சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அன்பின் நிழல் - சிறுகதை

அன்பின் நிழல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பின் நிழல் - சிறுகதை

செந்தில் ஜெகன்நாதன் - ஓவியங்கள்: ஸ்யாம்

னம் மிகவும் சோர்ந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் முதன்முறையாக மது குடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதோ இந்த ஐந்தாவது மாடியிலிருந்து அப்படியே குதித்துவிடலாமா என்றிருக்கிறது. சற்று முன்னர் சுவரில் மோதிக்கொண்டதால் தாங்க முடியாத தலைவலி இருந்துகொண்டேயிருக்கிறது. இதயத்துடிப்பு இப்போது என்ன வேகத்தில் இருக்கிறது என்றெல்லாம் தெரியவில்லை. அது துடிக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை.

ஏன் இப்படி மனக்கிலேசத்துடன் அல்லாடுகிறேன்? ஏன் இப்படிப் புலம்புகிறேன்? காரணம், என் அப்பாவை இப்போதுதான் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆம், என்னைப் பெற்ற தந்தையைத்தான்! அவரின் தொண்டைச் செருமலையோ, தும்மல் சத்தத்தையோ கேட்டாலே கால்சட்டையிலேயே சிறுநீர் போகிறவன்,  `டேய்...’ என்ற அந்தக் குரலுக்கு உடல் ஒடுங்கி மிரள்பவன், இன்று அவரின் கைகளை முறுக்கி இழுத்துக் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

அப்பா ஒரு சுயம்பு; தானே வளர்ந்த வன விருட்சம். தாத்தா, வெறும் நாற்பது குழி நாற்றங்காலைத் தவிர வேறெதுவும் வைத்துவிட்டுப் போகவில்லை. அப்பா தலை கிளம்பி உண்டானதுதான், நஞ்சை புஞ்சையென இரண்டு வேலி நிலமும், வாழைத்தோப்பும். கூடவே வீடு வாசல் என வந்த அனைத்துமே அப்பாவின் வியர்வையால் வந்தவைதான்.

அன்பின் நிழல் - சிறுகதை

தனது ஒன்பது வயதில் ஏர் பூட்டி உழத் தொடங்கிய அப்பாவின் உழைப்பைத்தான், ஊருக்குள் உருப்படாமல் சுற்றித் திரியும் பையன்களுக்குப் பாடமாகச் சொல்வார்கள் ஊர்க்காரர்கள்.

`ஒற்றை ஆளாக உழவடித்து, நடவு நட்டு, களை பறித்து, அறுவடை செய்து, பெரிய களத்தில் முதல் ஆளாகக் கதிரடித்து, ஊரிலேயே அதிக கொள்முதல் என்ற பெருமையோடு வீட்டுக்கு நெல்மூட்டை சுமந்து வருவார்’ என ஊருக்குள் பல பேர் வெவ்வேறு தருணங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

வீட்டில் எல்லோரிடமும் கண்டிப்போடுதான் இருப்பார் அப்பா. குறிப்பாக, என்னிடம் மேலதிக கடுமையாக இருந்தார்.

பள்ளி நாளில், ஓவியம் வரைவதில் எனக்குப் பெரும் ஆர்வம் இருந்தது. ஒருநாள் பத்திரிகையில் வெளியான ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு சார்ட் அட்டையில் வரைந்துகொண்டிருந்தேன். திடீரென முதுகில் யாரோ உதைக்க,  நிலைகுலைந்து குப்புற விழுந்தேன். நிதானிப்பதற்குள் சரமாரியாக அடித்தார். வலி தாங்கவியலாமல் தடுமாறி விழுந்தேன். வரைந்து வைத்திருந்த சார்ட் அட்டைகள், ஏற்கெனவே வரைந்து வைத்திருந்தவை என எல்லாவற்றையும் என் கண்ணெதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தினார். அன்றிரவு முகம் முழுக்க அழுத பிசுபிசுப்போடு படுத்திருந்தேன்.

``அந்தப் பய இன்னொரு தடவை படம் வரையிறேன்னு ஏதாவது தாளுல கிறுக்கிக்கிட்டு இருந்தான்னா அந்தத் தாளோட அவனையும் கொளுத்திப்புடுவேன்னு சொல்லு” என்று அம்மாவிடம் கடுங்கோபமாகச் சொல்லியதைக் கேட்டு, போர்வையை இழுத்து மூடிக்கொண்டு அழுத அந்த இரவின் கண்ணீர், இன்னும் எனக்குள் காயவே இல்லை. `அவர் என்னைப் பற்றி எதையும் புரிந்துகொள்ளாமலேயே ஓர் அப்பாவாக எப்படி இத்தனை காலமாக இருந்தார்?’ என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழும்.

