பச்சமுத்து கரன்சி தந்தையான கதை

ஜோ.ஸ்டாலின், எஸ்.மகேஷ், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ணக்கு ஆசிரியர், கல்லூரி அதிபர், ஊடக முதலாளி, படத் தயாரிப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என தனக்குத்தானே பல அரிதாரங்களைப் பூசி, ‘சக்சஸ்’ மனிதராக வலம்வந்தவர் `பாரிவேந்தர்' என்று அழைக்கப்படும் பச்சமுத்து. அவருடைய புதிய அவதாரம், புழல் சிறைக் கைதி!

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க, 72 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஸீட் கொடுப்பது நடைமுறையில் இருக்க, இந்த ஆண்டு திடீரென மத்திய அரசு நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்ததுதான் பச்சமுத்துவுக்கு விழுந்த பெரிய அடி.

பச்சமுத்து சார்பில் பணம் வாங்கும் ஏஜென்ட்டான மதன், மாணவர்களிடம் வாங்கிய பணத்தை வேந்தர் மூவீஸ் உள்ளிட்ட வேறு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் தேர்வால் பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தைக் திருப்பிக் கேட்க, மதனோ `கங்கையில் கரைகிறேன்' எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே மாத இறுதியில் எஸ்கேப் ஆனார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது தாயார் தொடர்ந்த வழக்கு போலீஸாரால் இழுத்தடிக்கப்பட, உயர் நீதிமன்றத்தின் நெருக்கடியால் இப்போது பச்சமுத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சொத்து மதிப்பு 15,000 கோடிக்கும் மேல். ஊடகம், டிரான்ஸ்போர்ட், மருத்துவமனை, ஹோட்டல் என 100-க்கும் அதிகமான தொழில்களில் ஈடுபட்டுவருகிறது பச்சமுத்து தலைமையிலான எஸ்.ஆர்.எம் குழுமம்.

யார் இந்தப் பச்சமுத்து?

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் இருக்கிறது தாண்டவராயபுரம். இதுதான் பச்சமுத்து பிறந்த ஊர். தாயார் வள்ளியம்மை; தந்தை ராமசாமி. சிறு வயதிலேயே தந்தை ராமசாமி, காலமானதால் தாயின் அரவணைப்பும் வறுமையும் பச்சமுத்துவை எப்போதும் சூழ்ந்திருந்தன. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருச்சியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றுவிட்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில், முதுகலைக் கணிதம் முடித்து, ஏ.எம்.ஐ.இ படிப்பையும் முடித்தார்.

மாலை நேரக் கல்லூரியில் படித்ததால், பகல் பொழுது வீணாகக் கழிவதை விரும்பவில்லை பச்சமுத்து. டுட்டோரியல் கல்லூரிகளில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அப்போது கணித ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு. சென்னை மாநகராட்சி, கணித ஆசிரியர்களை வேலைக்கு அழைக்கிறது. அங்கும் விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்கிறார். காலையில் 6 மணி முதல் 10 மணி வரை டுட்டோரியல் கல்லூரிகளில் கணக்கு வாத்தியார் வேலை. 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநகராட்சிப் பள்ளியில் கணித ஆசிரியர் வேலை. அதன் பிறகு கல்லூரி மாணவர் என சக்சஸ்ஃபுல் இளைஞனாக மாற ஆரம்பித்தார்.

கல்லூரிப் படிப்புகள் அனைத்தும் முடிந்ததும் சொந்தமாக ‘தமிழ்நாடு டுட்டோரியல் மற்றும் டியூஷன் சென்டர்’ ஆரம்பிக்கிறார்.

திருப்புமுனை தந்த எம்.ஜி.ஆர்

டுட்டோரியல் ஆரம்பித்த பிறகுதான் முறையாக ஆங்கிலக் கல்வி கற்றுத்தர ஒருசில கிறிஸ்துவப் பள்ளிகளைத் தவிர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்கிறார் பச்சமுத்து. போட்டி இல்லாத சந்தை. அதில் இறங்கி வியாபாரம் செய்தால், நிச்சயம் லாபத்துக்கு மேல் லாபம் பார்க்கலாம் என்பதை உணர்ந்த பச்சமுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில், நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம், மெள்ள மெள்ள வளர ஆரம்பித்தது. 12 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.

அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சி. முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, தமிழகத்தில் நிறையக் கல்லூரிகள், தொழிற்கல்விக் கல்லூரிகள் (ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக்) தொடங்க வேண்டும் என ஆசை. ஆனால், அதைச் செய்ய அரசாங்க கஜானாவில் நிதி இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. தனியாரை இந்தக் கல்விச் சேவையில் இறக்கலாம் என நினைத்த அவர், ஏற்கெனவே, சிறிய அளவில் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்களை அழைத்துப் பேசினார். அங்குதான் பச்சமுத்துவின் வாழ்க்கை திசை மாறியது. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிபெற்றார். இவரோடு சேர்ந்து வளர்ந்தவர்கள்தான், வேலூர் வி.ஐ.டி விஸ்வநாதன், சத்யபாமா கல்லூரி அதிபர் ஜேப்பியார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்