மழைப்பாடல் - கவிதை

கவிதை: அய்யப்பமாதவன்

கொடும் வெம்மையில் நகரத்தின் ஒளிச்சிதறல்கள்
எரிக்கும் ஒளிக்கீற்றென மாற்றிவிடும் போலிருந்தது
பசுமையை மரங்களிலிருந்து கருணை துளியுமின்றி
எடுத்துப்போயிருந்தது ஆகாயச் சுடர்
நிலமெங்கும் சுனைகளை பாலைவன வடிவிற்கு
செய்திருந்தது கோடை
தாகமெடுத்த பறவைகள் சிதைந்துகிடந்த நதிகளில்
செத்த மீன்களிடையே நின்றிருந்தன
சூரியன் நிரம்பிய குடங்களுடன் நீர் தேடிய பெண்கள்
வறண்ட நாவுகளில் உழன்றுகொண்டிருந்தனர்
வயலெங்கும் முடிந்த அறுவடையின் மீந்த சருகுகள்
மழைக்கான பாடலைப் பாடுவதுபோலிருந்தது
ஈரமற்ற வெளியில் பிளந்திருந்த மண் பரப்பில்
நெற்பயிர்களின் கனவுகள் ஆழப் புதைந்திருந்தன
கட்டடங்கள் முளைத்த வெளியெங்கும் இறந்துவிட்ட
மரவுடல்கள் தழைக்க வழியற்றிருந்தன
தருக்களைக் கொன்றுவிட்டு கருமுகில்கள் திரளுமெனக்
காத்திருக்கிறது பைத்தியக்காரப் பேருலகு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்