அவர் என்னை நினைத்துப் பெருமைப்பட்டுப் புன்முறுவல் செய்கிறார் எனப் பலமுறை கற்பனையாக நினைத்துப்பார்த்தும், அந்தச் சித்திரத்தை மனதுக்குள் என்னால் கொண்டுவர முடிந்ததே இல்லை. அப்போதெல்லாம் எனக்கு விரக்திச் சிரிப்புதான் மிஞ்சும்.

அப்பா இறந்திருந்தால், இன்று மூன்றாவது நாள் ஆகியிருக்கும். புதைத்த இடத்தில் நவதானியம் விதைத்துப் பால் தெளித்திருப்போம். `ச்சே, ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது எனக்கு? ஏன் அவர் இறக்கவில்லை என்று என் மனம் நினைக்கிறதா? ஐயோ அப்படியில்லை, அவர் என் அப்பா.’ ஆனால், அவர் செய்த காரியம் அப்படியானதுதான்.

அன்பின் நிழல் - சிறுகதை

அப்பாவுக்கு மதுப்பழக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானது. ஒருநாள் டீக்கடை கலியபெருமாள் மாமா சொன்னது, திரும்பத் திரும்ப நினைவில் வந்துகொண்டேயிருக்கிறது.  ``நாப்பது அம்பது வருஷம் குடிக்கிறவன் குடிய, ஒப்பன் நாலஞ்சி வருஷத்திலேயே குடிச்சிட்டான்டா சீனி” என்றார். அந்த நேரத்தில் சிரிப்பதுபோல பாவனை செய்தாலும், அன்று  அப்பாவை நினைக்க நினைக்க உடம்பில் நெருப்பைக் கொட்டியதுபோல அழுகையும் கோபமும் பொங்கிக்கொண்டு வந்தன.

என் இரண்டு அக்காக்களின்  திருமணத்துக்கு வாங்கிய கடன், எனக்கும் தம்பிக்கும் படிப்புச் செலவுகள், வீடு கட்டியது, அம்மாவின் ஆஞ்சியோ எனச் செலவுமேல் செலவாக, பம்புசெட்டோடு அய்யனார் கோயில் வடக்கே இருந்த வயலை விற்றதிலிருந்துதான் விரக்தி அவரைத் தொற்றிக்கொண்டது. அதுவே அவரை மதுக் குவளைக்குள் தள்ளி தினம் தினம் வீட்டைக் கலவரத்துக்கு உள்ளாக்கியது.

பிறகு, நானும் தம்பியும் வேலை கிடைத்து நன்றாகச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டோம். பணக்கஷ்டம் என்பது இப்போதில்லை. அலுவலகத்தின் ஒரு புதிய புராஜெக்ட் ஒப்பந்தத்துக்காக அடுத்த மாதம் சான்ஃபிரான்சிஸ்கோ செல்லும் வாய்ப்பை மேலாளர் எனக்கு வழங்க இருப்பதாக, சென்ற வாரம்தான் அதிகாரபூர்வ மின்னஞ்சல் செய்திருந்தார். அதனால் இப்போதைய ஊதியத்தைவிட மேலும் முப்பது சதவிகித ஊதிய உயர்வு கிடைக்கும்.

தம்பியும் சொல்லிக்கொள்ளும்படியான சம்பளம் வாங்குகிறான். அம்மாவிடம்  ``அவரை குடிக்காம இருக்கச் சொல்லு. ஆபீஸ்ல லோன் கீன் போட்டாவது அந்த நிலத்தை மீட்டுடலாம்” எனச் சொல்லியிருக்கிறோம். அம்மாவும் அவரிடம் தயங்கியபடி சொல்வார். நாங்களே ஜாடையாக அவருக்குக் கேட்கும்படி அம்மாவிடம் சொல்வதுபோலவும் சொல்வதுண்டு. ஆனால், இவை எதுவும் அப்பாவின் தோள் துண்டைக்கூடத் தொட்டுப் பார்க்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

