துயர் துடைக்க தொடர்ந்து உதவுவோம்!

#RestoreDelta

ஜா புயல் ஏற்படுத்திய பேரழிவின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. மக்களின் வாழ்க்கையில் வீசிய புயல் இன்னும் ஓயவில்லை. பாதிப்பின் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அன்றாட வாழ்க்கைக்கு இன்னும் அவர்கள் திரும்பவில்லை. மின்சார இணைப்புகள் சரிசெய்யப்பட முடியாமல் பல கிராமங்கள் இன்னும் ஒளிரவில்லை. இத்தனை ‘இன்னும்’ துயரங்களுடன் பல அதிர்ச்சி செய்திகளும் நம்மை வந்துசேர்கின்றன. 

புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத்தாண்டி, இழப்பின் வேதனையைச் சகிக்க முடியாமல் நிகழும் தற்கொலைகள் இதயத்தைக் கனக்கச் செய்கின்றன. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன்குடிக்காட்டைச் சேர்ந்த சுந்தரராஜ், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் ஆகியோர் தங்கள் வாழ்வாதாரம் அழிந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இருந்த வாழ்வாதாரத்தையும் இழந்து, தங்கள் குடும்பத் தலைவரையும் இழந்து இரண்டு குடும்பங்கள் தத்தளித்து நிற்கின்றன.

நேற்றுவரை நம் பசியாற்ற உழைத்த மக்கள், இன்று தங்கள் பசியாற்ற யாரேனும் வரமாட்டார்களா என்று இதயம் கனக்கக் காத்து நிற்கிறார்கள். நம்பிக்கையற்றுத் தவிக்கும் அந்த சகோதர்களுக்குக் கரம்கொடுத்துத் தூக்கிவிடவேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது.

தன்னார்வலர்களின் பெருமுயற்சியால், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் பல உள்கிராமங்களுக்கு அடிப்படை உதவிகள் சென்று சேர்வதில் சிக்கல் நீடிக்கிறது. பல கிராமங்களில் இன்னும் பாதைகள்கூடச் செப்பனிடப்படவில்லை. தொற்றுநோய்கள் பரவத் தொடங்கியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதோடு நிரந்தரமாக அந்த மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கரம்கொடுத்து உதவும் நோக்கில், விகடனின் `வாசன் அறக்கட்டளை’ 10 லட்ச ரூபாய் வழங்கியிருந்தது. இந்தப் பணிக்காக வாசகர்களின் பங்களிப்பையும் கோரியிருந்தது விகடன்.  அதையேற்று ஏராளமான வாசகர்கள் நிவாரண நிதியை அனுப்பிவருகிறார்கள். நடிகர் கார்த்தி, விகடன் அலுவலகம் வந்து  தன் சார்பிலும் தன் சகோதரர் நடிகர் சூர்யா சார்பிலும் 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசனிடம் வழங்கினார். சென்னை ஹாரிஸ் அண்டு மெனுக் நிறுவனத்தின் மேலாண்மை  இயக்குநர் ஆரிய ரத்னம், 2.5 லட்சம் வழங்கினார். சென்னை பெவா சிலிக்கான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் 2.5 லட்சம் வழங்கப்பட்டது. ஏராளமான வாசகர்கள் ‘வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்’டுக்கு நேரடியாகவும் வங்கி மூலமாகவும் நிதி வழங்கிவருகிறார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விகடன் சார்பில் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு செய்த விகடன் குழுவினர், இதுவரை உதவிகளே கிடைக்காத குடும்பங்களை அடையாளம் கண்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சடையன்கோட்டகம், முதலியார்தோப்பு, வைரவன்பேட்டை, அண்ணாநகர், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி ஆகிய ஊர்களிலும்; திருவாரூர் மாவட்டத்தில் மேலமருதூர், மயிலேறிபுரம், வாலி ஓடை, நெம்மேலி, எக்கல் ஆகிய ஊர்களிலும்;  தஞ்சாவூர் மாவட்டத்தில் வலசக்காடு, நரியங்காடு, பள்ளிகொண்டான், செருவாவிடுதி, பழஞ்சூர், பொன்னவராயன்கோட்டை, மருதங்காவயல் ஆகிய ஊர்களிலும் 1500 குடும்பங்கள் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்துக்கும்  தலா 1500 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. (தார்ப்பாய்-1, பெட்சீட்-2, துண்டு-2, அரிசி-5 கிலோ, கொசுவலை-1, மெழுகுவத்தி- 1 பாக்கெட், 400 ரூபாய் மதிப்புள்ள மளிகைப்பொருள்கள்).

இதுவரை விகடன் மேற்கொண்ட எல்லா நிவாரணப் பணிகளுக்குப் பின்னாலும் விகடன் வாசகர்களே இருந்தார்கள். இப்போதும் அவர்களின் ஆதரவையும் உதவியையுமே எதிர்பார்க்கிறோம். வாருங்கள் வாசகர்களே, துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்கு உதவக் கைகோப்போம்!


"இம்மாதிரியான இயற்கைப் பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்ட மக்களிடம், ‘நீங்கள் தனியாக இல்லை; நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். அதற்காகவே இந்தச் சிறிய பங்களிப்பு.  சரியான நேரத்தில் சரியான நபருக்குச் சென்றுசேரும்  என்பதால் விகடனிடம் தருகிறேன்” என்று சொல்லி 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்தார் நடிகர் கார்த்தி. விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், “பலரும் இந்தப் பணியில் இணைய உங்கள் பங்களிப்பு ஊக்கமளிக்கும்" என்றார் மகிழ்வுடன்.


தவும் உள்ளம் கொண்ட வாசகர்கள்  ‘Vasan Charitable Trust’ என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052  (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோடு: CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண்: 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்:  DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘கஜா துயர் துடைப்போம்,’ அல்லது  #RestoreDelta என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம். மெயிலில் ரசீது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் help@vikatan.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வங்கியில் பணம் செலுத்திய (Transaction No: / Reference No:) பரிவர்த்தனை எண்ணைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

- பா.சீனிவாசன்

ஆசிரியர் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick