“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!” | The Casteless Collective: A coming together of rock, rap and gaana - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/01/2018)

“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!”

சக்தி தமிழ்ச்செல்வன், படங்கள்: க.பாலாஜி

மார்கழியில் நடந்தது மக்கள் இசைப் புரட்சி! இதுவரை மரணவீடுகளிலும், குறுக்குச் சந்துகளிலும், ஆடி மாதத் திருவிழாக்களிலும் மட்டுமே ஒலித்த சட்டி மேளம், பறை இசைக்கருவிகளுடன் கோட் சூட் அணிந்த பாடகர்கள் மேடை ஏறிய  அந்த இசை நிகழ்வு சென்னை இதுவரை கண்டிராத மாற்றத்துக்கான முதல் நிகழ்வு!

“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு... அதனாலதாண்டா கொடுக்குறாங்க கோட்டாவுல சீட்டு...

உதவியில்லடா அதன்பேர் உதவியில்லடா... உன் காலடியில் பிழைப்பதெல்லாம் பதவியில்லடா...

கூலிக்கு மாரடிச்ச காலமெல்லாம் போச்சுடா...காலுக்குச் செருப்பு வந்து ரொம்ப நாளு ஆச்சுடா...

மாட்டப் புடிச்சி கட்டி வச்ச கைகளைப் பாரு... இப்ப நோட்டப் புடிச்சி போறோம்டா நாங்களும் ஸ்கூலு...

ஆயிரம் வருஷமாச்சு நிலைமைய மாத்த... நீ இலவசம்னு சொல்லதடா தகாத வார்த்த...

சலுகையில்லாடா... சலுகையில்லாடா... என் உரிமையைத்தான் பறிக்க உனக்கு உரிமையில்லடா...’’

- என அறிவின் வார்த்தைகளில் அறிவும் முத்துவும் பாட, போர்க்குரலாக ஒலித்தது இட ஒதுக்கீட்டுப் பாடல்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக மாற்றத்துக்கான சமத்துவ விதை மனித மனங்களில் ஆழமாக வீசப்படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்படியான ஒரு முயற்சியைத் தங்கள் கானா இசையின் வழியாக விதைத்தது The Casteless Collective இசை நிகழ்ச்சி. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸும் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.
 “சென்னையப் போல ஊரே இல்ல, சென்னைய நம்பி வாடா உள்ள’’ என கானாவின் தாய்வீடான சென்னையை வரவேற்று ஒலித்த முதல் பாடல் சாதாரண இசை நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்துடனேயே தொடங்கியது. ஆனால், போகப்போக பாடல்வரிகளிலும் இசையிலும் அரசியல் அனல் பறந்தது.