கசடுகள் வேண்டாம்!

ல்லாச் சமூக மாற்றங்களும் கல்வி நிறுவனங்களிலிருந்துதான் தொடங்கவேண்டும். ஆனால், அந்தக் கல்வி நிறுவனங்களே ஊழலில் ஊறிப்போவது என்பது நம் வேர்கள் அழுகிவிட்டதற்கான முதல் அறிகுறி.

தரமான கல்வியை எப்படிக் கொடுப்பது, கல்வியை எப்படிப் பரவலாக்குவது என்று சிந்தித்துச் செயல்பட்ட லட்சுமணசாமி முதலியார், நெ.து. சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா, வ.ஐ.சுப்பிரமணியம், செ.வை.சிட்டிபாபு, சாதிக் போன்ற கல்வியாளர்களாலும் பல்கலைக்கழக நிர்வாகிகளாலும் ஒருகாலத்தில் புகழ்பெற்றிருந்தது தமிழ்நாடு. ஆனால், இப்போதோ, ‘போட்ட காசை லாபத்தோடு எப்படி எடுக்கலாம்?’ என்ற ஒரே குறிக்கோளோடு ‘கல்வி சேவை’ ஆற்றும்  சிலரால் தமிழ்நாடு அவமானப்பட்டு நிற்கிறது.

‘துணைப்பேராசிரியர்களை நியமிக்க துணைவேந்தர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், துணைவேந்தரை நியமிக்க யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள், எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள்?’ என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழும்போது, அந்தக் கேள்விகளில் உள்ள நியாயங்களைப் பரிசீலித்துப்பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

தரமான கல்வி, தகுதியான நிர்வாகிகள் என்ற அடிப்படையை மூலையில் கடாசிவிட்டு, எல்லா நியமனங்களிலும் லஞ்சம் புகுந்து விளையாடுவதுதான் இத்தகைய முறைகேட்டுக்குக் காரணம். துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், பல்கலைக்கழகப் பதவிகளில் நியமனம் என எல்லா நியமனங்களிலும் லஞ்சம் புகுந்து விளையாடுவது யாருக்கும் தெரியாத ரகசியமில்லை. பல்கலைக்கழக நியமனங்கள் குறித்துத் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் எழுவதும், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவதுமே இதற்கு சாட்சி.

லஞ்ச வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். கல்வித்துறையின் அடி ஆழம் வரை ஊழல் ஊடுருவியுள்ளதையே இந்த வாக்குமூலம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அத்தனைபேரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த அசிங்கங்களிலிருந்து நம் கல்வித்துறையும் சமூகமும் மீண்டு வரவேண்டுமென்றால், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, தமிழகத்தில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நேர்மையான நியமனம் வேண்டும். தவறுகளின் அடிப்படைகளைக் கண்டுபிடிக்கச் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைப்பதோடு, பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து, தவறு செய்தவர்களைத் தப்ப விடாமல் தண்டிக்க வேண்டும்.

இது ஏதோ வழக்கமான ஊழல் செய்தி என்று அசட்டை காட்டாமல், மாணவர்களின் எதிர்காலம், கல்வித்துறையின் எதிர்காலம், தமிழ்நாட்டின் எதிர்காலம் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்கிற உணர்வுடன் அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும்போதே, ‘கசடறக் கற்க’ என்றான் வள்ளுவன். ஆனால், கல்வித்துறையிலேயே கசடுகள் இருப்பதை நாம் அனுமதிக்கலாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்