சொல்வனம்

தன்னிலை மாறா இரவு

ரவின்மீது
விளக்குகளை ஏற்றி வெளிச்சமாக்குகிறார்கள்
இரவின் மௌனத்தின் மீது
பாடல்களை நிரப்பி மௌனம் கலைக்கிறார்கள்
தள்ளுவண்டியில் காய்ச்சிய தேநீரால்
இரவின் குளுமையைச் சூடாக்குகிறார்கள்
சாலையோரக் கடைகள்
ஆவி பறக்கும் உணவுகளோடு
இரவின் பூரணத்தில் பசியைக் கிளப்புகின்றன
மைதானங்களில் பகல்களை உருவாக்கிப்
போட்டிகள் நடத்துகிறார்கள்
விரையும் வாகனங்கள்
தங்கள் இயந்திரக் குரல்களைச் சற்றே உயர்த்திப்பேசி
இரவின் அமைதியில் கல்லெறிகின்றன
நாயொன்று தொடர்ச்சியாக எழுதுகிறது
தன்குரலால் மனிதர்களின் மீதான புகாரொன்றை
அத்தனை லாபம் வேண்டுமென உற்பத்தி ஆலைகள்
தங்கள் பற்களால் இரவைக் கடித்துக் குதறுகின்றன
வெட்டப்பட்ட மரங்களிலிருந்த கூடுகளை இழந்த பறவைகள்
அகதிகளாக அழுதபடி இரவு வானத்தில்
அலைந்துகொண்டிருக்கின்றன வேறிடம் தேடி
இரவைக் கத்தியால் குத்துகிறார்கள்
இரவை அரிவாளால் வெட்டுகிறார்கள்
இரவை நகங்களால் கிழிக்கிறார்கள்
இரவை நெருப்பு வைத்து எரிக்கிறார்கள்
என்னென்ன செய்தபோதும்
இரவு இரவாகவேயிருக்கிறது

- சௌவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick