தது மாதிரி ராமச்சந்திரன் நம்பருக்கு டயல் செய்கிறார்.

பொய்நாச்சி என்ற சிறு கிராமத்தின் சிறு வியாபாரிதான் அந்த ராமச்சந்திரன் பெரும்பள.

தினசரிகளில் ஆரம்பித்து ஸ்டேஷனரி, வார, மாத இதழ்கள், சர்பத், சிகரெட், வெத்தலைப்பாக்கு என, பல்பொருள் அங்காடி. அவர் கடை யதேச்சையாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்ததால், ஜனநடமாட்டத்துக்கு ஒன்றும் குறைவில்லை. அதனாலேயே எல்லோருமே அவரை நன்கு அறிந்திருந்தார்கள் வீட்டுக்குத் திரும்பும்போது கொண்டுபோகவேண்டிய டார்ச்லைட்டில் ஆரம்பித்து, மாதச்சீட்டு வசூல் பணம், கையில் எப்போதும் சில தபால் உறைகள், ரெவின்யூ ஸ்டாம்புகள் என, எங்கே போறோம், எப்போ திரும்புவோம் என்ற விவரங்களை, தன் மனைவிகளிடம்கூட சொல்லிவிட முடியாத மற்றவர்களின் ரகசியங்களைத் தனக்குள்ளேயே அழுத்தி, பணப்பரிமாற்றமும் பண்டமாற்றிகளுமாக, கிளைகளும் உபகிளைகளுமாகச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு நடமாடும் டவர்தான், ராமச்சந்திரன் பெரும்பள.

அவர் ஹசைனார்ச்சாவின் தொலைபேசி அழைப்பை ஏற்பதற்கும், சுக்ரியா பஸ் குறித்த நேரத்துக்கு  வந்துசேருவதற்கும் சரியாயிருந்தது.

முதலில் கதிரேசனும், பின்னாலேயே அந்த வங்காளிப் பையன்களும், கடைசியாக கோபால் யாதவும் இறங்கிவந்தார்கள்.

வங்காளிகள் மூவரும் ரோட்டைக் கடந்து வந்து நமஸ்கார் சொன்னதும், ராமச்சந்திரன் அவர்கள் முன் நன்றாகக் கசக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த மூன்று கஞ்சா  பொட்டலங்களை நீட்டினான்.

அதில் ஒன்றைப் பிரித்து ஒரு துகளை எடுத்து நாக்கில் வைத்து, அதன் காரத்தை உணர்ந்தவர்களாக, விரல்நுனியை அப்படியே தங்கள் ஜீன்ஸ் பேன்ட்டில் துடைத்துக் கொண்டார்கள். எதிர்பார்த்தபடி வந்த பிக்கப் வேனில் இருந்த, ஒரு தடித்த ஆள் அவர்களை அதற்குள் நுழைத்துக்கொண்டு வேகமெடுத்தான்.

சற்று நேரத்துக்குள் பிளம்பிங் வேலை மிச்சம் இருப்பதாக, நேற்றிரவு போனில் அழைத்திருந்த தோமாச்சன், கதிரேசனுக்கு முன்னால் தன் ஜீப்பை நிறுத்தி ஹாரன் அடித்தான். கதிரேசனும் அவனோடு போன பின் கோபால்யாதவ் தனித்துவிடப்பட்டான். அவன் முதுகில் கீறலாக விழுந்த இளவெயில் பெரிதாகிக்கொண்டே போனது.

இந்த இரண்டு வருடங்களாக கதிரேசனின் மச்சான் அண்ணாமலையுடன்தான் இருந்தான் கோபால் யாதவ். அண்ணாமலைக்கான வேலை குறைந்த பின் உடல் உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத கோபால் யாதவுக்கு, யாதொரு பிடிமானமும் இல்லாமல்போனது.

அப்படி விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்த ஒரு நாழிகையில்தான், கதிரேசனைப் பற்றி அவனுக்குச் சொன்னான் அண்ணாமலை.

நேரே செருக்கள நோக்கிக் கிளம்பிவிட்டான் கோபால். காஞ்சாடு பக்கமாக வரும்போது வித்யாநகர் கடந்தால் வரும் ஓரளவு நல்ல டவுன் செருக்கள. உளியத்தடுக்கையைப்போல வேலைவெட்டியின்றி ஈயடிச்சிக்கிட்டு உக்காந்திருக்க வேண்டியிருக்காது என கதிரேசனும் உறுதி அளித்தான்.

கதிரேசனின் ஒற்றையறை உள்ள வீட்டின் பின்புறம் போடப்பட்டிருக்கும் மரபெஞ்சில்தான் கோபால் யாதவ் தங்கிக்கொள்கிறான். மழைக்காலத்துக்கு முன்னர், வேறு எங்கேயாவது அறை பார்த்துப் போய்விட வேண்டும். தனி அறைக்கே இப்போது ஐயாயிரம் ரூபாய் வாடகை கேட்கிறார்கள்.

யாராவது வருவதற்குள் ஒரு மீட்டாபான் வாங்கி மெல்லலாம் என நினைத்து, அருகில் இருந்த பெட்டிக்கடையை நோக்கி நடந்தான்.

‘‘இதர் நயா ஹை தும்?’’

‘‘ஹா… பாயி.’’

