தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று...

வெ.நீலகண்டன், படங்கள்: கே.குணசீலன்

அன்று...

எப்போதும் பச்சை மாறாத நிலம், உழவு சகதியிலேயே உழன்றுகொண்டிருப் பதால், முழங்கால் வரைக்கும் மஞ்சள் காரை ஏறிய மாடுகள், நடவு ஈரம் சொட்டச் சொட்ட, வயல் வரப்பு மர நிழலில் ஊர்க்கதை பேசியபடி உணவு அருந்தும் பெண்கள் என ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் எப்போதும் குளிர்ச்சி குறையாமல் இருக்கும். ஊர்க் கதை, வம்பு, சண்டை, சச்சரவு, ஜாலி என்று கிராமம் கலகலத்துக் கிடக்கும். பண்டிகைகள், திருவிழாக்கள் எனக் கொண்டாட்டங்களுக்குக் குறைவு இருக்காது. பெண்கள் மதுக்குடம் தாங்கிவர, இளைஞர்கள், ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் குயவர் குடியிருப்பில் இருந்து பிரமாண்டமான சுடுமண் சிற்பங்களை தோளில் சுமந்து சாமியாடி வருவார்கள். தஞ்சை வாழ்க்கையைப் பற்றி கற்பனை செய்தாலே நெஞ்சில் ஈரம் சுரக்கிறது.  

இன்று...

எல்லா கிராமங்களிலுமே ஓர் இனம்புரியாத சோகம் இழையோடுகிறது. பெரும்பாலான கிராமங்களில் 35 வயதுக்குக் கீழான இளைஞர்களே இல்லை. ஆற்றுப்பாலங்கள் காலியாகக் கிடக்கின்றன. திருவிழாக்களில் எவ்வித சுவாரஸ்யங்களும் இல்லை. குயவர் குடியிருப்பில் இருந்து மாட்டு வண்டிகளில் வந்திறங்குகின்றன சாமி சிலைகள்.

கடந்த 20 ஆண்டுகளில் காவிரிப் படுகை பண்பாடே மாறிவிட்டது. `தென்இந்தியாவின் நெற்களஞ்சியம்’ என வெள்ளைக்காரர்கள் வியந்துபோற்றிய ஒருங்கிணைந்த தஞ்சை, இன்று தன் இயல்பைத் தொலைத்து நிற்கிறது. நெடுஞ்சாலை ஓர விளைநிலங்களில் பெரும்பாலானவை வீட்டுமனைகள் ஆகிவிட்டன. கிணற்றுப் பாசன நிலங்கள் தவிர, பெரும்பாலான வயல்கள் காய்ந்து கிடக்கின்றன.

காவிரி ஆறுதான் ஒருங்கிணைந்த தஞ்சையின் ஜீவாதாரம். மேட்டூரில் தொடங்கி, சுமார் 21 லட்சத்து 58 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பைப் பசுமையாக்கி விட்டு பூம்புகாரில் கடல் சேர்கிறது காவிரி. திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பே காவிரி டெல்டா. 4 லட்சம் விவசாயிகள், 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். மேட்டூரில் இருந்து ஒற்றைப்பாதையில் ஓடிவரும் காவிரி, திருச்சி முக்கொம்பில் கொள்ளிடமாகவும், கல்லணையில் வெண்ணாறாகவும், கல்லணை கால்வாயாகவும் மூவுருவம் எடுக்கிறது. பிறகு, 36 கிளை ஆறுகள், 1665 வாய்க்கால்கள் என, நரம்பு மண்டலத்தைப்போல சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பாசனப் பரப்புக்குள் பாய்ந்தோடுகிறது.

வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி 28-ம் தேதி மூடப்படும். சுமார் 3 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நடக்கும். ஆகஸ்ட் மாதம் கடைசி அல்லது செப்டம்பர் மாத மத்தியில் குறுவை அறுவடை முடியும். புத்தரிசி, புத்தாடை என தீபாவளி களைகட்டும்.

ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில், சம்பாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கும். சுமார் 12 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி சாகுபடி நடக்கும். பொங்கலுக்கு முன்பே அறுவடை தொடங்கிவிடும். பொங்கல் பண்டிகையில் புத்துணர்வு பொங்கும். இவை தவிர கோடைப் பயிர்களாக உளுந்து, கடலை போன்ற தானியங்களும் பயிரிடப்படும்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்த நடைமுறை குலைந்துவிட்டது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரிப் படுகை மக்களுக்குத் தீபாவளியும் இல்லை; பொங்கலும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்