சொல்வனம்

ரயிலோட்டும் கட்டெறும்புகள்

நீளும் தண்டவாளத்தில்
ரயில் வராத நேரத்தில்
ரயிலோட்டும் கட்டெறும்புகள்
அதிர்வுகளற்று அதனதன் தூரம் கடக்கின்றன
ஏதேதோ தூக்கிச்செல்லும் எறும்புகள்
சரக்கு ரயிலாகி
உணவைக் கடத்துகின்றன
ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு
ரயில் நிலையங்களற்ற
இந்த ரயில் பயணத்தில்
எறும்புகளே பயணிகளாகவுமிருக்கின்றன
ரயிலாகவுமிருக்கின்றன
பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியுமற்ற
பயணம்
இரவிலும் பகலிலும்
தொய்வின்றித் தொடர்கிறது
எறும்புகளின் தண்டவாளப் பயணத்துக்கு
பகலில் சூரியனும் இரவில் நட்சத்திரங்களும்
வெளிச்சத் துணையிருப்பதாய்
பெருமை பீற்றுவதை நிராகரித்துவிட்டு
மேகங்கள் வானத்தை மூடிய இரவிலும்
வேகம் குறையாது பயணிக்கின்றன எறும்புகள்
தண்டவாளத்தைத் தாண்டிக் கடக்கும் பொழுதில்
மனசு புகுந்து எழுத்துக்களான எறும்புகள்
கண்ணீர்த்துளிகளாகின்றன
தூரத்தே ரயில்வரும் ஓசை கேட்கிறது

 - சௌவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்