வெற்றிலையின் நரம்பைக் கிள்ளியபடியே ராமச்சந்திரன் விசாரித்தான்.

‘‘கிதர் கா ஹை தும்?’’

‘‘பீஹார்.’’

‘‘ஓ… ஆப்னா லாலூஜீக்கா தேஸ்யேனா.’’

கோபால் யாதவ் சிரித்தான். அப்போது அவன் கீழ்த்தாடையில் மூன்று பற்கள் விழுந்துவிட்டிருப்பதை ராமச்சந்திரன் கவனிக்கத் தவறவில்லை.

‘‘தும் கித்னா சால் ஹோகயா இதர்?’’

‘‘சாத்’’

கோபால் யாதவ் மீட்டாபானை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான்.

‘‘அபி தும் மலையாளம் சீக்கா?’’

அவன் வெற்றிலைச் சாறை உள்ளிழுத்து விழுங்கியவாறே, ‘‘கத்துக்கிட்டேன்’’ எனத் தலையாட்டினான்.

‘‘இன்னக்கி ஒரு வேலை இருக்கு... செய்றியா?’’

‘‘செய்றேன்’’ எனப் பலமாகத் தலையாட்டினான்.

சுண்ணாம்பு தோய்ந்த விரலைத் துணியில் துடைத்துக்கொண்டே, ராமச்சந்திரன் தன் மொபைலை எடுத்தான். ஹசைனார்ச்சாவைக் கூப்பிட்டு, தனக்கு ஆள் கிடைத்துவிட்டதைச் சொன்னான். 
அவசரமா கலந்தன் ஹாஜியோட வீட்டுக்கு ஒரு வேலையாள் கிடைப்பானா எனத்தான் சுக்ரியா பஸ் வந்து நின்னப்ப, ஹசைனார்ச்சா போன்ல கேட்டிருந்தார். அரை மணி நேரத்துக்குள் ஹசைனார்ச்சாவின் ஃபார்ச்சூனர் கார், அவர்கள் முன் வந்து நின்றது. வண்டியில் இருந்து ஹசைனார்ச்சா இறங்கினார்.

எப்போதும் செய்வதுபோல, தன் ட்ரௌசர் பாக்கெட்டில் கையைவிட்டு தொடைக்கும் விதைப்பைக்கும் இடையே சொறிந்துகொண்டே ராமச்சந்திரனின் கடைக்கு வந்தார். ராமச்சந்திரன் ஏற்பாடு செய்திருப்பது, தன் முன் பவ்யமாக வணங்கிநிற்கும் இந்த நடுத்தர வயதுக்காரனைத்தான் என்பது அவருக்கு ஒரே பார்வையில் புரிந்துவிட்டது. 

‘‘எரநூத்தைம்பது ரூபா தர்றேன். ரெடியா?’’ என கோபால் யாதவின் முகத்தைக்கூடப் பார்க்காமல் ஹசைனார்ச்சா கேட்டார்.

‘‘சாப்… முன்னூத்தம்பதா குடுங்க சாப்...’’

‘‘டேய், மலையாளிக்கு 600, தமிழனுக்கு 500, பெங்காலிக்கு 350, பீஹாரிக்கு 250. இதான் இங்கத்தய ரேட்டு. நாலைஞ்சு மணி நேர வேலைதான் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாய்க்கு மேல நம்மால குடுக்க முடியாது. வர்றியா... இல்லியா? அதைச் சொல்லு’’ - ஹசைனார்ச்சா ஒரு வில்ஸ் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.

‘‘என்ன ஹசைனார்ச்சா, விருந்து ஏற்பாடு எல்லாம் பயங்கரமா நடக்குதுன்னு கேள்விப்பட்டேன். பிரியாணி செய்ய ஹைதராபாத்லேருந்தும், அபுதாபியிலேருந்தெல்லாம் ஆளுங்களைக் கூட்டியாந்திருக்கீங்கன்னு பேசிக்கிறாங்க...’’ - அருகில் நின்ற ராமச்சந்திரன் கேட்டான்.

‘‘வெறும் பிரியாணி மட்டும் இல்ல மவனே... `குழிமந்தி’கூட இருக்கு. இது இங்கே இருக்கிற லோக்கல் இக்காங்க வீட்டுக் கல்யாணத்துல போடற சவசவ பிரியாணி இல்லை. நம்பர் ஒன் பாசுமதி ரைஸ் ஒரு லோடு பஞ்சாப்லேருந்து அப்படியே எறக்கியிருக்கோம்.’’

‘‘ஒரு லோடா?’’

ராமச்சந்திரன் நம்ப முடியாமல் கேட்டான்.

‘‘நேத்து ராத்திரி லாரி வந்து நம்ம வீட்டு வாசல்ல நின்னப்போ... டேய் ராமச்சந்திரா நீ நம்ப மாட்ட, மல்லிப்பூ பூத்த வாசனை ஊரையே நெறப்பிடுச்சு. இப்பவும் அந்த வாசனை என் மூக்குலேருந்து போகலைடா. அதான் பஞ்சாப் பாசுமதி.’’

நூறு ரூபாய் அதிகம் கேட்டிருந்தாலும், பேரம் படிந்து ஹசைனார்ச்சாவின் ஃபார்ச்சூனரின் பின்ஸீட்டில் கோபால் யாதவ் குந்தியிருந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்