என்ன செய்யப்போகிறோம்?

க்டோபர், நவம்பர் மாதம் வந்தால், வழக்கமாக தீபாவளிக் கொண்டாட்டக் குதூகலம்தான் நமக்குள் வரும். ஆனால் இந்த ஆண்டோ, மெல்லிய பயம் அடிவயிற்றைக் கவ்விக்கொண்டிருக்கிறது. காரணம், சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் பெய்த பலத்த மழையும் பயங்கர சேதமும்தான்!

கடந்த ஆண்டு வெள்ளச் சேதத்துக்குக் காரணமாக இருந்த அத்தனை காரணிகளையும் இப்போது களைந்துவிட்டோமா? ஆறுகள் மற்றும் கால்வாய்களின் கரைகளைப் பலப்படுத்திவிட்டோமா?
நீர்நிலைகளை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டோமா? மழைநீர் வடிகால் கால்வாய் தொடர்பான பணிகள் முழுமையடைந்துவிட்டனவா? எவ்வளவு பலத்த மழை வந்தாலும் மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டனவா என்ற கேள்விகள், நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மழை வெள்ளப் பாதிப்பு வராமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கக் கோரியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுத்து, அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இனிவரும் காலங்களில் பெருவெள்ளப் பாதிப்பு தொடராமல் தடுக்க, தகுதிவாய்ந்த நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அரசு அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

வீடுகளுக்குள் புகுந்துவிட்ட வெள்ளத்தை மோட்டார் பம்ப்செட் போட்டு வெளியேற்றுவது, உணவுப் பொட்டலங்கள் கொடுப்பது, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி வெள்ள நிவாரண நிதியைப் பெற்றுத்தருவது... இவை மட்டுமே நிவாரணப் பணிகள் அல்ல என்பதை அரசு ஆழமாகப் புரிந்துகொண்டிருக்கும் என நம்புகிறோம். ஆம், வரும் முன் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை நமக்கு. வெள்ளப் பாதிப்பைத் தடுப்பது குறித்த எத்தகைய பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும், சென்ற ஆண்டு அத்தனை இக்கட்டிலும் திறமையுடனும் மனிதாபிமானத்துடனும் செயல்பட்ட தன்னார்வலர்களையும் இணைத்துக்கொள்ளலாம். அவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்களின் ஒத்துழைப்போடு பணிகளை அரசுத் தரப்பு உடனடியாக முன்னெடுக்கலாம்.

வரும் முன் காத்தால்தான் வருங்காலம் வளமாக இருக்கும். பாதிப்பில் இருந்து கற்கவேண்டிய முதல் பாடம் இதுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்