தங்க மாரி!

அதிஷா, வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

 மாரியப்பனுக்கு அப்போது வயது 9. விபத்தில் சிக்கி, ஒரு கால் ஊனமான சிறுவன். சரியாக ஓடவோ, நடக்கவோ முடியாது. எல்லா குழந்தைகளைப்போல தெருவில் இறங்கி விளையாட அவனுக்கும் ஆர்வம். ஆனால், அவனை யாரும் எந்த விளையாட்டிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. உட்கார்ந்து விளையாடும் ஆட்டத்தில்கூட அவனுக்கு இடம் இல்லை. கண்களில் நீர் சுமந்து, விளையாட்டை ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருப்பான். தாங்க முடியாத அழுகை வரும். இரவில் வீட்டுக்குத் திரும்புவான். அம்மாவிடம், `அம்மா எல்லாரும் என்னை `மொண்டி... மொண்டி!'னு சொல்லி, விளையாட்டுல சேர்த்துக்க மாட்டேங்கிறாங்கம்மா' என அழத் தொடங்குவான். மகனின் நிலையைக் காண சகிக்காமல் அம்மாவுக்கும் அழுகை வரும். ஆனால், அதை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். `அழாதே கண்ணு, நமக்கும் ஒரு நேரம் வரும். நீயும் ஒருநாள் ஜோரா விளையாடுவ' என்று ஒவ்வொரு முறையும் ஆறுதல் மருந்துகளை அள்ளிப் பூசுவார்.

1​2​ஆண்டுகளுக்குப் பிறகு, அதிகாலை  3:30 மணிக்கு பெரியவடகம்பட்டி கிராமத்தின் ஒட்டுமொத்த ஜனமும் அந்த இளைஞனுக்காக கால் கடுக்கக் காத்திருந்தது. மாரியப்பன் விளையாடுவதைக் காண,​ பஞ்சாயத்து கம்ப்யூட்டர் முன் ஒட்டுமொத்த கிராமமும் கூடியிருந்தது.  ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவின் இறுதிச்சுற்று. மாரியப்பன் ஒவ்வொரு முறை எம்பிக் குதிக்கும்போதும் கிராமமே கிளர்ந்தெழுந்து அடங்கியது. ஒன்பதாவது இடத்தில் இருந்து, அடுத்தடுத்த முயற்சிகளில் தாவிக் குதித்து அதிகாலை 4:30 மணிக்கு முதல் இடத்தைப் பிடித்தபோது, பெரியவடகம்பட்டியில் சின்னதாக ஒரு நிலநடுக்கம் வந்தது. ஊரே மகிழ்ச்சியில் கொண்டாடித் தீர்த்தது. அந்த அதிகாலையில் ஒரு நாயகன் உதயமாகியிருந்தான்.

மாரியப்பன் தங்கவேலு, சேலம் டேனிஷ்பேட்டையை அடுத்த பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர். ரியோவில் ரெகுலர் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் தொடங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார்.

எந்தவித வசதியும் இல்லாத சூழலில், சுயமாகப் பயிற்சிசெய்து இந்த இமாலய இலக்கை எட்டியிருக்கிறார் மாரியப்பன். உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரம் பாய்ந்து, தங்கம் வென்று, தமிழ்நாட்டையே தலைநிமிரச் செய்திருக்கிறார்.

மா
ரியப்பனுக்கு மூன்று வயது இருக்கும்போதுதான் அந்த விபத்து நடந்தது. சாலையோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அந்தப் பக்கமாக வந்த பேருந்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டான். அதில் வலது கால் நசுங்கி முழுமையாகச் செயல் இழந்துபோனது.

பள்ளியில் படிக்கும்போதே மாரியப்பனுக்கு விளையாட்டில் ஆர்வம். உடல் குறைபாட்டால் எதிலும் கலந்துகொள்ள முடியாத நிலை. பள்ளியில் மற்ற மாணவர்கள் எல்லோரும் உயரம் தாண்டுதலிலும் நீளம் தாண்டுதலிலும் அசத்திக்கொண்டிருப்பார்கள். அதை, தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதுதான் மாரியப்பனின் பொழுதுபோக்கு. எல்லோரும் பயிற்சி முடித்துக் கிளம்பிய பிறகு, யாருமே இல்லாத நேரத்தில்தான் மாரியப்பனின் பயிற்சி தொடங்கும்.

தன்னந்தனியாக தன்னுடைய குறைகளை மறந்து, தவ்வித் தவ்வி ஓடியும் தாவியும் தாண்டியும் பயிற்சிசெய்வார். கீழே விழுந்து கைகளில் சிராய்ப்புகளும் ரத்தமுமாக வீட்டுக்குப் போவார். வறுமையில் சிக்கிக்கிடந்தது மாரியப்பனின் குடும்பம். நான்கு பையன்கள் இருக்கும் பெரிய குடும்பம். கைக்குழந்தைகளாக இருந்தபோதே அப்பா அனைவரையும் தனியே தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார். ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தன் ஒற்றை வருமானத்தில் வளர்த்தெடுத்தார் மாரியப்பனின் அம்மா சரோஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்