திரைத்தொண்டர் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம்

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பு, என் அதிர்ஷ்டம். கமல் சார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, எத்தனையோ மொழிகளில் அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் `குள்ள அப்பு’ கேரக்டர், எனக்கு இன்னமும் ஆச்சர்யம். அந்தப் பட ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் முடிந்த சமயத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பத்திரிகைகளில் வந்தது. ‘இந்த ஆளு எப்படி இப்படிப் பண்ணினார்?’ என எனக்குப் பயங்கர அதிர்ச்சி. `இது எப்படிச் சாத்தியமானது?' என யோசித்துக்கொண்டிருந்தேன். அது கிராஃபிக்ஸ் அறிமுகம் ஆகாத காலம்.

அந்தச் சமயத்தில் கமல் சாரின் மேனேஜர் டி.என்.சுப்ரமணியம், ‘சார் உங்களை அழைச்சுட்டு வரச் சொன்னார்’ என்று வந்தார். போனேன். ‘நான் ‘அபூர்வ சகோதரர்கள்’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். எடுத்த வரைக்கும் அந்தப் படத்தை உங்களுக்குப் போட்டுக் காட்டலாம்னுதான் கூப்பிட்டேன். பார்த்துட்டு உங்க அபிப்பிராயம் சொல்லுங்க’ என்றார். பார்த்தேன். பயங்கர ஷாக். காரணம், என் மனதில் இருந்த எதிர்பார்ப்பை அந்தப் படம் பூர்த்திசெய்யவில்லை. ‘இதை எப்படி அவரிடம் சொல்வது?’ என்ற தயக்கம்.

‘உங்க மனசுல என்ன தோணுதோ... சொல்லுங்க’ என்றார்.  கமல் சார், விமர்சனங்களை எப்போதும் ஏற்றுக்கொள்வார்.  `இந்தக் கதையே தப்பு கமல். குள்ளனா நடிக்கிறதே ரொம்பக் கஷ்டம். நீ இவ்ளோ சிரமப்பட்டு நடிச்சும், கதை சரியில்லாததால் படம் ஓடலைன்னா, நீ் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போயிடும்’ என்றேன். ‘எடுத்ததை வெச்சு ஏதாவது மாத்தலாமா?’ என்றார். ‘அடிப்படையே வீக்கா இருக்கிறதால, எடுத்ததை வெச்சு எதுவும் பண்ண முடியாது’ என்றேன்.

‘அப்ப இப்பிடியே டிராப் பண்ணிடவா?’ என்றார். ‘இந்த மாதிரி ஒரு ரோல் பண்ண, உலகத்துல எந்தக் கலைஞனாலயும் முடியாது. ஆனா, அதை நீ பண்ணியிருக்க. டிராப் பண்ணாத. உனக்கு அடுத்த ஷெட்யூல் எப்ப?’ என்றேன். ‘இன்னும் ரெண்டு வாரத்துல தொடங்குது’ என்றார். ‘அந்த ஷெட்யூல்லயே இதுவரைக்கும் எடுத்ததுக்குத் தகுந்த மாதிரி எழுதிக் கொடுத்துடுறேன். ஒரு வாரம் டைம் கொடு’ என்று நேரம் வாங்கிக்கொண்டேன். நான்கு நாட்களிலேயே அந்தப் படத்துக்கான கரெக்‌ஷன்களைச் செய்துகொடுத்தேன்.

நான் செய்த மாற்றங்கள், கமல் சார் உள்பட அந்தப் படக் குழுவினருக்கும் பிடித்திருந்தது. அவர்கள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்திருந்த நடிகர்-நடிகைகளையே பயன்படுத்தும் வகையிலும், அநாவசியமான செலவுகள் வைக்காத வகையிலும் அந்த மாற்றங்களைச் செய்திருந்தேன். அதாவது, கமல் சார் தன் மனதில் நினைத்திருந்த கதையை நான் முற்றிலும் வேறு ஒரு வடிவத்தில் செய்திருந்தேன். அவர்கள் அதுவரை எடுத்திருந்த காட்சிகளை, நான் எழுதிய ட்ரீட்மென்ட்டில் பயன்படுத்த முடியாது என்பதுதான் வருத்தம்.

பிறகு, அந்த ஸ்க்ரிப்ட்டில் கமல் சார் தனக்குத் தேவையான நிறைய அழகான மாற்றங்களைச் செய்துகொண்டார். இளையராஜாவின் இசை உள்பட அந்தப் படத்தில் அனைத்துமே அருமையாக அமைந்திருந்தன. அந்தப் படம், 25 வாரங்களைத் தாண்டி ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கமல் என்ற அற்புதக் கலைஞனுடன் வேலைசெய்ய கிடைத்த அரிய வாய்ப்பு அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்