ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

ங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளப்போகும் செய்திகளை, 100 ஆண்டுகளுக்கு முன்னர் கதையாகச் சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்க மாட்டார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து பிறக்கப்போகும் தலைமுறையினரிடம் இந்தச் செய்திகளைக் கூறினால், அவர்கள் கடும் கோபம்கொள்வார்கள். பூமியில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் நீர்வாழிகள்தான். அவற்றில் மீன்கள், குறிப்பிடத்தக்க வகையில் மனிதர்களின் வரலாற்றுடன் இணைந்து வாழ்பவை. அந்த மீன்களின் இனத்தைக்கூட நவீனத்தின் பேரால் அழித்துவருகிறது இந்தக் கால அறிவுத் துறை.

கோடையில் வறண்டுகிடக்கும் குளங்களிலும் குட்டைகளிலும் மழைத்துளிகள் விழுந்தவுடன் மீன்குஞ்சுகள் உருவாகின்றன. பாளம் பாளமாக வெடித்துக்கிடந்த நீர்நிலைகளில் மழைக்கால வெள்ளம் மீன் கூட்டத்தை வளர்க்கிறது. எந்த மனிதரும் ஒவ்வொரு நீர்நிலைக்கும் சென்று மீன் முட்டைகளை வீசுவது இல்லை. புல்கூட காய்ந்துபோன குளத்தில் மீன் முட்டைகள் உயிர் காத்துக்கிடக்கின்றன, மழைக்காலம் வரைக்கும். இதுதான் படைப்பின் கருணை.

மாங்குடிக்கிழார் இயற்றிய புறநானூற்றுப் பாடலின் காட்சி இது, `செழித்து விளைந்திருந்த வயல்களில் நீர் தேங்கியுள்ளது. இந்த நீர் மேல், கீழ் என இருவகைகளாக உள்ளது. மேலே உள்ள நீர், குவளை மலர்களை வளர்த்தெடுக்கிறது; கீழே உள்ள நீர், மீன்களை வளர்க்கிறது. நெற்பயிர்களைக் கொத்தித் தின்னும் பறவைக் கூட்டத்தை ஓட்டுவதற்காக மக்கள் பறை முழக்கம் செய்கின்றனர். அந்த முழக்கம் கேட்டு, கடலில் இரை தேடும் பறவைகள்கூட பறந்தோடுகின்றன.’

வயல்களில் மீன் கூட்டம் இருந்த காட்சிகள், நமது சங்கப் பாடல்களில் விரவிக்கிடக்கின்றன.

கழனிகளில் வேலைசெய்ய வரும் மக்கள், வீடு திரும்பும்போது வயல்களிலும் வாய்க்கால்களிலும் மீன் பிடித்துச் செல்வது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வழக்கம். வாய்க்கால்களில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது சிறுவர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. கெளுத்தி, ஆரல், மஞ்சள் பிரட்டை, கச்சைப்பொடி, குறவை, அயிரை, விலாங்கு, கொக்குமீன், வாளை, விறால், கெண்டை ஆகியவை, அனைவருக்கும் தெரிந்த மீன் வகைகள்.

காவிரி ஆற்றில் நீர் பெருகி ஓடும்போது, கால்வாய்களின் மதகுகள் திறக்கப்படும். மதகுகளின் ஊடாகப் பீறிட்டுப் பாயும் நீரை எதிர்த்துக்கொண்டு அயிரை மீன்கள் துள்ளிக் குதித்து, மதகுகளின் சுவர்களில் அப்பிக்கிடக்கும். நாங்கள் குளிக்கச் செல்லும்போது மதகுச் சுவர்களில் இருந்து அயிரை மீன்களை அள்ளிக்கொள்வோம்.

வாய்க்கால்களின் இருமருங்கிலும் மண்டிக்கிடந்த புதர்களுக்குள் நுழைந்து மெள்ள நடந்தால், கால்களின் கீழே சேற்றுக்குள் கிடக்கும் குறவைகளும் விறால்களும் சிக்கும்.

இவை எல்லாம், சங்கக் காட்சிகள் அல்ல; 20 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சிகள். `பசுமைப் புரட்சி' எனும் பெருநிறுவனங்களின் பேராசைக் கனவு, நமது வயல்களை நஞ்சுக் கூடங்களாக்கி, மீன் இனங்களைக் கூண்டோடு அழித்துவிட்டது. `மீன்வளத் துறை' எனப் பேர்கொண்ட அரசுத் துறை, நமது மரபுவழி மீன் வகைகளை எல்லாம் ஒழித்துக் கட்டும்படியான திட்டங்களைச் செயல்படுத்தியது. விளைவு, இப்போதைய தலைமுறைக்கு மேற்கண்ட மீன்களைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகமே இல்லாமல்போனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்