ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ம.செந்தமிழன், ஓவியங்கள்: ஹாசிப்கான், எஸ்.ஏ.வி.இளையராஜா

ல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத் தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர் நிலைக்கும், சந்ததி தழைக்கும்.

நமது பல்லாயிரம் ஆண்டுகால மரபில், வேளாண்மையை முழுத் தொழிலாக நம் முன்னோர் செய்ததே இல்லை. உணவு படைக்கும் துறை என்பதால், வேளாண்மையில் வணிக நோக்கம் மிகக் குறைவாகவும், பொது நோக்கம் கூடுதலாகவும் இருந்தன. இதனால், இயற்கை விதிகளுக்குப் புறம்பான தொழில்நுட்பங்களை நம் முன்னோர் கையாளவில்லை.

நமக்கு ரசவாதம் தெரிந்திருந்தது. நம் சித்தர்கள் தாவரங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தவர்கள்தான். ஒவ்வோர் உயிரினத்திலும் உள்ளீடாக இருக்கக்கூடிய உயிர்வேதி மூலக்கூறுகளைப் பற்றிய பாடம் நமக்கு நிச்சயமாகப் புதியது அல்ல. சுண்ணாம்புக் கீரை என்ற தாவரத்தில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) கூடுதலாக இருப்பது கிராமத்து மனிதர்களுக்கு நன்கு தெரியும். எந்த ஆய்வகத்திலும் அமிலங்களை ஊற்றி, நுண்ணோக்கிகளைக் குவித்து, இந்தத் தாவரத்தில் சுண்ணாம்புச் சத்து உள்ளது எனக் கண்டுபிடிக்கப்படவில்லை. நமக்கே உரித்தான மரபுவழிபட்ட மெய்யறிவின் விளைவாகக் கிடைத்த கொடைகள் இவை.

பிரண்டை மற்றும் குப்பைமேனித் தாவரங்களைப் பற்றி, நவீன மருத்துவத் துறை இப்போது பக்கம் பக்கமாக எழுதுகிறது. இவற்றின் உள்ளீடாக உள்ள உலோகங்களையும் வேதிப்பொருட்களையும் பாடல்களில் எழுதிவைத்து, சீடர்களுக்குக் கற்றுத்தந்தவர்கள் நம் முன்னோர்.

தாவரங்களின் உள்ளிருக்கும் வேதிப் பொருட்களையும் உலோகங்களையும் புரிந்துகொண்டு அவற்றின் இயற்கையான குணங்களைச் சிதைத்து விளைச்சலை உயர்த்தும் பொருளாதார நடவடிக்கையில் நம் முன்னோர் இறங்கவில்லை. ஒருவர் கொலை செய்யாமல் இருப்பதால், அவருக்கு வீரம் இல்லை என்று பொருள் அல்ல. நமது மரபில் வேளாண் தொழில்நுட்பங்களில் வேதிப்பொருட்களை ஈடுபடுத்தவில்லை என்பதால், நம் முன்னோர் அறியாமையில் வாழ்ந்தனர் என்று பொருள் அல்ல.

பன்னாட்டுக் குளிர்பானங்களின் நச்சுப் பிடியில் மக்கள் சிக்கத் தொடங்கியபோது, இயற்கை ஆர்வலர்கள் இளநீரை முன்வைத்தனர். இளநீரின் சத்துக்கள் மற்றும் சிறப்புகள் குறித்த பரப்புரைகள் வேகமாக அரங்கேறின. மாநகரங்களில் இளநீர் பருகும் வழக்கம் தேவைக்கு அதிகமாக உயர்ந்தது. நவீனர்களின் சொற்களில் கூறவேண்டுமானால், இளநீர் உற்பத்தியில் பணம் கொழிக்கத் தொடங்கியது. இளநீர் ஏற்றிய வாகனங்கள், நகரங்களிலும் மாநகரங்களிலும் ஆயிரக்கணக்கில் வலம் வந்தன. நம் நாட்டில் இவ்வளவு இளநீர் இயற்கையான முறையில் விளைய வாய்ப்பு இல்லை. இதற்காக உயர் விளைச்சல் தென்னை நாற்றுகள் களம் இறக்கப்பட்டன. இந்த நாற்றுகளால்,  பூச்சிகளை, நோய்களைத் தாக்குப்பிடித்து வளர முடியாமல்போனது. மோசமான நோய்கள், வழக்கத்தைவிட அதிகமான வண்டுகள், பூச்சிகளின் தாக்குதல் போன்றவற்றால் தென்னந்தோப்புகள் நலிவடைந்தன.

பணம் கொட்டும் தொழிலாக ஒருபக்கம் இளநீர் மாறிவிட்டது. மறுபக்கம், தென்னை மரங்கள் நோயுற்று வாடின. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, நம் வேளாண் சமூகம் கையாளும் இரக்கமற்ற செயல்களில் மிகச் சிலவற்றை மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.

