இலையுதிர் காலம் - சிறுகதை

சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம்

லையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத் திறந்துகொண்டு வெளிவந்தான் கதிர். குளிர் பட்டவுடன் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டான். என்றைக்காவது லோடு வரும் நாள்கள் இப்படிக் கடையிலேயே தங்குவதுண்டு.

வாசல் முன் விரவியிருந்த சருகுகளைப் பெருக்க முனைந்தான். இரவின் பனியினால் சருகுகள் நமத்துப்போயிருந்தன. இதுவே மாலையாக இருந்தால் பகல் வெயிலால் காய்ந்த சருகுகள் மொறுமொறுவென இருக்கும். அதன் மீது அங்குமிங்கும் சரக் சரக்கென்று நடப்பான். இலைகள் நொறுங்கும் சப்தம் அவனுக்கு ஒரு வெற்றிக் களிப்பைத் தரும். இந்த ஈர இலைகள் மீது நாட்டமில்லை. அவற்றை ஓரிடத்தில் ஒதுக்க முற்பட்டான்.

பறவைகள் க்ரீச்சிடும் ஓசைகள். அதிகாலையிலும், மாலை மங்கிய வேளையிலும், மனிதர்களின் பேச்சுக் குரலைவிடப் பறவைகளின் ஓசை அதிகமாக அந்தத் தெருவில் கேட்டுக் கொண்டிருக்கும். போதாததற்கு அவன் கடையின் எதிரில் பூங்கா வேறு. பெங்களூரில் பூங்காக்களுக்குக் குறைச்சலில்லை. ஆளை முடக்கும் பனி முடிந்து, வெயில் தொடங்கும் இந்த இடைப்பட்ட பருவகாலம் அவனுக்கு உற்சாகமூட்டுவதாகவே இருந்தது.

கேசவரெட்டியின் மளிகைக் கடையில் வேலையில் சேர்வதற்கு முன் கதிரும் ரோட்டில் ஒரு கூடாரத்தில்தான் தங்கினான். ஊரை விட்டு ஓடி வந்தவனுக்கு வீடென்ன, வாசலென்ன. மெட்ரோ சாலைப் பணியாளர்கள், மேம்பாலம் கட்டுபவர்கள் ஆங்காங்கே நடைபாதையிலேயே கூடாரம் போட்டு வசித்தனர். அவர்களுடன் சேர்ந்து தங்கினான்.

ரெட்டிதான்,  வீட்டு வேலைக்கும் உபயோகமாக இருப்பான் என மளிகைக் கடையின் பின்பக்கமுள்ள அவர் வீட்டின் மாடியறையில் கதிரைத் தங்க வைத்தார். காரை பூசப்படாத செங்கல்லால் கட்டிய சுவரும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுமாக இருந்தது அவன் வசித்த சிறு அறை.

இலைகளைப் பெருக்கும்போது கதிர் எதிரிலிருந்த கூடாரங்களைப் பார்த்தான். அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பச்சைக் கண்ணழகி இன்னும் எழுந்திருக்கவில்லை. பூங்காவை ஒட்டிய நடைபாதையில் ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்டிருந்தன அக்கூடாரங்கள். நீல நிற உறைக் காகிதத்தாலும் வெள்ளைத் துணியைக் கொண்டும் கூடாரங்களை அமைத்திருந்தனர்.

கதிர் பாதாம் இலைகளைப் பெருக்கி ஓரமாக ஒதுக்கிவைத்தான். குப்பை அள்ளுபவர் வந்து வண்டியில் அவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுவார். அரிசி மூட்டைகள் வந்ததும் கணக்கு முடித்துவிட்டுக் கடையை மூடினான். இனி எட்டு மணிக்கு வந்தால் போதுமெனத் தனது அறைக்குச் சென்றான்.

மேலே மாடிப்படியேறும் போது கேசவ ரெட்டியின் அம்மா பார்த்திருக்கக் கூடும். வீட்டு உள்ளேயிருந்தபடி அவனை அழைத்தாள்.

“கதிரூ”

கதிருக்கு எதற்காக அழைக்கிறார் என்பது தெரிந்துவிட்டது. ரெட்டிக்கு மணம் முடிப்பது தொடர்பாக ஜோசியக்காரரைப் பார்க்க வேண்டும். அதற்குக் கதிரையும் துணைக்கு அழைக்கிறார்.

“இன்னைக்கு மல்லேஸ்வரம் போலாமா தம்பி?” என்று கேட்டார்.

ரெட்டி உள்ளறையிலிருந்து வந்து என்ன என்பது போல் இருவரையும் பார்த்தார். ஜவ்வாது வாசம் பரவியது. ரெட்டியின் அம்மா அவரது துணியை அலசும்போது ஜவ்வாதைச் சிறிது நீரில் கலந்துவிடுவார். அந்த வாசமும் ரெட்டியும் பிரிக்க முடியாத ஒன்றாகக் கதிருக்குத் தோன்றும்.

“மல்லேஸ்வரம் போலாம்னு அம்மா கேட்டாங்கண்ணா” என்று இவன் முந்திக்கொண்டான்.

“எந்த மாட்டி ஸெப்பேனு” எனத் தெலுங்கில் ரெட்டி அவர் அம்மாவைத் திட்டத் தொடங்கினார். பதிலுக்கு அவரும் ஏதேதோ புலம்பியபடி உள்ளே போனார்.

“நீ ஜல்தியா கடைக்குப் போ. அம்மா கூட போ வேணாம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்