ஏன் பாஸ் இப்படி இருக்கீங்க? | Never changing characters of tamil people - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

ஏன் பாஸ் இப்படி இருக்கீங்க?

நித்திஷ், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு’ எனச் சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்? ஆளே இல்லாத சகாரா பாலைவனமானாலும் சரி, பியர்ஸ் க்ரில்ஸ் திரியும் அடர்ந்த காட்டுப்பகுதியானாலும் சரி, சில பல சிக்னல்களை வைத்தே, ‘அட! இது கண்டிப்பா நம்மாளுய்யா’ எனச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அப்படி நமக்கே நமக்கான சில கபீர் குபீர் குணங்களைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

வருஷநாட்டு ஜமீன் வரிசைல வருவதா? நெவர்ர்ர்!

இந்தப் பிரத்யேக குணம் லெமூரியா காலத்திற்கும் முன்னது என வரலாற்று ஆய்வாளர் செல்லூர் ராஜு தன்னுடைய ஆய்வுக்குறிப்பில் கூறியிருக்கிறார்.   ஜீன் மரபின் தொடர்ச்சியால்தான் ‘ஆயாவுக்கு உடம்பு சரியில்லைங்க, நான் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டுப் போனா அவங்களுக்குச் சரியாயிடும்’ என தியேட்டரிலும் ‘இந்த ட்ரெயினை மிஸ் பண்ணா அடுத்த ட்ரெயின்ல போக விசா கிடைக்காதுங்க’ என ரயில்வே ஸ்டேஷன் கவுன்ட்டரிலும் முண்டியடிக்கிறோமாம். இதையும் அதே வரலாற்று ஆய்வாளர்தான் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

முன்னோருக்கு ஜே போடு!

பாயாக மடங்கி, பனிக்கூழாக உருகி, அ.தி.மு.க அமைச்சர் முதுகாக வளைந்து முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை என்பதே நிதர்சனம். ‘தொப்புளில் இருக்கும் மணிப்பூரகச் சக்கரம் கரும்பு மெஷின் சக்கரம்போல ஸ்மூத்தாகச் சுற்ற அருகே இரும்பு இருக்க வேண்டியது அவசியம். எனவேதான் இடுப்பில் பெல்ட் போடும் பழக்கம் வந்தது,’ ‘காதில் வைக்கப்படும் பூ ஓர் ஆன்டெனாபோலச் செயல்பட்டு கிரகங்களின் கெட்ட செயல்பாடுகள் நம்மைப் பாதிக்காமல் தடுக்கிறது’ என முப்பாட்டன்கள் பெயர் போட்டு என்ன வந்தாலும் அதை அப்படியே நம்பிச் சிலாகித்து ஃபார்வர்ட் செய்யும் ‘கண்ணுல ஜலம் வெச்சுண்டேன்’ டைப் தமிழர்கள் இருக்கும்வரையில் இந்தப் பழக்கமும் போகாது.