மோனோகுரோடோபாஸ் (monocrotophos) எனும் நஞ்சு, அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணங்களை விளக்கினால், குலைநடுக்கம் வரும். அதன் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறேன். ‘நம் உடலில் நரம்பு மண்டலத்தைச் சிறப்பாக இயக்கும் சுரப்பிகளில் ஒன்று கோலினெஸ்டெரேஸ் (Cholinesterase) என்பது. மோனோ குரோடோபாஸ் நஞ்சுகள் இந்த கோலினெஸ்டெரஸ் சுரப்புகளை முடக்கிவிடுகின்றன. இதன் விளைவாக, நரம்பு மண்டலம் பதற்றமடைகிறது. திடீரென உடல் ஆட்டம்கொள்ளுதல், அதிவேக மாக மூச்சுவாங்குதல், துடித்தல், வெட்டி இழுத்தல், வலிப்பு வந்து துடித்தல், படபடப்பு, கட்டுப்படுத்த இயலாத நடுக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றி துடித்துச் செத்துவிழுதல் நிகழும் வாய்ப்பை மோனோகுரோடோபாஸ் உருவாக்குகிறது. `தாவரங்களில் உள்ள பூச்சிகளும் வண்டுகளும் இவ்வாறு செத்துவிழ வேண்டும்’ என்பது நவீன மேதைகளின் கண்டுபிடிப்பு.

`சின்னஞ்சிறு உயிரினங்களை இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்வது பாவம் அல்லவா?’ என்ற அறச்சிந்தனை நம்மிடம் இருந்திருந்தால், இந்த நஞ்சு தொடக்கத்திலேயே விரட்டியடிக்கப்பட்டிருக்கும். `உற்பத்தி உயர வேண்டும். பணம் கொழிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு செயல்பட்டதன் விளைவாக, இப்போது தென்னைமரங்களின் உயிர்நாடியாக மோனோகுரோடோபாஸ் கலந்த நஞ்சுகள் மாறிவிட்டன.

தொடக்கத்தில் தென்னைக் குருத்துகள் மீது இந்த நஞ்சைத் தெளித்தார்கள். இப்போது, ஒரு நெகிழிப் பையில் நஞ்சை ஊற்றி நீர் கலந்து, தென்னைமரத்தின் வேர்களைச் சீவிவிட்டு அவற்றில் கட்டிவிடுகிறார்கள். நெகிழிப் பையில் உள்ள நஞ்சு, ஒரு மணி நேரத்தில் முழுதாக தென்னை வேர்களால் உறிஞ்சப் படுகிறது. இந்தச் செயல்முறையின் வழியாக, மரம் முழுவதும் நஞ்சாக மாற்றப்படுகிறது.

வேர்கள், நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இளநீருக்கு வழங்குகின்றன. அந்த இளநீர் நமக்கு அருமருந்தாக இருந்தது. வீடுகளில் கறிவேப்பிலைச் செடி வளர்ப்போர், அந்தச் செடிகளின் வேரில் தயிர் ஊற்றுவது நமது கிராமங்களில் இருந்த வழக்கம். தயிரை வேர்கள் உறிஞ்சினால், கறிவேப் பிலையின் மணம் கூடுதலாக இருக்கும். வேர்களுக்கும் நமக்குமான உறவை நம் சமூகம் புரிந்துகொண்ட விதம் இதுதான். அது நவீனச் சிந்தனை இல்லாத `மூடர்களின்’ காலம். இது பகுத்தறிவும் நவீனக் கல்வியறிவும் செழித்து வளர்ந்துள்ள காலம். அதனால், வேரில் நஞ்சு ஊற்றுகிறார்கள்.

வேர்களில் மோனோகுரோ டோபாஸ் நஞ்சைக் கட்டிய பிறகு, `இரு மாதங்களுக்கு அந்தத் தென்னையில் இருந்து காய், இளநீர் எதையும் பறிக்கக் கூடாது’ என்ற கட்டுப்பாடு வேளாண் துறையினரால் விதிக்கப்பட்டுள்ளது. வேறு பல நஞ்சுகளும் தென்னை வேரிலும் தண்டிலும் செலுத்தப்படுகின்றன. அவற்றைச் செலுத்தினால், ஆறு மாதங்களுக்கு காய் பறிக்கக் கூடாது. கூர்மையான ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, `வலிக்காமல் குத்த வேண்டும், ரத்தம் சிந்தாமல் அறுக்க வேண்டும்’ என்பது போன்ற உபதேசங்களை அந்த ஆயுதங்களின் மேல் அச்சிட்டு விற்பனைசெய்வது நவீன அறிவாளிகளின் நேர்மை.

தென்னையில் நிகழும் `பசுமைப் புரட்சி’ மோனோ குரோடாபாஸுடன் முடியவில்லை. சல்ஃபோனமைடு (Sulfonamide) எனும் வேதி நஞ்சுக்கான மாத்திரைகளை தென்னைமரத்தில் பதிப்பது, வேளாண் துறையில் அரங்கேறும் மற்றொரு புரட்சிகரத் தொழில்நுட்ப நடவடிக்கை. தென்னையின் குருத்துகளில், பாளைகளில் இருக்கும் வண்டுகளை அழிப்பதற்காக சல்ஃபோனமைடு நஞ்சு வில்லைகளைப் பயன்படுத்துகிறார்கள். தென்னைமரத்தின் தண்டுப் பகுதியில் ஒரு துளையிட்டு அதன் உள்ளே மாத்திரைகளைப் பதித்து, அந்தத் துளையை சிமென்டால் அடித்துப் பூசிவிடுவது இந்தத் ‘தொழில்’நுட்பம். இவ்வாறு செய்த சில நிமிடங்களில், தென்னைமரத்தின் உச்சியில் இருந்து வண்டுகள் செத்து விழும் என்று பரவலாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு வீரியமிக்கது சல்ஃபோனமைடு நஞ்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்