சரிகமபதநி டைரி - 2017 | Music Concerts in chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/01/2018)

சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: ப.சரவணக்குமார், க.பாலாஜி

ராகவேந்திரா  மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி... அதே நாளில் வாணிமகாலில் ராகவேந்திரரை தரிசித்த ரசிகர்கள்! முன்னது ஆன்மிக அரசியல்; பின்னது ஆன்மிக ஹரிகதா கச்சேரி!

தியாக பிரம்ம கான சபாவுக்காக `ஸ்ரீராகவேந்திர வைபவம்’ என்ற தலைப்பில் ஹரிகதை - கம் - கச்சேரி நிகழ்த்தினார் விசாகா ஹரி. ராகவேந்திரரின் குடும்பமே  வீணைப் பரம்பரை என்பதால், வயலின், மிருதங்கம், கடத்துடன் மேடையில் வீணையும் உண்டு. முடிகொண்டான் ரமேஷ். இவரையும், வயலின் வாசித்த திருவனந்தபுரம் சம்பத்தையும் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் கணக்கில் கண்களாலேயே டிரில் வாங்கிக்கொண்டிருந்தார் விசாகா!

`துங்கா தீர விராஜம்...’ என்ற யமுனா கல்யாணி ராகப் பாடலைப் பாடிவிட்டு மகானின் வாழ்க்கை சரிதம் ஆரம்பித்தார். துறவுக்கு முன்னர் வேங்கடநாதன் என்ற பெயர் கொண்டவராக இருந்திருக்கிறார் ராகவேந்திர சுவாமிகள். இவர் சகோதரியின் மகன் நாராயணாச்சார். இவர் தன் தாய்மாமனின் வாழ்க்கைக் கதையை `ஸ்ரீமத் ராகவேந்திர விஜயம்’ என்ற தலைப்பில் வடமொழியில் எழுதியிருக்கிறார். கதைசொல்லி விசாகா, தான் இதையே அடிப்படையாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.