வீரயுக நாயகன் வேள்பாரி - 69

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

ப்பறைக்குச் சென்ற மூவரும் எவ்வியூர் வந்துசேர்ந்தனர். அவர்கள் வந்தபொழுது குலநாகினிகளைத்தவிர ஊரில் யாருமில்லை. எல்லோரும் நீலன், மயிலா மணவிழாவிற்காக வேட்டுவன் பாறைக்குச் சென்றுவிட்டனர். ஒருநாள் ஓய்விற்குப்பின் மூவரின் குதிரைகளும் எவ்வியூரிலிருந்து வேட்டுவன் பாறையை நோக்கிப் புறப்பட்டன. நீலன், மயிலா மணவிழா மகிழ்வு, பயணத்தின் வேகத்தைக் கூட்டியபடியே இருந்தது.

வேட்டுவன் பாறையில் ஆட்கள் நிரம்பி வழிந்தனர். மணவிழா உற்சாகம் களைகட்டியிருந்தது. எவ்வியூர் முழுமையாக வந்துசேர்ந்திருந்தது. பல ஊர்களிலிருந்தும் ஊர்ப்பெரியவர்கள் வந்திருந்தனர். கள்ளும் கனியுமாக மணவிருந்து தொடங்கிவிட்டது. மான்தசையைச் சுட்டுக்கருக்கும் வாசம் காடெங்கும் வீசிக்கொண்டிருந்தது. வெற்றிலைகள் வகைபிரித்து வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

புனுகு மணமும் நாகப்பூ மணமும் மணவிழாவுக்கே உரியன. புன்னைப்பூவும் பாதிரிப்பூவும் ஆலம்பனையின் ஓலைக்கொட்டானில் குவிந்துகிடக்க வந்தவர்கள் எல்லாம் மனம்மயங்கி, கனியுண்டு கள்ளருந்தினர். மான்தசையைக் கடித்திழுத்து உண்டுவிட்டு அதனைச் செமித்து முடிக்க வெற்றிலை தின்றனர். மலைமக்களின் மணவிழா என்பது எல்லையில்லாத இன்பத்தை உணரவும் உணர்த்தவுமான விழா. உணவின் வகைகளும் ஆட்டபாட்டத்தின் வகைகளும் சொல்லிமாளாது.

மலையெங்குமிருந்து சாரிசாரியாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். வெவ்வேறு வகையான இசைக்கருவிகளின் ஓசைகள் அவர்களுடன் வந்துகொண்டிருந்தன. இசைக்கப்படும் ஓசையை வைத்தே வருவது எந்த ஊர்க்காரர்கள் எனப் பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவர்களின் கொண்டாட்டம் தனித்திருந்தது. காலம்பனின் மூத்த மகன் கொற்றன். அவன்தான் எவ்வியூர் சிறுவர்களின் கூட்டத்துக்குத் தலைவனாக இருந்தான். அவன் எவ்வியூர் வந்த புதிதில் மற்ற சிறுவர்கள் அவனோடு பழகத் தயங்கினர். ஏனெனில் அவனது உருவ அமைப்பு அவனைச் சிறுவனென்று ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையைக் கொண்டிருந்தது. நாளடைவில் எல்லாம் சரியானது. விளையாட்டில் அவனை யாரும் வெல்ல முடியாதது மட்டுமல்ல; எவ்வியூர் சிறுவர்களுக்குத் தெரியாத புதுவிளையாட்டுகள் நிறைய அவனுக்குத் தெரிந்திருந்தன. காட்டெருமை விளையாட்டினை அவன்தான் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தான். ஆட்டபாட்டத்திலும் இணையற்றவனாக இருந்தான். எனவே எவ்வியூர் சிறுவர்கள் எந்நேரமும் அவனுடனே இருந்தனர்.

அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன் ஆகிய எல்லோரும் இப்பொழுது சிறுவர்களாவும் இல்லாமல் இளைஞர்களோடும் சேரமுடியாமல் நடுவில் நின்று விழித்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் எல்லாம் தங்களின் இணையைப்பற்றிப் பேசிச்சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர். இவர்கள் அருகிற்போனால் சிறுவர்களோடு விளையாடச்சொல்லி விரட்டிவிடுகிறார்கள். சிறுவர்களிடம் போனால் அவர்கள் எல்லாம் கொற்றனின் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்களுடன் நின்று பேசக்கூட ஆயத்தமாக இல்லை. விளையாட்டுகள் அவ்வளவு மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்