நற்காரியங்கள் - கவிதை | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

நற்காரியங்கள் - கவிதை

யவனிகா ஸ்ரீராம் - ஓவியம்: ரமணன்

ந்த மழைக்காலத்திற்கான உன்
காலணிகளை மாற்றிக்கொண்டாய்
பரங்கியர் விட்டுச்சென்ற
பழங்காவிக் கட்டடங்களின் ஓடுகள்
சரிந்து வீழ் படிவாக
அதனினும் நவீன உயரக்
கட்டுமானங்கள் எழும்பி நிற்கும்
உலக அலுவல் வீதியில்
ஈரச்சாலைகளின் மீது வலுவற்ற
அழகிய வாகை மரக்கிளைகள்
தவறி விழுந்திருக்கின்றன
அப்படியான முகமனுக்குப் பின்
ஒரு தேநீருக்கான அழைப்பில்
உன் தொடைகள் நடுங்குவதை
இருக்கையின் அதிர்வில்
மேலும் குளிரில்
உன் பற்களும் நடுங்குகின்றன
மேலும்
ஒரு முத்தத்திற்காக இந்நகரம் அப்படி
அதிர்ந்திருக்க வேண்டியதில்லை
உன் சிறிய மார்புகள் விம்மித் தணியும் காலை
நினைவில்லங்களின் மீது
புறாக்களின் வலிந்த காதல்
இறகுகளையுதிர்க்கின்றது
பயணிகள் வாகன எண்களை
சரிபார்க்கிறார்கள்
மியூசியத்தில் பார்வையாளர்கள்
குறைவு என்றாலும்
நுழைவாயில் மேசையில்
பணியாளர் தூங்கிவிடுகிறார்
பெருத்த எபிரேயத் தூண் மறைவில்
ஆலிங்கனத்தின்
செப்புச்சிலைகளை நாம் பிரதிசெய்தோம்
ஒரு நல்ல மியூசியத்தின் பண்பு
எந்நேரமும் உறைந்த நிலையில்
இருப்பதன்றி சிலநேரம் ரகசியமாய்
அசைந்துகொள்வதும்தான்
மேலும் இப்பருவ மழை
பெரு நகரங்களைக்
கழுவித் துடைப்பதும்கூட ஒரு
நற்காரியம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick