தழுவக் குழையும் நண்பா!

பாஸ்கர் சக்தி - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

1995-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஓர் இரவில்தான் க.சீ.சிவகுமாரைச் சந்தித்தேன். ஏப்ரல் மாதம் `இந்தியா டுடே' நடத்திய அறிமுக எழுத்தாளர் போட்டியில் அவன் முதல் பரிசும், நான் இரண்டாம் பரிசும் வென்றிருந்தோம். நான் எனக்கான மகிழ்ச்சியில் இருக்க, அவனோ என்னைத் தேடி முகவரி அறிந்து போஸ்ட் கார்டு அனுப்பினான். அதன் கடைசி வரிகள் `என் கதையைவிடவும் உங்கள் கதைதான் நன்றாக இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். நானும் அவ்வாறே! என் சகாவின் வெற்றி, என் வெற்றியுமாகிறது'. இந்த அபூர்வ மனசுதான் க.சீ.சிவகுமார்.

சந்தித்த நொடியே நெருங்கிவிடுவான். தேடித் தேடி எல்லா ஊர்களிலும் நண்பர்களைச் சேர்த்தான். நண்பர்களைச் சேர்க்கும் பேராவலையும் ஆர்வத்தையும் பணத்தின்மீது கொண்டிருந்தால், கோடீஸ்வரனாகி இருப்பான். ஆனால், சிவகுமார் விரும்பியது எல்லாம் மகிழ்வான பொழுதுகள் மட்டுமே. மகிழ்ந்திருக்கும் பொழுதுகளின் தொகுப்புதான் வாழ்க்கை என நம்பினான். எப்போதும் சிரித்திருக்க விரும்பிய குழந்தை மனசுக்காரனுக்கு, வேதனைகளைக் கொடுத்து வேடிக்கை பார்த்தபடியே இருந்தது வாழ்க்கை. அவற்றையும் எள்ளிநகையாடியவன் சிவா. 25 வருடங்களாக, பார்க்கும்போது எல்லாம் சிரிக்க வைத்தவன். இனி நினைக்கும்போது எல்லாம் கலங்கவைத்துவிட்டான்.

 சிவகுமாரின் கதைகளில் ததும்பும் நகைச்சுவைக்கு இணையாக, அவலங்களும் வேதனைகளும் வெளிப்படும். பெரும்பாலும் தன் வாழ்வும் சூழலும் சார்ந்தே அவன் எழுதினான். சிவாவின் மொழி அழகு, அற்புதமானது; தனித்தன்மைகொண்டது. நகைச்சுவையும் அருந்தமிழ்ச் சொல்லாடல்களும் அவனது எழுத்தின் இயல்பு. தனது பிளாகுக்கு `நள்ளெண் யாமம்' எனப் பெயர் வைத்திருந்தான். இன்டர்நெட்டை `ககன ஊடகம்' எனக் குறிப்பிட்டான். `மெய்சிலிர்த்தது' என்பதை, `உடலில் குளிர்ப்புள்ளிகள் தோன்றின' என எழுதுவான். அவனது பிரதேசத்தின் தனித்தன்மையையும் பாடுகளையும் சிறப்பாக எழுதிய அவன், தனது தகுதிக்கு ஏற்ப கொண்டாடப் படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

`குறுஞ்செய்திகளைக் கடத்தும் கோபுரம்' எனும் சிறுகதையில் இறந்துபோன நண்பனைக் கடைசியாக  உயிருடன் பார்த்த தருணத்தை, சிவா எழுதுகிறான் `மரணமன்றிப் பிறிது நினைப்பொன்றைப் பரிசாகத் தராத கூற்றுவனின் அறைவாசல் காத்திருப்பு அன்றைக்கு உணரப்படாமல் போயிற்று. தழுவக் குழைகிற மகிழ்வில் மரணத்தின் நினைவின் நிழலும் எம்மைத் தீண்டுவதில்லை!'

இப்படி எழுதியவன், பொங்கல் சமயத்தில் கடைசியாகச் சந்திக்கையில் கையசைத்து விடைபெற்றான். அது நிரந்தரமான கையசைப்பு என இப்போது தெரிகிறது. அலட்சியமாகப் பேசும், சிரிக்கும், வேதனைகளைக்கூட அலட்சியமாகக் கடக்கும் சிவா, மரணத்தையும் அலட்சியத்தால் அலட்சியமாகவே அடைந்திருக்கிறான். ஆனால், அலட்சியப்படுத்திவிட முடியாத படைப்புகளையும் நினைவுகளையும் விட்டுப்போயிருக்கிறான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick