மீண்டும் மழை... தமிழகம் தயாரா?

கே.பாலசுப்பிரமணி, பா.ஜெயவேல், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ன்னும் சில வாரங்களில் `ஓர் ஆண்டுக்கு முன்னர் உங்கள் நினைவுகள்' என ஃபேஸ்புக் பக்கம் உங்களுக்கு நினைவுப் படுத்தப்போகிறது. ஆம்... 2015-ம் ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாத மழை நம் நினைவுகளில் ஏற்படுத்திப் போன தாக்கத்துக்கு விரைவில் வயது ஒன்று!

பெரு மழைக்குப் பிறகு, அடுத்த பருவமழைக்கு இடையே தமிழ்நாடு அரசிடம் இருந்த அவகாசம் எட்டு மாதங்கள். இந்த எட்டு மாதங்களில் மீண்டும் ஒரு மழையைத் தாங்கும் வகையில் சென்னையை எப்படி எல்லாம் தயார்படுத்தியிருக்கிறது அரசு?

சென்னை வெள்ளத்தின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் மாற்றுத்திறனாளி சுனிதா. கோட்டூர்புரத்தில் சர்க்கர நாற்காலியில் இருந்தபடி, வெள்ளத்தில் தத்தளித்த அவரை, பெரும் சிரமப்பட்டு இளைஞர்கள் சிலர் காப்பாற்றினர். அவர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு, `மழை போன்ற இயற்கைப் பேரழிவு காலங்களில் எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளை மீட்பதற்கு அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? பேரிடர் மேலாண்மை கமிட்டியில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக யாராவது ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டு, மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

ஆனால், எட்டு மாதங்களுக்குப் பின்னரும் தலைமைச் செயலாளரிடம் இருந்து அவருக்கு பதில் எதுவும் வரவில்லை. தமிழ்நாடு அரசு கடந்த எட்டு மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில், மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து, மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெருமழையின் துயரில் சிக்கிய சென்னை மாவட்டத்தில், அப்படி ஒரு கூட்டமே இதுவரை நடத்தப்படவில்லை. சென்னை மாவட்டத்தில் `சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மைக் குழு, கலெக்டர் தலைமையில் செயல்படுகிறது’ என தேசியப் பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது சென்னையில் மாவட்ட ஆட்சியரே இல்லை. மாவட்ட ஆட்சியர் பதவி காலியாக இருக்கிறது. பேரிடர் மேலாண்மைக் குழு பற்றி கேட்டதற்கு, அப்படி ஒரு குழு இருப்பதாக அங்கு இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கேட்டபோது, அவசரகால உதவி எண் மட்டும் கொடுத்தார்கள். அந்த எண் தற்போது அவுட் ஆஃப் ஆர்டர். இது, சென்னை மாவட்ட நிலவரம்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகள்தான், மழை வெள்ளத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம், கடந்த ஏழு மாதங்களில் ஒரு முறைகூட நடக்கவில்லை. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தை நாம் தொடர்புகொண்டு கேட்டதும், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி எந்தவித முன்னேற்பாடும் இன்றி துணை ஆட்சியர் பர்கத் பேகம் தலைமையில் கூட்டத்தை அவசர அவசரமாக நடத்தியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்ன நடவடிக்கைகள்?

தாம்பரம் முடிச்சூரைச் சுற்றி ஓடும் கால்வாய், அடையாறு ஆற்றில் சேருகிறது. இந்தக் கால்வாய் தூர்வாரப்படாதது, ஆக்கிரமிக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக முடிச்சூர் தத்தளித்தது. கால்வாய் அருகே குடிசைகள் போட்டுத் தங்கி இருந்த அப்பாவி மக்களை மட்டும், அங்கு இருந்து துரத்திவிட்டார்கள். ஆனால், எட்டு மாதங்களுக்குப் பின்னரும் கால்வாய் தூர்வாரப்படவே இல்லை.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட கால்வாய்கள் இன்னும் தூர்வாரப்படவே இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ``போரூர் ஏரி நிரம்பியதால் போரூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இன்னும்கூட போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் வழி எதுவும் முறையாக இல்லை. இந்த ஆண்டும் மழை பெய்தால், போரூர் நிச்சயமாகப் பாதிக்கப்படும்'' என்கிறார்கள் அந்தப் பகுதிவாசிகள்.

சூளைமேடு பகுதியில் விருகம்பாக்கம் கால்வாய் உள்ளது. இது, ஒரு மழைநீர் வடிகால் கால்வாய்; கூவம் ஆற்றில் சென்று சேரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கால்வாயில் கோயம்பேடு அருகே உள்ள பெரிய ஹோட்டல்கள், கழிவுநீரைக் கலக்கவிடுகின்றன. அதனால் இப்போது இந்தக் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. கால்வாயில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி, தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகள் விடுத்தபோதிலும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

தென் சென்னை புறநகரில் உள்ள சுமார் 20 ஏரிகளின் தண்ணீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சென்று சேருகிறது. இந்தச் சதுப்பு நிலத்தின் பெரும்பாலான பகுதி, இப்போது வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இன்னும் குறிப்பிட்ட சில பகுதிகள், மாநகராட்சி குப்பை கொட்டும் இடமாக உள்ளது. அதையும் வனத்துறையிடம் ஒப்படைத்து முறையாகப் பராமரித்தால் மட்டுமே, இங்கு வெள்ள பாதிப்பைத் தடுக்க முடியும்.

எட்டு ஆண்டுகளாகத் தொடரும் பணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்