ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

ப.திருமாவேலன், படம்: க.பாலாஜி

காவிரி கைவிரித்துவிட்டால், நெல், புல் ஆகிவிடும்; வாழை, தலை சாய்ந்துவிடும்; தென்னை, தன்வினை என வருந்தும்; மா, ‘அம்மா' எனக் கத்தும்; கரும்பு, வெறுப்பு அடைந்துவிடும்; மஞ்சள், வஞ்சிக்கப்பட்டதாக வேதனைப்படும். பல்வேறு ஆறுகள் ஓடியதால், திருமேனி செழித்த தமிழ்நாட்டின் உண்மை நிலவரம் இதுதான்.

ஜூன் 12-ம் நாள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் மேட்டூர் அணை. மூன்று மாதங்கள் கடந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ‘கனத்த இதயத்துடன்' கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ள 15 டி.எம்.சி தண்ணீரை வைத்து சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்புப் பாசனம் பெற வேண்டுமானால், தமிழ்நாட்டு விவசாயிகளின் கையில் மந்திரக்கோல் இருந்தால் மட்டும்தான் சாத்தியம். உரக்கக் கத்துவதற்கு தொண்டைக் குழியிலும், உணர்ச்சிவசப்பட்டு அழுவதற்கு கண்ணுக்குழியிலும்கூட நீர் இல்லாமல் வறண்டுபோய்விட்ட விவசாயிக்கு, மந்திரக்கோல் எங்கு இருந்து கிடைக்கும்?

மைசூர் மன்னராட்சிக்கும் - அன்றைய சென்னை ராஜதானி பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி (1924) தமிழ்நாட்டுக்குத் தரவேண்டியது 576.68 டி.எம்.சி தண்ணீர். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், 389 டி.எம்.சி-யாக அது குறைக்கப்பட்டது. காவிரி ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, அதை 205 டி.எம்.சி ஆக்கியது. இறுதி அறிக்கை 192 டி.எம்.சி-யாகக் குறைத்தது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வைத்துள்ள கோரிக்கை 50 டி.எம்.சி தண்ணீரையாவது விடுங்கள் என்பது. உச்சத்தில் உட்கார்ந்தபடி நீதிபதிகள் போட்ட உத்தரவு 15 டி.எம்.சி. இதைத்தான் கனத்த இதயத்துடன், திறந்துவிட்டிருக்கிறார் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா. ‘இங்கே எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை என்கிறபோது, தமிழ்நாட்டு விவசாயத்துக்கு எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும்? உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சீராய்வு மனு போடப்போகிறோம்' என்றும் சித்தராமையா சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்காவிட்டால் நீதிமன்றக் கண்டனம் வந்துவிடும் என்பதால் திறந்துவிட்டுவிட்டார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக, இப்படி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிராக கன்னட இனவெறியைத் தூண்டும் கும்பல் நடத்தும் ‘பந்த்', சித்தராமையா அரசின் ஆசீர்வாதத்துடன்தான் நடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்