சொல்வனம்

அப்பாவின் அழைப்பு

நடமாடும் தொலைபேசிகள்
அறிமுகமாகும் முன்னரே இறந்துபோன அப்பா
நேற்றென் கனவில் தொலைபேசினார்
புகையிலைப் பொருட்களின் தடை பற்றி அறியாத அவர்
இரண்டு சிசர்ஸ் வாங்கிவரச் சொன்னார்
வெளிநாட்டு ரகங்களும் வெகுஇயல்பாய்ப் புழங்கும்
அரசு மதுபானக்கடைகள் குறித்து அறிந்திராத அவர்
`கால் பாட்டில் நெப்போலியன் கிடைக்குமா?’ என்றார்
நாய்களுக்கான பிரத்தியேக உணவுகளை அறிந்திராத அவர்
தெருமுனை செட்டியார் கடையில்
டைகருக்கு ஒரு பாக்கெட் வர்க்கி வாங்கிவரப் பணிக்கிறார்
பின்னிரவு வரை அவருக்கு கால் பிடித்துக்கொண்டே
அமர்ந்தபடியே உறங்கிப்போகும் அம்மா
இப்போது சர்க்கரை நோயில் அவதிப்படுவதை அறியாத அவர்
`அம்மாவுக்குப் பிடித்த தேநீர்ப்பொடிப் பொட்டலம்’ என்கிறார்
அப்படியே எனக்கு விருப்பமான வாழைச்சீப்பை
வாங்கிக்கொள்ளும்படி சொல்லும்போதே
கனவு கலைந்து இணைப்பு துண்டித்தது.
எப்போதும் நான் உறங்கிய பின்னரே வீடு வரும் நீங்கள்
எனக்குப் பிடித்த வாழைப்பழங்களை
எனது தலையணையருகே வைத்துச்செல்ல,
பின்னாளில் அம்மா சொன்னதுபோல்
நான் பல்கூட துலக்காமல் உண்ண
அதை மட்டுமாவது நீங்கள்தானப்பா வாங்கி வரவேண்டுமென
அவரிடம் பதிலுரைக்க வேண்டும்
நான்காம் தலைமுறையோ
ஐந்தாம் தலைமுறையோ
இறந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்
நெட்வொர்க் எதுவென விளம்பரம் வரும் வரையோ
இன்னொரு கனவில் அவரே தொடர்புகொள்ளும் வரையோ
நான் காத்திருக்கத்தான் வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்