இதயத்தை இயக்கவைக்கும் அன்பு! | Doctor couple help Rural People to Fight Congenital Heart Disease - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/09/2017)

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

தமிழ்ப்பிரபா - படங்கள்: வீ.சதீஷ்குமார்

`இலவசமாக இதய அறுவை சிகிச்சைகள் செய்கிறார் மதுரை மருத்துவர் கோபி நல்லையன்’ என்கிற  தகவல் கிடைக்க, அவரைச் சந்திப்பதற்காக மதுரைக்குச் சென்றேன்.

நல்லையனுக்குச் சொந்தமாக மருத்துவமனை இல்லை. தனியார்க்குச் சொந்தமான தேவதாஸ் மருத்துவமனையில்தான் மருத்துவர் கோபி நல்லையன் சிகிச்சை அளித்துவருகிறார். மருத்துவரின் உதவியாளர் கார்த்திக்குத் தகவல் தெரிவித்ததும், அவர் கோபி நல்லையனின் வார்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள ஒரு கட்டிலில் உட்கார வைத்துவிட்டு “இந்தா வந்துட்றேன். உக்காந்துட்டிருங்க” எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஏழு கட்டில் போடப்பட்டிருந்த வார்டு அறையில் இரண்டு கட்டிலைத் தவிர மற்ற அனைத்தும் வெற்றிடமாகவே இருந்தன. நோயாளிகள் இல்லாத கட்டில்களைப் பார்ப்பது ஏதோ ஒருவகையில் ஆறுதலாக இருந்தது. எதிர்க் கட்டிலில் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் எங்களைப் பார்த்ததும்  சில விநாடிகள் மௌனித்துவிட்டு திரும்பவும்  அவன் பாட்டியை பிராண்டுவதற்குத் தாவினான்.