கருணாநிதியின் ஒரு நாள்! | One day of Karunanidhi: Then and Now - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/10/2017)

கருணாநிதியின் ஒரு நாள்!

ப.திருமாவேலன்

லைஞர் மு.கருணாநிதிக்கு இப்போது இரண்டு தமிழ்கள் மட்டும்தான் கையிருப்பு.

சங்கத்தமிழ், குறளோவியத்தமிழ், காப்பியத் தமிழ், வீரத்தமிழ், விவேகத்தமிழ், காதல் தமிழ், கற்பனைத்தமிழ், மேடைத்தமிழ், மாநாட்டுத் தமிழ், விவாதத்தமிழ், வாக்குவாதத்தமிழ், சட்டசபைத்தமிழ், எதிர்ப்புத்தமிழ், ஆதரவுத் தமிழ், கவிதைத்தமிழ், நாடகத்தமிழ், சிறுகதைத் தமிழ், நாவல் தமிழ், சரித்திரக்கதைத்தமிழ், பத்திரிகைத்தமிழ், கடிதத்தமிழ், நகைச்சுவைத் தமிழ், ஆதாரத்தமிழ், அலங்காரத்தமிழ், உணர்ச்சித்தமிழ், எழுச்சித்தமிழ்... என எல்லாமும் தவழ்ந்த அவரது நாவில் இப்போது இருப்பது சிரிப்புத்தமிழ்,  அழுகைத் தமிழ் என்ற இரண்டு மட்டும்தான்.

அன்பானவர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். இன்னும் அன்பானவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்த இரண்டு மட்டுமே தன்னிடம் எஞ்சி இருக்கின்றன என்பதை அவரே உணரவும் செய்கிறார். அந்த உணர்வுதான் அவரை சோகப்படுத்துகிறது.

எப்போதுமே கூடு தங்காத பறவை, கருணாநிதி. வேலையே இல்லாவிட்டாலும் பறந்துகொண்டே இருப்பது அவரது பழக்கம். சி.ஐ.டி. காலனி வீட்டில் அதிகாலையில் எழும் கருணாநிதி, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் வந்து நடைப்பயிற்சி செய்துவிட்டு, கோபாலபுரம் வந்து காலை உணவை முடித்துவிட்டு, கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் சென்று உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதித் தந்துவிட்டு, மதிய உணவுக்காக சி.ஐ.டி. காலனி வந்து, சிறிது ஓய்வுக்குப் பிறகு 4 மணிக்கு கோபாலபுரம் வந்து, பார்வையாளர்களைச் சந்தித்துவிட்டு, 6 மணிக்கு மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்து, 8.30 மணிக்கு சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் செல்வது என்ற பயணத்திலேயே இருந்தார். முப்பது ஆண்டுகளாக மு.க-வின் மாறாத ஷெட்யூல் இது.