சிறுவாணி என்பது பெருந்துயரம் ஆகிவிடக் கூடாது!

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையே தீராத நிலையில், முளைத்திருக்கிறது இன்னோர் அணைப் பிரச்னை!

அட்டப்பாடி வனப்பகுதியில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே 900 கோடி ரூபாய் செலவில் 500 மீட்டர் நீளம், 51 அடி உயரத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது கேரள அரசு. இந்த ஆற்றில் வரும் தண்ணீர் முழுக்க தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து வரக்கூடியது என்பதால், அணை கட்டுவதற்குக் கேரள அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. ஆனாலும், கேரள அரசின் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை நடத்துவதற்குப் பரிந்துரைத்துள்ளது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தேவைக்கும் கடும் தட்டுப்பாடு வந்து இந்தப் பிரதேசமே பாலைவனம் ஆகிவிடும்.

சிறுவாணி என்பது, காவிரியின் உபநதி. அதனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும் உட்பட்டுத்தான் கேரள அரசு செயல்பட்டாக வேண்டும். காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் தாக்கல் செய்த மேல் முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில், கேரள அரசின் இந்தத் திட்டமே சட்டவிரோதமானது. அப்படி இருக்க, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு மறைமுக ஒப்புதல் அளித்திருப்பது தமிழகத்தின் நீர் உரிமைக்கு நியாயம் சேர்ப்பது ஆகாது.

`அது, அன்றைய கூட்ட நிகழ்ச்சிநிரலிலும் இல்லை. அப்படி இருக்க, சிறுவாணி அணை கட்டும் விவகாரத்தை அந்தக் கூட்டத்தில் ஒரு கூடுதல் நிகழ்ச்சிநிரலாக வைத்து பச்சைக்கொடி காட்டவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏன் வந்தது?' என்று தமிழ்நாடு அரசு எழுப்பியிருக்கும் கேள்விக்கு, மத்திய அரசிடம் இருந்து மௌனம் மட்டுமே பதில். பல அரசியல், சமூக, கட்டுமான நிகழ்வுகளை முடிவுசெய்வதே பணம் படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் என்பதால், `பாலக்காடு மாவட்டத்தின் குளிர்பான நிறுவனத்துக்குத் தண்ணீர் வழங்கும் நோக்கத்துக்காகவே இந்த அணை கட்டப்படுகிறது' என்று வரும் செய்தியையும் ஒதுக்கித்தள்ளிவிட முடியவில்லை.

கர்நாடகாவின் மேக்கேதாட்டூ அணை, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை என்று தமிழக விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கும்படி சுற்றி எழும்பும் அணைகளின் வரிசையில் சிறுவாணியும் இணைந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இன்னும் மோசமாக நசுக்கும். அடிமேல் அடியாக, இடிமேல் இடியாக தமிழகத்தைத் துயர இருளாகத் துரத்தும் நதிநீர்ப் பிரச்னைகளின் மீது ஆழ்ந்த அக்கறை செலுத்தி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சிறுவாணியில் கேரள அரசு அணையைக் கட்டுவதைத் தவிர்த்திடத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம், தொடரும் இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, தேசிய அளவில் நிலைத்த நதிநீர் கொள்கையை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்