அப்பா குடிப்பதைத் தாண்டி, அவரிடம் ஒரு பெரும் பிரச்னை இருந்தது. குடித்தவுடன் ``நான் சாவப்போறன்” என்று களைக்கொல்லி மருந்தையோ, பால்டாயிலையோ கையில் வைத்துக்கொண்டு மிரட்டுவார். சாப்பிட உட்கார்ந்த அம்மா, அப்படியே சாப்பாட்டில் ஈ மொய்க்க... விழியில் நீர் வழிய... படபடப்போடு தூங்காமல் விடிய விடிய உட்கார்ந்திருப்பாள். நானோ, தம்பியோ ஊருக்குப் போவதாக இருந்தால் சரியாக எங்கள் காதில் கேட்கும்படி ``காலையில நான் இருக்க மாட்டேன். அய்யனார் கோயில் மேலண்ட வரப்பு ஓரமா பொதைக்கணும்” எனச் சொல்லிவிட்டு, அவர்பாட்டுக்குச் சென்றுவிடுவார். நாங்கள் அன்று அவர் சிறுநீர் கழிக்கப் போனாலும் கூடவே பின்தொடர்ந்து கண்காணிக்கவேண்டியிருக்கும்.

ஒருநாள் மதிய நேரம் 3 மணி இருக்கும். அம்மா ரேஷன் கடையிலிருந்து மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டுவந்து வைத்துவிட்டு, மதியச் சாப்பாட்டுக்குத் தயார்செய்யத் தொடங்க, ஏற்கெனவே பசியால் கடுங்கோபத்தில் இருந்தவர், மண்ணெண்ணெயை கேனோடு தூக்கி, தலை உடலெங்கும் ஊற்றிக் கொண்டு தீப்பெட்டிக்காகச் சமையலறைக்கு வந்த விஷயமறிந்து அம்மா கத்த, அப்போது ஒருமுறை காப்பாற்றப்பட்டார். இப்படியான நேரத்தில் அவரை எதையாவது எடுத்து அடித்துவிடலாமா என்றிருக்கும்.

அவர் இப்படிச் செய்வதும், அம்மா எங்களுக்கு போன் பண்ணிச் சொல்வதும் நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் லீவ் போட்டு ஊருக்குப் போய் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர யாரையாவது கூப்பிட்டு சமரசம் பேசுவதும் நீண்டுகொண்டே சென்றது. அதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வரும்போதெல்லாம், `அவர் இப்படி இருந்து எல்லோரையும் கஷ்டப்படுத்துவதற்கு, செத்தேபோகலாம்’ என்றுகூடத் தோன்றும்.

கடைசியாக ராமசாமி தாத்தாவைக் கூப்பிட்டுப் பஞ்சாயத்துவைத்து `இனிமேல் எதுவும் செஞ்சுக்க மாட்டேன்’ எனப் பாலை வைத்து சத்தியம் பண்ணவைத்தோம். சத்தியம் செய்த இரண்டு மூன்று நாள் அமைதியாக இருந்தார். அந்த அமைதி, அடுத்து என்ன செய்ய நினைத்திருக்கிறாரோ என இன்னும் கிலியை உண்டுபண்ணியது.

அன்பின் நிழல் - சிறுகதை

பல வருடம் மனதை மிரட்டி அச்சமூட்டியவர், சென்ற வாரம் நடத்தியே காட்டிவிட்டார். செவ்வாய்க்கிழமை பின்னிரவில் வீட்டுக் கொல்லையில் மருதணைமரம் ஓரமாக மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, வாயில் நுரை தள்ளிக் கிடந்திருக்கிறார். அம்மா பார்த்துக் கூச்சலிட்டுக் கத்தவும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

என் போன் அடிக்கிறது. சலிப்போடு எடுத்துப் பார்த்தேன். வார்டில் இருந்துதான். அந்தக் கேரள நர்ஸ்தான் கூப்பிடுகிறாள். ``வருகிறேன்” என்று சலிப்போடு சொல்லிவிட்டு, போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கீழே இறங்கினேன். மாடியின் ஒவ்வொரு படியிலிருந்தும் கீழே அடி எடுத்து வைக்க வைக்க, வயிற்றில் இருக்கும் மொத்தக் குடலையும் ஏதோ ஒரு கரம் சுருட்டிப் பிடித்து இழுப்பதைப் போல இருந்தது, பசி.

வார்டுக்குள் ஒருவித தயக்கத்தோடு நுழைந்தேன். நர்ஸ் என் உடையைப் பார்த்துவிட்டு முகத்தை நோக்கினார். அப்போதுதான் நான்  கவனித்தேன், சட்டையும் பேன்ட்டும் அழுக்கோடு இருந்ததை. பார்க்கவே சகிக்காமல் இருக்கிறேன் எனத் தோன்றச் செய்தது நர்ஸின் முகபாவனை.
``இந்த இன்ஜெக்‌ஷனை உடனே வாங்கிட்டு வாங்க. டேப்லெட்ஸ் அஸ்யூஷுவல். அண்ட் உங்க பேலன்ஸ் த்ரீ தௌசன் கொஞ்சம் ரிசப்ஷன்ல கட்டிருங்கப்பா” - கையில் ஒரு சீட்டைக் கொடுத்து விட்டு, படபடவெனச் சொன்னார்.

``சிஸ்டர்... ப்ளீஸ்!”

என்ன என்பதைப்போல என்னை நோக்கினார்.

``ஸாரி சிஸ்டர்... ரொம்ப ஸாரி!”

``அச்சோ... அது ஒண்ணும் கொழப்பும் இல்லா. அவர் பேஷன்ட்தானே!” - மொத்த முகமும் சலனமில்லாமல் இருக்க, கண்களால் மட்டும் சிரித்துவிட்டு அகன்றார். வலதுகண்ணில் கொஞ்சமாக மை கரைந்திருந்தது.

நான் `நர்ஸிடம் நியாயமாகக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, ஒரு மணி நேரத்துக்கு முன் நினைத்திருந்தேன்.

இன்று அப்பா நடந்துகொண்ட விதத்தை நினைக்கவே உடல் நடுங்குகிறது. இந்த மருத்துவ மனைக்கு வந்ததிலிருந்தே இரண்டாவது முறை. எப்போதும்போல அப்பாவுக்கு டிரிப்ஸ் போடுவதற்காக நர்ஸ் வந்திருக்கிறார். டிரிப்ஸ் பாட்டிலைப் பிடுங்கி தூர எறிந்து, மருந்துகள் இருந்த பிளேட்டை எடுத்து நர்ஸின் வலது தோள் பட்டையில் அடித்திருக்கிறார். அடியைப் பொருட்படுத்தாமல் சமாதானம் செய்ய முயன்றபோது கேவலமான சொற்களால் திட்டியிருக்கிறார். சத்தம் கேட்டு வந்த வார்டுபாய் பையன் முகத்தில் அறைந்து குளூக்கோஸ் ஸ்டாண்டைக் கையில் வைத்துக்கொண்டு காற்றில் வீசியிருக்கிறார். தடுக்க வந்த பக்கத்து பெட் நோயாளிகளின் உறவினர்கள் எல்லோரிடமும் திமிறிக்கொண்டு வெளியே ஓட முயன்றிருக்கிறார்.

அப்பாவுக்கும் எனக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு வராண்டாவில் வந்து கொண்டிருக்கும்போதே கூச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. வராண்டா நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒருவர் விஷயத்தைச் சொல்லவும், நான் வார்டுக்குள் ஓடிவரும்போது அப்பாவை ஒருவர் பின்னேயிருந்து கழுத்தைப் பிணைத்து வளைத்திருக்க, இரண்டு பேர் அவரின் இரண்டு கைகளையும் பிடித்திருந்தார்கள். எதிரே நின்றிருந்த நர்ஸை மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார் அப்பா. தன்னைப் பிடித்திருப்பவர்கள் அனைவரையும் தூக்கி வீசும் முனைப்பில் மூர்க்கமாகக் கத்திக்கொண்டிருந்தார். முன் சென்று அவரைப் பிடித்துப் படுக்கவைக்க முயன்றபோது, கெட்டவார்த்தை சொல்லித் திட்டிவிட்டு என் முகத்தில் காறி உமிழ்ந்தார். சத்தம் அதிகமாக, பக்கத்துக்கு வார்டுகளில் இருந்த டாக்டர்கள், நோயாளிகள், அவர்கள் உடன் இருப்பவர்கள் என எல்லோரும் வந்துவிட்டார்கள்; என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

இப்படித்தான் நேற்று அம்மாவிடமும் தம்பியிடமும் சத்தம்போட்டிருக்கிறார் என்பதாலேயே, நான் இருந்து பார்த்துக்கொள்வதாக அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். இன்று இன்னும் கடுமையாகவே நடந்துகொண்டுவிட்டார்.

