நாக் அவுட் ஆறுமுகம்!

வெ.நீலகண்டன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

றுமுகத்துக்கு வயது 65. உடம்பு கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. ஆனால், பார்வையிலும் உடல்மொழியிலும் குத்துச்சண்டை வீரனுக்கே உரிய உக்கிரம் குறையவில்லை.

40 ஆண்டுகளுக்கு முன்னர், வடசென்னையே கொண்டாடிய பாக்ஸர். `நாக் அவுட் கிங் ஆறுமுகம்’ என்றால் எதிராளி கொஞ்சம் திகைத்துத்தான் களம் இறங்குவார். வடசென்னை மக்களின் முக்கியப் பொழுதுபோக்காகவும் கௌரவமாகவும் இருந்த குத்துச்சண்டை போட்டியில், 12 ஆண்டுகள் அன்லிமிடெட் சாம்பியனாகக் கொடிகட்டிப் பறந்தவர். அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இப்போது சென்னை, ராயபுரம் பழைய அமராஞ்சிபுரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். துறைமுகத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் சொற்ப வருமானமும், அவ்வப்போது சினிமாவில் கிடைக்கிற வாய்ப்புகளுமே வாழ்வாதாரம். ஆறுமுகம்... நாக் அவுட் கிங் ஆறுமுகமாக உருவானது எப்படி?

1930-களில் வடசென்னை இளைஞர்களின் வாழ்வாகவும் உயிராகவும் கனவாகவும் இருந்தது குத்துச்சண்டை. சூளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இடியாப்ப நாயக்கர் பரம்பரை என்றும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சார்பெட்டா பரம்பரை என்றும் பிரிந்து நின்று மோதினார்கள். வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது பரம்பரைக்கான கௌரவம். காலப்போக்கில், குத்துச்சண்டை வணிகமாக உருவெடுத்தது. கான்ட்ராக்டர்கள், இரு பரம்பரைகளிலும் வீரர்களைத் தேர்வுசெய்து, பணம்  கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து, டிக்கெட் போட்டு குத்துச்சண்டைப் போட்டிகள் நடத்தி னார்கள். இது `பப்ளிக் பாக்ஸிங்’ என்று அழைக்கப் பட்டது. டி20 கிரிக்கெட் போட்டிகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் போலவே, குத்துச்சண்டைப் போட்டிகளுக்கும் வரவேற்பு கிடைத்தது. மைதானங்களில் ரசிகர்கள் குவிந்தார்கள். தங்கள் அபிமான வீரர் வெற்றி பெற்றபோது கொண்டாடிய ரசிகர்கள், தோற்றபோது மைதானத்தை அடித்து உடைத்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன. 1985-ம் ஆண்டு வரை வடசென்னையில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது `பப்ளிக் பாக்ஸிங்'. அதில் அழிக்க முடியாத சாதனைகளைப் பதிவுசெய்தவர் ஆறுமுகம். 

“நான் சிறுவனா இருந்தப்ப, சுந்தர்ராஜ், என்.மாசி, டி.டி.மாசி, கித்தேரி முத்து, அருணாச்சலம்னு இங்கே ஏகப்பட்ட வீரர்கள் இருந்தாங்க. இவங்களைப் பார்த்து கைகொடுக்கிறதுக்கே அவ்வளவு போட்டி இருக்கும். நாமளும் குத்துச்சண்டை வீரனாகி ஒரு போட்டியிலயாவது மோதிப் பார்த்துடணும்கிற கனவு எனக்கு.

அப்பா மீனவர். 8-வது வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல படிப்பு ஏறலை. மனசு முழுக்க குத்துச்சண்டையில இருந்தா படிப்பு எங்கே ஏறும்? சின்ன வயசுல இருந்தே உடம்பை ஃபிட்டா வெச்சுக்குவேன். அப்பாகூட மீன் பிடிக்கப் போவேன். அப்ப எல்லாம் துடுப்புப் படகுங்கதான். அதிவேகமா துடுப்புப் போடுவேன். மீன்பிடித் தொழில்ல ஒருத்தன் நின்னுட்டா, பிறகு அவன் எல்லா தொழிலுக்குமே செட் ஆகிருவான். அந்த அளவுக்குச் சிரமமான வேலை. நெடுந்தூரம் நீச்சலடிப்பேன்; கால் புதையிற மணல்ல ஓடுவேன்; நல்லா சாப்பிடுவேன்.

அப்ப ரயில்வேயில குத்துச்சண்டைக்குப் பயிற்சி கொடுத்தாங்க. அங்கே போய் சேந்துட்டேன். அது அமெச்சூர் பாக்ஸிங். ஜெயிச்சா கப்பு மட்டும்தான் கொடுப்பாங்க. நேஷனல் லெவல்ல கோல்டு மெடல் வாங்கினா, ரயில்வேயில் வேலை கிடைக்கும். எனக்கு வேலை எல்லாம் லட்சியம் இல்லை. பாக்ஸர் ஆகணும். அவ்வளவுதான். நிறையப் போட்டிகளுக்குப் போனேன். இதுக்கு இடையில, கடலுக்கு நடுவுல எண்ணெய் எடுக்கிற ரிக் கப்பல்ல லேபர் வேலை கிடைச்சது. ஒரு மாசம் வேலை, ஒரு மாசம் ஓய்வு. ஓய்வுல கிளவுஸ் மாட்டிக்கிட்டு குத்துச்சண்டைக்குப் போயிருவேன்.

1976-ம் ஆண்டுல நேஷனல் லெவல்ல கோல்டு மெடல் வாங்கினேன். ரயில்வேயில் 270 ரூபாய் மாதச் சம்பளத்துக்கு வேலை கிடைச்சது. ஆனா, அப்ப நான் ரிக் கப்பல்ல அஞ்சாயிரம் சம்பளம் வாங்கிட்டிருந்தேன். ரயில்வே வேலையே வேணாம்னுட்டுத் திரும்பவும் கப்பல் வேலைக்குப் போயிட்டேன்’’ - குலுங்கிச் சிரிக்கிறார் ஆறுமுகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்