அம்மாக்களின் ‘பணி’ப்போர்!

கே.அபிநயா, படம்: ஆ.முத்துக்குமார்

`இங்கே தரையில் படுத்திருப்பது, குழந்தை அல்ல; என்னுடைய இதயம். அவனுக்குக் காய்ச்சல். அதனால் யாருடனும் அவனுக்குத் தங்கப் பிடிக்கவில்லை. மதியம் கடந்துவிட்டது. உடனடியாக லோன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், என்னால் அரை நாள் விடுமுறைகூட எடுக்க முடியவில்லை. ஆனால், என்னால் என் மனதை ஒருமுகப்படுத்தி இரண்டு கடமைகளையும் சமாளிக்க முடியும். சட்டமன்றங்களில் தூங்கிக்கொண்டிருப்பவர் களுக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமே இதை எழுதுகிறேன்' - இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, புனேவைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்வாதி சித்தால்கரின் ஃபேஸ்புக் பதிவுதான் இது.

காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தையை வீட்டில் வேலைக்காரர்களிடம் விட்டுவிட்டுவர முடியாமல், அலுவலகத்தில் விடுமுறையும் எடுக்க முடியாமல் அவர் பட்ட வேதனை வெறும் ஓர் உதாரணம் மட்டுமே. இன்று நம் வீட்டிலும் அலுவலகத்திலும் சொந்தங்களிலும் இப்படி இரண்டு கடமைகளையும் சரியாகச் செய்ய, கடுமையாகப் போராடும் பெண்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்; வீட்டுப் பொறுப்புகளுக்கும் அலுவலகப் பணி அழுத்தங்களுக்கும் இடையில் உழல்கிறார்கள்.

பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்களில் 68 சதவிகிதம் பேர் வாழ்வியல் வியாதிகளான மனநிலைக் கலக்கம் (Anxiety), பயம், இயல்பாக இருக்க முடியாமை (Uneasyness), கையாள முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு (Hysteria), அலுவல் அழுத்தத்தால் உறவுகளைச் சரிவரக் கையாள முடியாமை, பணியிடச் சுமைகளைச் சமாளிக்க இயலாமை போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வீடு, அலுவலகம் என இரு தரப்புகளில் இருந்தும் விலகிப்போகும் பெண்கள் நிறையப் பேர் என்கிறது மருத்துவ உலகம்.

``நான் சென்னையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறேன். ஒருநாள் பணியில் இருந்தபோது, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய என் மகன், தனக்குக் காய்ச்சல் என போனில் சொன்னான். நான் `வீட்டில் இருந்த மாத்திரையின் பெயரைச் சொல்லி, அதைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடு. நான் சீக்கிரமே வந்துவிடுகிறேன்' எனச் சொன்னேன்.  அலுவலகம் முடிந்ததும் ப்ளேஸ் கூலில் இருந்த என் மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். வெகுநேரம் காலிங் பெல் அழுத்தியும் என் மகன் கதவைத் திறக்கவில்லை. பயந்துபோய் பால்கனி வழியே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், அதிகக் காய்ச்சல் மற்றும் மாத்திரை தந்த மயக்கத்தால் தூங்கிவிட்டான். அந்த அரை மணி நேரம் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பணிக்குச் செல்லும் ஒவ்வொரு தாயும் இதுபோன்ற கொடூர நிமிடங்களைக் கடந்திருப்பார்கள்.

வங்கியின் பெண் ஊழியர்களை, அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கிளைகளில் பணியமர்த்த வேண்டும் என்பது அரசு விதி. கிடப்பில் கிடந்த இந்த விதி, மோடி அரசு பதவியேற்ற பின்னர் சுற்றறிக்கையாக எல்லா வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டது. ஆனாலும் பலன் இல்லை. வங்கி நிர்வாகங்கள், பெண்கள் நலனில் அந்த அளவுக்கு அக்கறையுடன் இருக்கின்றன. வீட்டுக்கு அருகில் உள்ள கிளையில் பணி அல்லது அலுவலகத்தில் குழந்தைக் காப்பகம் என இந்த இரண்டுமே எந்த வங்கியிலும் இல்லை என்பதுதான் வேதனை.

பெண் ஊழியர்களிடம் எட்டு மணி நேரத்துக்கு மேலும் வேலைவாங்கும் வங்கி நிர்வாகம், அவர்களைப் பணி நிரந்தரம் செய்வது இல்லை. அப்படிச் செய்தால், சென்னையில் இருக்கும் பெண்களை புதுச்சேரிக்கும், கோவையில் இருக்கும் பெண்களை மதுரைக்குமாகப் பணி மாறுதல் செய்து பந்தாடுவதுதான் வாடிக்கை. நம்பித்தான் ஆக வேண்டும்... சென்னையில் உள்ள சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே பெண்களுக்கு என சுகாதாரமான தனிக் கழிவறை கிடையாது'' என்கிறார் வங்கி ஊழியரான பிரேமலதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்