அன்பின் நிழல் - சிறுகதை

பதற்றத்தில் என்ன செய்வதென அறியாமல் என் கரங்கள் நடுங்கின. பின்பக்கமாகப் பிடித்திருந்தவரிடம் சைகை செய்து அப்பாவின் மேல் பாய்ந்து பலம்கொண்ட மட்டும் அவரை இறுக்கிப்பிடித்து அவரை பெட்டில் தள்ளி அவருடைய கரங்களை முறுக்கி மின்னல் வேகத்தில் நர்ஸ் கொடுத்த கட்டிப்போடும் வார்களைக் கட்டிலோடு இணைத்துக் கட்டிவிட்டேன். என்மீது எச்சிலை உமிழ்ந்தபடியும் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டிய படியும் இருந்தார். கட்டிலில் கட்டிப்போட்ட பிறகு டாக்டர் அவருக்கு மயக்க ஊசி போட்டார். இரண்டு கால்களையும் கைகளையும் கட்டியிருப்பதைப் பார்த்த பிறகே சுற்றி இருந்த எல்லோருக்கும் ஓர் ஆசுவாசம் பிறந்தது. எனக்கும் லேசான திருப்தியுணர்வு மனதில் தோன்றி மறைந்தது. அதை நான் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

ஊசி போட்டதற்குப் பிறகு டாக்டர் என்னைத் தனியே கூப்பிட்டுப் பேசினார். நன்றாக மயங்கித் தூங்கிய பிறகு கட்டுகளை அவிழ்த்துவிட வார்டுபாயிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னார். நான் ஒன்றும் சொல்ல இயலாமல் மருத்துவமனையின் மொட்டைமாடிக்குச் சென்றுவிட்டேன்.

உள்ளூர் அரசு மருத்துவமனையில் அப்பா உடம்பில் கலந்த விஷத்தை எடுத்துவிட்டாலும், நினைவு திரும்பாததால் உடனடியாக இந்தத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவந்தோம். இங்கே கடந்த நான்கு நாள்களாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்கப்பட்டது. நேற்றுதான் சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள்.

நேற்று நினைவு திரும்பியதிலிருந்தே அப்பாவின் நடவடிக்கையும் பேச்சும் சரியில்லை. பதறிப்போய் டாக்டரிடம் கேட்டேன். ``மூளைக்குச் செல்லும் நரம்பில் விஷம் ஏறியிருப்பதால், அவரது சிந்தனை மாறியிருக்கிறது; செயல்பாடுகளில் கொஞ்சம் மாற்றம் தெரியும்’’ என்றார் டாக்டர்.
``அப்பாவுக்குப் பைத்தியமா டாக்டர்?” எனக் கேட்கும்போதே யாரோ என் தொண்டையை நெரிப்பதுபோல, பேச்சு சன்னமாகவும் நடுக்கத்தோடும் வந்தது.

டாக்டர் ``பயப்படவேண்டாம் குணப்படுத்திடலாம்” என்று சமாதானம் சொல்லி அனுப்பினார். அதற்குப் பிறகு என்னால் அப்பாவைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அவர் மனநிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதை ஏற்க மறுத்த என் மனது, சமீப நாள்களில் கிட்டத்தட்ட பைத்திய நிலையைத் தொட்டுவிட்டுத் தொட்டுவிட்டு வந்தது.  ஏதோ ஒரு தருணத்தில் என் நாக்கும் குழன்று, நானும் மூர்க்கமாக நடந்துகொள்வேனோ என்ற அச்சம். யாரிடமும் பேசவே தயக்கமாக இருந்தது.

வராண்டாவில் யோசனையோடு நடந்து கொண்டிருந்தேன். மருந்தகத்துக்குப் போவதற்கு முன், வார்டுக்குள் நுழைந்து அப்பாவைப் பார்த்தேன். கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் உடை அணிவிக்கப்பட்டு, ஒருக்களித்துப் படுத்திருந்தார். மிகுந்த பதற்றத்தோடு அருகில் சென்று பார்த்தேன். அவரைத் தொடவேண்டும்போலத் தோன்றியது. மெள்ள என் கையை எடுத்து அவரது நெற்றியைத் தொடப்போனேன். விரல்கள் நடுங்க கையைப் பின்னிழுத்துக்கொண்டேன். வலது புறங்கையைத் தாடையில் வைத்துக்கொண்டு, முழங்கால்களை மடக்கி நன்றாக மூச்சுவிட்டு, கைப் பிள்ளையைப்போல் உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்பாவைப் பற்றிய கசப்பெல்லாம் மறந்து, அவரிடம் வெறுக்கவே முடியாத ஒரு தோற்றம் வந்திருப்பதை உணர்ந்தேன்.

பயமாக இருந்தாலும் தயங்கியபடியே அப்பாவின் நெற்றியில் முத்தமிட்டேன். இந்த இருபத்தெட்டு வயதில் நினைவுக்குத் தெரிந்து அப்பாவுக்கு நான் கொடுத்த ஒரே முத்தம் இதுதான்.