சொல்வனம்

படம்: எல்.ராஜேந்திரன்

காவிரி

கீழே வெறுமை...  
வாகன இரைச்சல்களால்
முன்பைவிட அதிகமாகவே
எதிரொலித்தது காவிரிப் பாலம்.

நீர்த்துகில்களை இழந்த
பாலத்தூண்களெல்லாம்
தன் நிர்வாணத்தை ஒருசில முட்புதர்களால்
மூடிக்கொண்டன.

அத்தூண்களின்
துகில்களெல்லாம் 
வேற்று மாநிலத் தூண்களைத் தத்தம்
இரண்டாம் உடுப்புகளாய்
அணிந்துகொண்டன.

என்றோ செத்தழுகிய
நதிப்பாம்பை இன்று வரை நோண்டித் தின்றவாறே
இருக்கும் மஞ்சள் எறும்புகள்
சாரைசாரையாய்
இங்குமங்கும் உலாவுவது
ஒரு கண்கொல்லும் காட்சி.

எதிரெதிர் படித்துறைகளில்
ஏறி இறங்கியும்,  ஆற்றின்
நீள அகலங்களில் ஓடியாடியும்
குதூகலித்தாடிய வெறுமை
கடைசியாக மூச்சிரைத்து 
ஏழைகளின் வயிற்றுப் பகுதியில் தஞ்சம் புகுந்தது.

கனத்த நெஞ்சுடன்
மணலாற்றைப் பார்க்கின்றேன்...

இரு கரைகளிலும் காய்ந்து தலை சாய்த்து
மண்டியிட்டு மன்னிப்பு கோரும் மனிதர்களைப்போல்...
கோரைப்புற்கள்.

- ஆனந்த்


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick