சொல்வனம்

கடைசிப் பெட்டி தேவதூதன்

முதன்முதலில் பார்த்த தேவதூதன்
வெள்ளை உடையில்
கூட்ஸ் ரயிலின்
கடைசிப் பெட்டியில்
டாட்டா காட்டினார்
கொடிகளை ஆட்டினார்
குழந்தைகளிடம் புன்னகைத்தார்
இன்னொன்றுக்கு வழிவிடும் காத்திருப்பில்
இனிப்பு நீட்டினார்
மழை வெயிலோடு நெருக்கமாய்க் கலந்தார்
படித்து முடித்ததும்
என்னவாகப் போகிறீர்களென
ஜெயராணி டீச்சர் கேட்டதற்கு
சாண்ட்லர்புரம்
ஆர்.சி.துவக்கப்பள்ளி
இரண்டாம் வகுப்பு ஆ பிரிவை
கார்டு ஆகப்போகிறோமென
கோரஸில் கத்தவைத்தார்.

- கார்த்தி

காட்சி மயக்கம்

நாமிருவரும் இணைந்து நடக்கும்
இந்தத் தனிமைச் சாலைதான்
எவ்வளவு அழகு.
நம்மைவிடவும்
நம் நிழல்களுக்கு அவசரம்.
செம்மண் கட்டிலில்
இருள் மகரந்தப் பிரதியெனக்
கூடிக் கலக்கின்றன அவை.
சத்தமின்றிக் கலவி புரியும் வித்தையை
அவற்றிடமிருந்துதான்
கற்றாக வேண்டும் நாம்.
பாவம் இந்தப் பாதை
கலவியின் காட்சிமயக்கத்தில்
தான் போகும் ஊரை
மறந்துவிட்டது.

- திலகன்

ஸ்மைல் ப்ளீஸ்

புன்னகைத்துக்கொண்டே வரும்
இன்னும் பல் முளைக்காத
சொல் உதிராத
எதிர் இருக்கை
சிறு குழந்தைக்கும்
புன்னகைக்காது
அருகிலமர்ந்திருக்கும்
சக பயணியின்
ஸ்மார்ட்போன் சாட் பாக்ஸ்
நிரம்பியிருக்கிறது
ஸ்மைலிகளால்.

- கார்த்தி

பயணம்

வெகுநாளாகிவிட்டது
நீரோடும் ஒரு நதியைக் கண்டு
ரயிலில் போகும்போது
பேருந்தில் போகும்போது
மோட்டார் சைக்கிளில் போகும்போது
நதிகளைக் காணாத ஏமாற்றம்
தற்செயலாக
நடந்து செல்லும்போது பார்க்கிறேன்
லாரியில்...
எங்கு பயணப்படுகிறது நதி?

- பிறைநிலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்