திரைத்தொண்டர் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

‘தூங்காதே தம்பி தூங்காதே’ படம் பார்த்துவிட்டு கொஞ்சம் அப்செட். படம் நன்றாக இருந்தாலும், நான் ரசித்து எழுதிய பல நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் இல்லை. நான் ஒன்றும் பெரிய காவியம் எழுதிவிடவில்லை. கமர்ஷியல் படம்தான்.

‘அந்த காமெடி சீன்கள் போனால் என்ன, அவற்றை அடுத்தடுத்த படங்களில் பயன்படுத் திக்கலாம்’ என்று அமைதியாக வந்திருக்கலாம்.

ஆனால், படம் முடிந்து வெளியே வந்ததும், ‘ஒரு வெள்ளி விழா படத்தை, 100 நாள் படமா பண்ணிட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்’ என முத்துராமன் சாரிடம் வருத்தமாகச் சொல்லி, கைகொடுத்துவிட்டு, யாரிடமும் பேசாமல் கிடுகிடுவென வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்படி நான் பேசியதால், முத்துராமன் சார் பயங்கர அப்செட்.

நாங்கள் ஏகப்பட்ட படங்களில் இணைந்து பணிபுரிந்திருக்கிறோம். இப்படி ஒன்றிரண்டு சங்கடங்களைத் தவிர எங்களுக்குள் வேறு எந்த வருத்தமும் இல்லை. அப்படி ஏற்பட்ட ஒன்றிரண்டு வருத்தங்களுக்குக்கூட நான்தான் காரணமாக இருந்திருப்பேன்.

ஃபிலிமாலயா புரொடக்‌ஷன்ஸ்,  திலீப்குமாரை வைத்து ‘லீடர்’ உள்பட சில இந்திப் படங்களை எடுத்தவர்கள். அந்த கம்பெனியின் வாரிசுகள், ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ கதையை இந்தியில் எடுக்க என்னிடம் ரைட்ஸ் வாங்கியிருந்தார்கள். ராஜேஷ் கண்ணாவை ஹீரோவாக வைத்து அந்தப் படத்தை ஆரம்பித்து, ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. அந்தப் படத்துக்காக லொக்கேஷன் பார்க்க காரில் சென்ற அவர்கள் விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து வந்தனர். அதனால், ‘இந்தப் படம் நமக்கு ராசி இல்லை’ என்று சொல்லி  அவர்களின் அம்மா ஷூட்டிங்கை நிறுத்தச் சொல்லிவிட்டார்.

ஆனால், அது ராஜேஷ் கண்ணாவுக்கு மிகவும் பிடித்த கதை. சில வருடங்களுக்குப் பிறகு ‘அது எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. அப்ப அதைப் பண்ண முடியலை. அதேமாதிரி இப்ப ஒரு கதை பண்ணித்தாங்க. நான் நடிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அவர் கேட்டதற்காக எழுதி எடுக்கப்பட்டதுதான் ‘அவ்தார்’ என்ற இந்திப் படம்.

‘நீங்க ‘ஆறிலிருந்து அறுவதுவரை’ படத்தை அண்ணன்-தம்பியை வெச்சு எழுதியிருந்தீங்க. ‘அவ்தார்’ அப்பா-பிள்ளையை வெச்சு எழுதியிருக்காங்க’ என்றார்கள். ‘நம் கதை இந்தியில் வேறு ஒரு ரூபத்தில் வந்து ஓடுது. அதன் ரைட்ஸையும் நாமளே வாங்கி இங்க பண்ணணும்’ என்று நினைத்தேன். ‘அவ்தார்’ படத்தை நடிகர் ராஜேந்திரகுமாரின் மைத்துனர் மோகன்குமார் என்பவர் எடுத்ததாகச் சொன்னார்கள். பாரதிராஜா அப்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ‘லவ் ஸ்டோரி’ என்ற பெயரில் ராஜேந்திரகுமாரின் மகனை வைத்து இந்தியில் எடுத்துக்கொண்டிருந்தார். சித்ரா லட்சுமணன் உட்பட அவரின் டீம் அப்போது மும்பையில்தான் இருந்தது. நான்தான் முதன்முதலில் சித்ரா லட்சுமணனை சினிமா பி.ஆர்.ஓ-வாகவும் ‘மண்வாசனை’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்தினேன்.

