சோறு முக்கியம் பாஸ்! - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

வெள்ளை வெளேரென்று வீரியரக அரிசி சாதம், அரைப்பதத்தில் பருப்பு, கெட்டி சாம்பார், செக்கச் சிவந்த வண்ணத்தில் வத்தக் குழம்பு, தக்காளி மிதக்கும் புளிப்பு ரசம்... இந்த வழக்கமான மதிய உணவைச் சாப்பிட்டு அலுத்துப் போன சென்னைவாசிகள்,  ஒருமுறை அடையாறு, காந்திநகர் 2-வது பிரதான சாலையில் இருக்கும் `திருக்குறள் உணவக’த்துக்குச் சென்றுவர வேண்டும்.  குதிரைவாலி சாம்பார்சோறு, வரகு எலுமிச்சைச் சோறு, சீரகச்சம்பா பிரியாணி, பனிவரகு தயிர்சோறு, கேழ்வரகு ரொட்டி, கம்மங்கூழ், வாழைத்தண்டுப் பச்சடி என நம் பாரம்பர்ய,  தூய நல்லுணவை  வயிறும் மனமும் நிறைய, சாப்பிட்டுவிட்டு வரலாம்.

ஒரு காலத்தில் சிறுதானியங்கள்தாம் நம் பிரதான உணவு. `தேங்காய் எண்ணெயைச் சேர்த்துக்கொண்டால் கொழுப்பு உருவாகி மாரடைப்பு வரும்’ என்று பிரசாரம் செய்து அதை நம் உணவிலிருந்து அந்நியப்படுத்தினார்கள். அதேபோல ‘உடம்புக்குச் சூடு’, ‘செரிமானமாகாது’,  ‘கடுமையாக உழைப்பவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்’ என்றெல்லாம் கிளப்பிவிட்டு, சிறுதானியங்களை  நம் சமையலறையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டார்கள். ஆனால், விதவிதமான நோய்களையெல்லாம் தந்து, மீண்டும் சிறுதானியங்களை நோக்கி நம்மை ஓடவைத்திருக்கிறது காலம்.

ஆனாலும் சிறுதானிய உணவுகள், பூங்காக்கள் ஓரத்திலோ, இயற்கை உணவு விழாக்களிலோதான் சாப்பிட  வாய்க்கின்றன.  அந்த உணவுகளை இளையராஜாவின் இசை வழிய, மெல்லிய ஏர் கண்டிஷனில் பிரம்பு நாற்காலிகளில் அமர்ந்து, ரசித்து ருசித்துச் சாப்பிடத் தருகிறது `திருக்குறள் உணவகம்.’

பன்னாட்டு நிறுவனங்களில் லட்சங்களில் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயன் இமயவரம்பனும், சுரேஷ் ஜெகநாதனும் அந்த வேலைகளை உதறிவிட்டு, இணைந்து நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் திறந்த உணவகம் இது. இரண்டு இருக்கைகளோடு தொடங்கப்பட்ட உணவகம் படிப்படியாக வளர்ந்து ரெஸ்டாரன்ட் ஆகியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்