ரத்த உறவே... லெக் பீஸ் போடு!

தமிழ்ப்பிரபா, ஓவியங்கள்: கண்ணா

`விருந்தோம்பல்'கிற ஒரு விஷயத்தை, பேருக்காவது கடைப்பிடிச்சிட்டிருந்த ஒரே இடம் கல்யாண மண்டபங்கள்தான். ஆனா, இப்போ கல்யாணத்துல செல்ஃபி எடுப்பது, யோகா டான்ஸ் ஆடுவது என திருமண வீட்டினர் பிஸியாக இருப்பதால், `நமக்கு நாமே' திட்டப்படி கல்யாண மண்டபங்களுக்குள் இயங்கவேண்டியிருக்கிறது. வாட்ஸ்அப்பில் வந்த பத்திரிகைக்கு மரியாதை செய்யாமப் போகக் கூடாதுனு சின்சியரா மொய் எழுதும் கடைசித் தலைமுறை தமிழன் படும் கஷ்டங்கள்தான் இங்கே...

கல்யாண வீட்டில் நாம் சந்திக்கும் ஒரே பிரச்னை, மேடையில் ஏறி கிஃப்ட் கொடுப்பது அல்ல; பந்தியில் இடம் பிடிப்பதுதான். பந்திக்குக் காத்திருப்பது என்பது ஒரு கலை. சம்பவ இடத்துக்குச் சென்றதும் `எங்கே இடம் காலியா இருக்கு?’ என நாசூக்காகத் தேட வேண்டும். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவாறு அல்லது செல்போனை நோண்டிக்கொண்டே என நாகரிகமான உத்திகளைக் கையாளலாம். ஆனால் சிலர், மனதின் பரபரப்பை கண்களால் அப்பட்டமாக வெளிப் படுத்துவார்கள். உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் உடலில் சிறு அசைவு ஏற்பட்டாலும், உடனே அவர் முதுகுக்குப் பின்னால் போய் நின்று, அவர் தலையை மோப்பம் பிடிக்க ஆரம்பிப்பார்கள். சாப்பிடுபவர்களுக்கு இது எவ்வளவு பெரிய அசௌ கரியத்தைக் கொடுக்கும் என போஜனப்பிரியர்கள் யோசிப்பதே இல்லை.

பந்திக்கு இடம் தேடுவதுபோலவே சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிடுவதும் ஒரு கலைதான். உதாரணத்துக்கு, கறி விருந்தாக இருந்தால் பரிமாறுபவர்கள் நம் அருகில் வரும்போதே சிநேகமாகப் புன்னகைக்க வேண்டும். அவரும் பதிலுக்குப் புன்னகைத்தால் ‘லெக் பீஸ் இருந்தா போடுங்க பாஸ்' என பிரபலத்துடன் செல்ஃபிக்கு அனுமதி கேட்பதுபோல் கேட்டால், அன்னக் குத்தியைப் பாத்திரத்தில் ஒரு வெட்டு வெட்டி அந்தப் பொக்கிஷத்தை எடுத்து இலையில் வைப்பார். ஆனால், கறாரான சேவகரிடம் இதெல்லாம் எடுபடாது. ‘சார், இருக்கிறதுதான போட முடியும்' எனச் சிரித்த முகத்துடன் சொல்லி விடைபெறுவார். பீஸ் இல்லாததுகூட அந்த நேரத்தில் பிரச்னையாக இருக்காது. `அவன் இதைச் சத்தம் போட்டுத்தான் சொல்ல வேண்டுமா!' என்று கோபம் எழும். பக்கத்து இலையில் நமக்குக் கிட்டாத ரெண்டு பீஸ்களைப் பார்த்ததும் நம் கோபம் இருமடங்கு ஆகும். அருகில் உட்கார்ந்திருப்பது ரத்த உறவே என்றாலும், இந்தப் பாகுபாட்டை மனம் ஏற்றுக்கொள்ளவே செய்யாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்