ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 5

தொடர்டாக்டர். ஆர்.கார்த்திகேயன்

#நிரூபணம்

தன்னை நிரூபித்துக்கொள்ள மெனக்கெட்டு ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். World Record என்று பிளேடைத் தின்பவர்கள், பாம்புகளுடன் வாழ்பவர்கள், ஏரோபிளேனைக் கயிற்றில் கட்டி பற்களில் கடித்து இழுப்பவர்கள், நிமிடத்துக்கு 100 தேங்காய் உரிப்பவர்கள் என்று எல்லோருக்கும் உள்ள பொதுகுணம் தன்னை நிரூபிப்பதுதான்.

#போட்டி

தாழ்வுமனப்பான்மை எல்லோருக்கும் உரியது. `Striving for Superiority-தான் நம் வாழ்வை இயக்குகிறது’ என்பார் உளவியல் மேதை அட்லர். ஏதோ ஓர் இல்லாமையே நம்மைச் செலுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் தன் நிலை தாழ்வாகத் தெரிகிறது.

எனக்கு உயரம் இல்லை, நிறம் கம்மி, இங்கிலீஷ் தெரியாது, படிப்பு வராது, வீட்டில் வசதி இல்லை, பெண்கள் பக்கம் தலைகாட்ட கூச்சம், வேலை சரியில்லை... இப்படி எல்லோருக்கும் தனக்குள் ஏதோ ஒரு குறை தெரிகிறது. சுற்றத்தார் தன்னைவிட நன்றாக வாழ்கிறார்கள் என்ற பிரமை உண்டு. இதனால் யாரையாவது போட்டியாக நினைத்து ஓட ஆரம்பிக்கிறோம். எல்லா ஓட்டங்களும் இதற்குதான். `இதுதான் நான்...’ என்று கண்ணாடி பார்த்து சந்தோஷமாகச் சொல்லமுடிந்தால் ஓடாமல் வாழ்க்கையை ரசிக்க முடியும்.

#நம்பிக்கை

Depressive Triad  பற்றி குறிப்பிட்டிருந்தேன். முக்கோணம்போல மூன்று முக்கிய எதிர்மறைச் சிந்தனைகள் துக்கநோயில் முடியும் என்கிறார்கள். அவை... Worthlessness, Helplessness, Hopelessness.  `நான் சரியில்லை’, `எனக்கு யாரும் உதவ முடியாது’, `எதிர்காலத்தில் நம்பிக்கையில்லை’. டிப்ரஷனுக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாறுதல்களும் காரணம் என்றாலும், இந்த முக்கோணச் சிந்தனைகள்  காரணம் என்பது நிச்சயம். யாரிடமாவது மனம்விட்டுப் பேசினாலே ஹெல்ப்லெஸ்னஸ் குறையும். ஆனால் இன்று குறைகளைக் கொட்டி அழக்கூட ஆள் இல்லாமல் போய்விட்டது.

#சுவர்கள்

குடும்பம் சிறுத்துவிட்டது. யாருக்கும் நேரம் இல்லை. வீட்டில் ஆட்கள் குறைவு. சுவர்கள் அதிகம். தனிமை டிப்ரஷனைத் தீவிரப்படுத்தும்.

ஆன்மிகம், இலக்கியம், அரசியல், சமூக சேவை, விளையாட்டு... என ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருப்பது மன நலத்துக்கு நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியம் சிரிக்கணும்... வாய் விட்டு, மனசு விட்டு. இதில் பாதி நோய்கள் பறந்துபோகும்!

விருதுபெற்ற ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்றில் பேச அழைத்தார்கள். 90 நிமிடம் கழித்து அபாரம் என்று பாராட்டினார் அந்த 28 வயது நிறுவனர். `இவர்கள் முழுதாய் கேட்டதே பெரிது. எல்லோரும் லேப்டாப்பை மூடியதே சாதனை’ என்றார். ஓரிருவர் கை தட்டியதைப் பெருமையாகச் சொன்னார்.

எனக்குப் பெருத்த ஏமாற்றம்... பெரும்பாலானோர் கண் பார்க்காமல், கை குலுக்காமல் விடை பெற்றதுதான். கண்ணுக்கு நேராகப் பார்த்தவர்கள்கூட புன்னகைக்கவில்லை. எல்லோரும் 25 - 35 வயதினர். அபார அறிவும், கொழுத்தச் சம்பளமும்கொண்டவர்கள்.

கவலையோடு காருக்கு வருவதற்குள் சிலர் இ-மெயில் அனுப்பியிருந்தார்கள்... `பேச்சு ரொம்பப் பயனாக இருந்தது. எங்கு, எப்படி ஆலோசனை பெறுவது?’ என்று விவரம் கேட்டு. யெஸ், உங்கள் ஊகம் சரிதான். திருமணச் சிக்கல்கள்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்