அன்பும் அறமும் - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

சப்பைத் தாண்டி அடியாழத்தில் இனிப்பைப் பொதித்துவைத்திருக்கும் வேப்பம்பழங்களை அருளும் மரம் ஒன்றின் உச்சாணியில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடியபடி அவரது கதையைச் சொன்னார். அந்தக் கதையைச் சொல்லும்போது, அவருடைய தன்னம்பிக்கையை உடல்மொழி ஊஞ்சலின் ஆட்டத்தை மீறி வெளிப்படுத்தியபடி இருந்தது. நாற்பது வயது ஆன அந்த நண்பரை, அதற்கு முன் நண்பர்களின் கூடுகைகளில் சந்தித்திருக்கிறேன். ஒரு நிமிடம்கூட அவரை ஓர் இடத்தில் இழுத்துப் பிடித்து அமரவைக்க முடியாது. துறுதுறுவெனச் சுற்றிக்கொண்டிருப்பார்.

`துக்கமே இல்லாத நபர்’ என்றுதான் அவரைப் பற்றி எண்ணியிருந்தேன். ஆனால், அவருக்குப் பின்னே கருமையின் நிழல் படிந்த கதையும் இருந்தது. அந்தக் கருமையை, துடுப்பு போட்டு அவர் கடந்து வந்த அடர்பாதையும் இருந்தது.

அவருக்கு `லுகேமியா’ என்கிற ரத்தப் புற்றுநோய் இருப்பது 2008-ம் வருடம் தெரியவந்தது. `மரணம்தான்’ என உள்ளூர் மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்துவிட்டனர். இயல்பிலேயே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். இந்தச் செய்தியை அவர் தன் குடும்பத்தினர் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. இரண்டு மாதங்கள் தோட்டத்தில் இருக்கும் அறைக்குள் போய் அமர்ந்துகொண்டு தனித்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!