அவரிடம் விஷயத்தைச் சொல்லி, ` ‘அவ்தார்’ பட ரைட்ஸைக் கேட்டு வாங்கிடு’ என்றேன். அவரும் பேசியிருக்கிறார். ‘அந்தப் படத்துக்கு நிறையப் போட்டிகள். ராஜேந்திரகுமார் மூலமா போனதால நமக்கு முன்னுரிமை தர்றேன்னு மோகன்குமார் சொல்லியிருக்கார். ஆனா, ரெண்டு நாள்ல இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறார். பணத்தைக் கொடுத்துட் டோம்னா இந்தக் கதையை நாம வாங்கிடலாம்’ என்றார். இன்று உள்ளதுபோல அன்று ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் எதுவும் கிடையாது.

என் ஃபைனான்ஷியர் அர்ஜுன் தாஸிடம் விஷயத்தைச் சொல்லி மும்பையில் இருந்த அவருக்கு நெருக்கமான ஒருவரை போனில் பிடித்து, பணத்தைக் கொடுக்கச் சொன்னோம். ‘நீயே உன் பேர்ல அக்ரிமென்ட் போட்டு வாங்கிட்டு வந்துடு’ என்று சித்ரா லட்சுமணனிடம் சொல்லி விட்டேன். அவரும் தன் பெயரில் அக்ரிமென்ட் போட்டு ரைட்ஸ் வாங்கிவந்தார். 

பிறகு, சித்ரா லட்சுமணன்,  ‘அண்ணே, நீங்க எவ்வளவோ படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க. ‘மண்வாசனை’யை ஆரம்பத்துலயே வித்துட்டதால எனக்குப் பேர் கிடைச்ச அளவுக்கு லாபம் கிடைக்கலை. அதனால, இந்த ‘அவ்தார்’ பட தமிழ் ரீமேக்கை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம். நான் புரொடக்‌ஷன் சைடு பார்த்துக்கிறேன்’ என்றார். ‘முடியாது’ எனச் சொல்ல கஷ்டமாக இருந்தது. ‘சரி பண்ணுவோம்’ என்றேன். ‘அக்ரிமென்ட் போட்டுக் கலாம்ண்ணே’ என்றார். ‘அதெல்லாம் வேணாம். நீ உன் பேர்லயே பண்ணு. லாபத்தை 50:50-யாகப் பிரிச்சுப்போம்’ என்றேன்.

சிவாஜி அண்ணனிடம் பேசி ஃபிக்ஸ் பண்ணினேன். ஜெய்சங்கர், அம்பிகா, ராதா என படத்தில் ஏகப்பட்ட நடிகர்-நடிகைகள். அதுதான் ‘வாழ்க்கை’ படம்.  படத்துக்கான ஃபைனான்ஸையும் நானே ஏற்பாடு செய்துகொடுத்தேன். படம் ரிலீஸ் ஆகி ஓகோவென ஓடியது. ஆனால், அந்தப் படத்திலும் லாபம் வரவில்லை. ‘ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்களைப் போட்டு அதிக அளவில் செலவு செய்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் பற்றாக்குறை’ என்று சித்ரா லட்சுமணன் சொன்னதாக நினைவு.

பிறகு, சித்ரா லட்சுமணன் கமல் சாரிடம் போய், ‘முதல்முறையா நான் டைரக்ட் பண்றேன். எனக்கு ஒரு படம் பண்ணித்தாங்க’ எ்ன்று கேட்டிருக்கிறார். ‘அடுத்தது என் கால்ஷீட் பஞ்சு அண்ணனுக்குக் கொடுத்திருக்கேன்’ என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். பிறகு என்னிடம் வந்த சித்ரா லட்சுமணன், ‘முதன்முதல்ல டைரக்ட் பண்றேன். நீங்க கமல் கால்ஷீட்டை எனக்கு விட்டுக்கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார். நம்மால் பி.ஆர்.ஓ-வானார். பிறகு தயாரிப்பாளரும் ஆனார். இயக்குநராகவும் வரட்டுமே’ என்று நினைத்து, கமல் சாரிடமும் பேசி, அந்த கால்ஷீட்டை சித்ரா லட்சுமணணுக்கு விட்டுக்கொடுத்தேன். அப்படி நான் விட்டுக்கொடுத்த கமல் கால்ஷீட்டில் சித்ரா லட்சுமணன் இயக்கிய படம்தான், ‘சூரசம்ஹாரம்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்