ஆண்பால் பெண்பால் அன்பால்

#MakeNewBondsபுதிய பகுதி - 1இயக்குநர் ராம், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, ரவி

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். இந்தப் புரிதலை, வரும் வாரங்களில் வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர்.

அவர்கள், வேறு ஒரு தீவில் வாழ்பவர்கள்; ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கும் தேவதைகள். மஞ்சள், மருதாணி, கண்ணாடி வளையல்கள், மூக்குத்தி, கொலுசு போன்ற விசேஷமான பொருட்கள் கொட்டிக்கிடக்கும் ரகசிய மாடங்களில் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள், தலை தூக்கி நடக்க மாட்டார்கள். அவர்கள் கூந்தல் காய, வெகு நேரம் பிடிக்கும். அவர்கள் வீட்டு ஆண்கள் தவிர, வேறு ஆண்களுடன் பேச மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த இடம் கோயில். அவர்கள் வெள்ளிக்கிழமையோ, சனிக்கிழமையோ ஏதோ ஒரு நாளில் விரதம் இருப்பார்கள். அதிகாலை எழுந்து, விருந்து சமைப்பார்கள். பொழுது போகாதபோது வெயில் படாத தாழ்வாரங்களில் தாயம் விளையாடுவார்கள். அவர்களுக்கு உலக நடப்புகளில் பெரும் ஆர்வமோ, அறிவோ கிடையாது. யாருக்கும் தெரியாமல் வார இதழைப் படிப்பார்கள். குழுவாகச் சென்று எப்போதாவது திரைப்படம் பார்ப்பார்கள். வானொலியோடு சேர்ந்து பாடுவார்கள். வெளியே வருவதாக இருந்தால், வீட்டு ஆள் இல்லாமல் வெளியே வர மாட்டார்கள். விளக்கு ஏற்றும் முன்னர், வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். 1974-ம் ஆண்டில் பிறந்த எனக்கு, 18 வயது வரைக்கும் பெண்கள் பற்றி இருந்த அபிப்பிராயம் இதுவே!

எட்டாம் வகுப்பு வரை, அரை டிரவுசர் போட்டுக்கொண்டு பெரிய கால்பந்து மைதானத்தில் நாங்கள் சின்னஞ்சிறு பந்துகளாக கொட்டிக்கிடக்கும் கற்களுக்கு நடுவே எத்திக்கொண்டிருந்த ஓர்அலுப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போது எல்லாம் பள்ளிக்கூடங்களில் கால்பந்து மைதானம் இருந்தது... கால்பந்துகள்தான் இல்லை.

co-education-தான் என்றாலும் சிறுமிகளோடு எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. சிறுமிகளோடு பேசுவது சில சமயங்களில் கெளரவக் குறைச்சல் எனக் கருதப்பட்டது. முதல் மதிப்பெண் எடுக்கும் சிறுமிகள் மீது அளவு கடந்த கோபத்தோடும் எரிச்சலோடும் சிறுவர்கள் இருந்தார்கள். அனிதா தேசாயின் `fasting feasting' என்ற நாவலை, பின்னொரு நாள் படித்தபோது புரிந்தது,  பெண்கள் விரதம் இருப்பதற்கும் விருந்து படைப்பதற்கும் படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணமே அன்றைய பொது புத்தியின் எண்ணம் என்று. அந்தப் பொது புத்திக்கு இடையேதான் நாங்கள் வளர்ந்தோம் ஆண்களாக.

ஒன்பதாம் வகுப்புக்குச் செல்வது என்பது, சிறுவன் வாலிபனாக மாறுவது என்ற கிளர்ச்சியைத் தந்த மாற்றம். ஒன்பதாம் வகுப்பில் இருந்து சிறுவர்கள் தங்கள் அரை டிரவுசரை அணிய வேண்டியது இல்லை. முழு பேன்ட் போடலாம். பெரும்பாலான வீடுகளில் ஒன்பதாம் வகுப்புக்குப் போகும்போது சைக்கிள் வாங்கித் தருவார்கள். `இதயம்' படத்தில் `ஏப்ரல் மேயிலே...' என சைக்கிளில் பாடுவது. `வருஷம் 16' படத்தில் கார்த்திக் `ஏ... அய்யாச்சாமி, உன்... ஆளக்காமி...' எனப் பாடி வருவது. பெண்கள், தாவணி போட்டு வருவார்கள். `செந்தூரப்பூவே' படத்தில் நிரோஷா தேன் சிந்த அணிந்துவரும் அதே நீல நிறத் தாவணியும் வெள்ளை கைச்சட்டையும்.  அந்தப் படங்கள் கொஞ்சம் முந்திப்பிந்தி வந்திருந்தாலும் அதுபோன்ற மனதோடுதான் நாங்கள் அன்று பள்ளிக்கூடம் சென்றோம். பாட வரவில்லை என்றாலும், நாங்கள் பெண்கள் பின்னால் நின்றுகொண்டு பாடினோம். `பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி, books-ஐ எல்லாம் நீ சுமந்தால் பாவமடி...', `ஏ பப்பளக்கிற பளபளக்கிறப் பப்பாளிப் பழமே...' போன்ற பாடல்களால் நிறைந்தது ஒன்பதாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான காலம்.

அப்பாவும் அம்மாவும் கடவுள் முன் வேண்டிக்கேட்டால்... குழந்தை, அம்மா வயிற்றில் வரும் என்ற உயிரியல் அறிவோடு பன்னிரண்டரை வயதில் நான் ஒன்பதாவது போனேன், நீல நிற BSA slr சைக்கிளில் காக்கி நிற முழு பேன்ட்டோடு. 1987 ஜூன்-3 என நினைவு. கொஞ்சம் குளிரும் நிறையக் காற்றும் வீசும் கோவையின் ஜூன் மாதம். பார்த்தீனிய செடிக் கூட்டத்துக்கு நடுவே தனித்துக்கிடந்த பள்ளி. வேறு பள்ளிக்கூடத்தில் இருந்து புதிதாக ஒரு சிறுமி அன்றைக்கு மதியம் என் வகுப்புக்குள் நுழைந்தாள் new admission . என்ன பிடித்தது, ஏன் பிடித்தது என இன்று வரை தெரியவில்லை. அந்த new admission சிறுமியை `இது என் ஆள்!' என நான் சொன்னேன். ஒருவேளை அவள் பெயர் பிடித்தது என நினைக்கிறேன். அதுவரை கேட்டிராத பெயர். `பொன்நிலவு தோன்றிடும் நன்னாளிது நன்னாளிது, என் மனதினில் மலர்ந்திடும் பொன்னாளிது பொன்னாளிது...' எனப் பாட்டு எழுதி இலக்கிய மன்றத்தில் பாடுகிறேன் என்ற பேரில் பேசியக் கூத்துக்கள். வீட்டைக் கண்டுபிடிக்கிறேன் என, பேருந்தை சைக்கிளில் துரத்திய சாகசங்கள், அவள் போகும் பேருந்திலேயே ஏறி, அவள் இறங்கும் நிறுத்தத்தில் இறங்கி, அவளோடு நடந்து அவள் வீட்டைக் கண்டுபிடிப்பவன் காதலன் அல்ல, பேருந்தை ஓட்டை மிதிவண்டியில் குறைந்தபட்சம் பத்து நண்பர்களோடு துரத்திச் சென்று கண்டுபிடிப்பவனே காதலன் என்ற இலக்கணத்தைக் கற்றுத்தந்த திரைப்படங்களின் காலம் அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்