எரியும் நெருப்பில் எண்ணெய்!

ர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை  அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்திருப்பது தமிழகமெங்கும் எதிர்ப்பலைகளை எழுப்பியிருக்கிறது. காவிரிப் பிரச்னையில் தமிழகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டத் தீயில், இந்த அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் எண்ணெயை ஊற்றியிருக்கிறது.

‘கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தமிழகத்தைச்  சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவரை இன்னொரு மாநிலத்தின் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக நியமிப்பதற்குச் சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்குத்தான் இருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. அதேநேரத்தில், இதுதொடர்பாக முன்வைக்கப்படும் வாதங்களில் உள்ள நியாயங்களையும் பரிசீலிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இதுவரை, வேற்று மாநிலத்தைச் சேர்ந்த யாரும் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதில்லை. அண்ணா பல்கலைக்கழகத்துக்கென்று தேசிய அளவில் ஒரு மரியாதை இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சமீபத்திய பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 4-ஆவது இடத்திலும்,  பொறியியல் கல்வியில் 8-ஆவது இடத்திலும் இருக்கிறது. இத்தகைய சாதனைகளைச் செய்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த துணைவேந்தர்கள்தாம் எனும்போது, இன்னொரு மாநிலத்திலிருந்து ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?

17 உறுப்புக்கல்லூரிகள், 10 அரசு பொறியியல்  கல்லூரிகள்,  3 அரசு உதவி பெறும் கல்லூரிகள்,  554 தனியார் பொறியியல் கல்லூரிகள் எனத் தமிழகமெங்கும் வேர்களையும் விழுதுகளையும் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பெரிய ஆலமரம் அண்ணா பல்கலைக்கழகம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இந்த 584 கல்வி நிறுவனங்களும் வெவ்வேறு தன்மை கொண்டவை. கட்டமைப்பு வசதிகளிலும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு செயல்பட, கல்வியாளராக இருந்தால் மட்டும் போதாது; தமிழ்நாட்டைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரால்தான் இது சாத்தியமாகும். தமிழகம் முழுவதும் ‘ஆய்வு’ செய்யக் கிளம்பும் ஆளுநர், துணைவேந்தரை நியமிக்கும்முன் இந்த அம்சங்களையும் கொஞ்சம் ஆய்வு செய்திருக்கலாம்.

தமிழகத்துக்குத் தண்ணீர் கிடையாது, தமிழர்களுக்குத் துணைவேந்தர் ஆகும் தகுதி கிடையாது என்று தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதை, தமிழர்களின் தன்மானம் சீண்டப்படுவதை இனியும் தமிழகம் சகித்துக் கொள்ளாது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்