பேசா வெயில் - கவிதை

யாழன் ஆதி

தேன்சிட்டின் மஞ்சள் வண்ணமாய் அறைக்குள் வருகிறது வெயில்.
பதுங்கும் ஒரு பூனைக்குட்டியின் லாகவத்துடன்
மெதுவாக அது வியாபிக்கிறது.
பறவைகளின் குரல்களில் இருக்கும்
பதற்றத்தின் தொனிகூட இல்லாமல் காற்றிலடித்துவரும்
ஒரு துணியாய் நகர்ந்து உள்ளேறுகிறது.
ஜன்னல்கள் திறந்தாலடிக்கும்
காற்றின் வேகமற்ற அதன் கதிர்கள்
வாடிய மலர்களை ஒத்திருக்கின்றன.
படபடக்கும் என் புத்தகத்தின் பக்கங்களில்
மயிலிறகெனத் தொற்றிக்கொள்கிறது.
வெம்மையின் சொற்கள் சுடரும் அதன் லிபிகளை
மெள்ள அதன் சுருங்கிய கைகளால் மறைக்கிறது.
ஓர் அந்நியனின் சஞ்சாரத்தைப்போல
அது தனக்குள் நிகழ்த்திக்கொள்ளும் இந்தப் பேரமைதி
ஜியோமெட்ரிக் தன்மையிலாகி நகரா வடிவமாகிவிடுகிறது.
அடக்குமுறைகளுக்கெதிரான அரங்குகளில் இறங்கும்
திரைச்சீலையாய் அடைக்க ஆரம்பிக்கிறது என் அறையை.
செத்த எலியொன்றை அப்புறப்படுத்தும் வேகத்துடன்
வெயிலை வெளியே வீசி கத்தினேன்
`கோபத்தின் குணங்களற்ற வெயில்கள்
வெறும் பூஞ்சைகள் ஏறிய ரொட்டித்துண்டுகள்.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்