“சமத்துவம் அவ்வளவு பலவீனமானதா?”

த.கதிரவன் - படம்: சொ.பாலசுப்ரமணியன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

மீபகாலமாகவே சர்ச்சைகள் சுற்றிவருகின்றன திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை. அவர் ஒரு திருமணத்தில் மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்த வீடியோ, ‘வீரமணி பேரனின் திருமணம்’ என்று சமூகவலைதளங்களில் பரவியது. அது ஓய்ந்த சில நாள்களிலேயே கும்பகோணம் ‘திராவிடர் மாணவர் கழகப் பவள விழா’ மாநாட்டில், கி.வீரமணி, சாரட்டில் பயணித்ததும் சர்ச்சையானது.  அவரைச் சந்தித்துப் பேசினேன்.

‘‘சமூக நீதி, சமத்துவம் பேசும் கி.வீரமணி, தொண்டர்களிடையே சாரட் வண்டியில் பயணித்து வந்தது சரிதானா?’’

‘`குதிரை வண்டியில் நான் ஏறி வந்ததால், குதிரைக்கு வலி வந்துவிட்டது என்று சொன்னால்கூட அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஏன் வலி வந்தது என்றுதான் எனக்குப் புரியவில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பேரணி, ஊர்வலம், கோஷங்கள் எல்லாமே ஒரு வகையான பிரசார உத்தி. ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்காகச் சிறைசென்ற பெரியார் விடுதலையானபோது, சிதம்பரத்தில், தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். அந்தக் காட்சியை வர்ணித்துதான் ‘அவர்தாம் பெரியார்’ பாடலை இயற்றினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இப்போது குடந்தையில், 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாட்டில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ‘பொது ஒழுக்கத்தோடு நடப்போம்’, `சொந்த சாதியில் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்’ என்பது உள்ளிட்ட 10 உறுதிமொழிகள் மாநாட்டில் எடுக்கப்பட்டன. கட்டுப்பாட்டுடன் திரண்டெழுந்த இந்த மாணவர் எழுச்சி பற்றிய சிறப்புச் செய்திகளை எல்லாம் மறைக்கவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள்.  ‘பல்லக்கில் பவனி வந்தார்’ என்று மோசடியாகச் சித்திரித்து பரவவிட்டுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு, கன்ஷிராம், மாயாவதி தலைமையில், உத்தரப்பிரதேசத்தில் ‘பெரியார் மேளா’ கொண்டாடப்பட்டது. இந்தியா முழுக்கப் பரவிய இந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமென்றே, அப்போது ‘பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்று கிளப்பிவிட்டார்கள். இதையடுத்து, ‘பிள்ளையார் பால் குடிக்க முடியுமா? பால் குடித்தது உண்மையா? பால் குடித்தது சரியா?’ என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இது காலங்காலமாக அவர்கள் செய்துவரும் உத்தி; காலாவதியான உத்தி!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick