குற்றப்பத்திரிகை

கவிதை: யவனிகா ஸ்ரீராம்

மிகச்சுருக்கமாகக் கேட்கப்படுகிறது
ஒருவரியில்
உங்கள் கல்லறை வாசகம் அல்லது முழுவாழ்வின் செய்தி யாவும்.
யாரைப்பிடிக்கும் எனக் குழந்தைகளிடம் கேட்கும்போதே
பெற்றோர்கள் இறந்துவிடுகிறார்கள்.
எனது தேசம் என நெஞ்சுயர்த்திப் பெருமிதம்கொள்ளும் ஒருவர்தான்
‘ஆனால், அதில் ஒரு விஷயம்...’ என அச்சம் தெரிவிக்கிறார்.
எவ்வளவு நேசித்தேன் என்று கண்ணீர் சிந்தியவர்தான் கொலையாளியாகிவிட்டார்
துவரைப்பருப்புகள் காதலிசை கடவுளின் கடைக்கண்பார்வை
நாய் குரைக்கும் ஓலம் போன்றவை சுருக்கமானவைதாம்.
பல பக்கக் குற்றப்பத்திரிகையில் நீதிபதி
செக்ஷனுக்குள் வரும் வாக்கியங்களின் கீழ் அடிக்கோடிடுவது, மேலும்
வெகுநாள்களாய் பெண்களிடம் ஆண்கள்
`உனக்கு என்னதான்மா வேண்டும்’ எனக் கேட்பது போன்றவை
மிகச் சுருக்கமான கதறல்கள் எனலாம்.
குற்றமும் தண்டனையும் என்ற பெரும்பிரதி
வேட்டையாடுதலுக்கும் விவசாயத்துக்குமான
வெறும் சுருக்கம் என்பாரும் உண்டு.
என்ன செய்வது, பரிதாபம்தான்!
எதையும் சுருக்கமாகச் சொல்லத் திராணியற்றவர்கள் 
பலகாலம் நீளும் வரிசையில் மயங்கித் தரை விழுந்துவிடுகிறார்கள்தாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick